சனிபெயர்ச்சி பலன்கள்: 2014
15-12-2014 07:18 PM
Comments - 0       Views - 2292


திருகணித பஞ்சாங்காத்தின்படி ஜய வருடத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்.
 
மார்கழி மாதம் 1ஆம் திகதி (16.12.2014) செவ்வாய்கிழமை, 20.40 நாழிகை அளவில் சனி பகவான் துலாராசியில் இருந்து விருட்சிக ராசிக்கு திருகணித பஞ்சாங்க படி பெயர்ச்சி அடைகிறார்.
 
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பர்களே..! 
 
இதுவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான துலாராசியில் இருந்து வாழ்வில் பல குழப்பங்கள், அவப்பெயர், பணவிரயத்தையும் தந்த சனிபகவான், தற்பொழுது 8ஆம் இடமான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது அஷ்டம சனி காலம் ஆகும். இக்காலத்தில் அநேக தடைகளையும் அவப் பெயர்களையும் உறவினர்கள் இடையே அடிக்கடி கருத்து வேறுப்பாடும் பகையினால் இடமாற்றமும் சட்ட சிக்கல்களும் முன்னைய பகைகள் மீண்டும் வந்து போதலும், மனவிரக்தி, உடல் சோர்வு, கடன் சுமையும், குடும்ப சுமையும், பெற்றோருக்கு கீழ்ப்படியாமையும், அடிக்கடி முடிவுகளை மாற்றுதலும், வார்த்தை பிரயோகத்தால் வேண்டாத பிரச்சினை போன்ற அநேக குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் காலம் இது.
 
பரிகாரம்: சனிக்கிழமை தவறாது நவக்கிரக வழிப்பாடு செய்து வர நன்மை உண்டாகும்.
 
 
 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான துலாராசியில் இருந்து பல்வேறு நன்மையான பலன்களை தந்து கொண்டு இருந்தார். காரிய சித்தி, தனவரவு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் வலுவடைதல், முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி அடைதல். இதுபோன்ற பலன்களை அனுபவித்தீர்கள். தற்பொழுது சனி பகவான் 7ஆம் இடமான விருட்சிக ராசிக்கு செல்கிறார். இது கண்டக சனி காலமாகும். இது சிறப்பான இடமல்ல. இக்காலத்தில் குடும்பத்தில் பிரச்சினை, வீண் அலைச்சல், பகையுடன் இடமாற்றம், வேண்டாத நண்பர்களால் பகை, அவமரியாதை, பணப் பிரச்சினை அதிகரித்தல், நிம்மதி குறைதல், முயற்சிகள் அனைத்தும் தடைப்படல், திருமணம் தடைப்படுதல் போன்றவை ஏற்படும்.
 
பரிகாரம்: ஞானிகளையும் யோகிகளையும் வணங்கி ஆசிர்வாதம் பெறுவதால் நன்மை உண்டாகும்.
 
 
 
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான துலா ராசியில் இருந்து பலவித பிரச்சினை, இடையூறுகள், கணவன் - மனைவி இடையே பிரிவு, பொருளாதார தடை, உடல் மற்றும் மனசோர்வு  போன்ற பலன்களை தந்த அவர், தற்பொழுது 6ஆம் இடமான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இக்காலத்தில் சகல சௌபாக்கியத்துடன் கூடிய வாழ்க்கை ஏற்படும். நல்ல பணப்புழக்கமும் செய்யும்  காரியத்தில் சிறப்பான வெற்றி மிகுந்த உற்சாகத்துடன் செயல்படல், எதிரிகளின் தொல்லை குறையும், குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும், திருமண சுபகாரியங்களின் தடை விலகும். மேலும், சனி பகவானின் 10ஆம் இடமான பார்வையும் சிறப்பாக அமைவதால் பொருளாதாரத்தில் மிகவும் உச்ச நிலையை அடையலாம்.
 
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளை வணங்கி வர  நன்மை உண்டாகும்.
 
 
 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
கருணை உள்ளமும் கண்டிப்பும் மிகுந்த கடக ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனி பகவான் 4ஆம் இடமான துலாராசியில் இருந்து அநேக அலைச்சல், நிம்மதி குறைதல், தாயின் உடல் நிலை பாதிப்பு, வேண்டாத மருத்துவ செலவு, சில நிகழ்வுகள் மனதை அதிகமாக பாதித்தல் போன்ற நன்மை குறைந்த பலன்களை தந்தார். காரணம் இது அஷ்டம சனி காலமாகும். தற்பொழுது 5ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அஷ்டம சனிகாலம் முடிவு பெற்றதாலும் 5ஆம் இடத்திற்கு சென்றதாலும் 7ஆம் இடப்பார்வை சிறப்பாக உள்ளதாலும் சிரமங்கள் குறைந்தும் ஒரளவு சுப பலன்களும் நடைபெறும். திருமண தடை நீங்கும், சுப செலவுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழில் ஸ்தானத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். ஆரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர், புகழ், அந்தஸ்த்து கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பணச்சுமை குறையும்.
 
பரிகாரம்: விநாயக பெருமானை மனதார பிரார்தனை செய்து வர துன்பம் குறைந்து நன்மை உண்டாகும். 
 
 
 
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
துணிச்சலுக்கும் விடாமுயற்ச்சிக்கும் பெயர் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவான் 3ஆம் இடமான துலா ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும் நல்ல முன்னேற்றத்தையும் எதிர்பாராத நன்மையையும் கொடுத்து கொண்டு இருந்தார், தற்பொழுது 4ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் வீண் விரோதமும் பகையின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு செல்லுதலும் மற்றும் பெற்றோரை பிரிந்து செல்லும் நிலையும் எற்படும். 3ஆம் இடமான பார்வை சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவு, வீண் வாக்குவாதத்தால் வழக்கும் சண்டையும், தொழில் வியாபாரத்தில் பகையை நீங்களே உருவாக்காமல் இருப்பது நன்மையை தரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை அமையாது. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிப்பு அதிகரிக்கும்.
 
பரிகாரம்: காக்கைக்கு எள்சாதம் வைப்பதுடன் சனிக்கிழமை தோறும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவை தானமாக வழங்கி வர இப்பாதிப்பு குறையும்.
 
 
 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கண்ணியமும் கலை ரசனையும் மிகுந்த கன்னி ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவான் 2ஆம் இடமான துலா ராசியில் இருந்;து  அளவிற்கு அதிகமான பிரச்சினை, குழப்பம், பணவரவில் தடை, நிம்மதியின்மை, குடும்பம் பிரியும் அளவிற்கான பிரச்சினை, செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வி அடைதல் போன்ற பிரச்சினைகளை தந்த அவர், தற்பொழுது 3ஆம் இடமான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் இதுவரை இருந்த துன்பம் குறையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தன தான்ய விருத்தியும், கணவன் - மனைவி அன்யோன்யமும் வீடு - மனை வாங்கும் யோகமும், அரசாங்க வழி உதவியும், பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியும், சேமிப்பு அதிகரித்தலும், மாணவர்கள் எதிலும் முதலாகவும் முன்னோடியாகவும் திகழ்தல், மகிச்சியான குடும்ப வாழ்கையும் ஏற்படும்.
 
பரிகாரம்: ஒவ்வொறு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவருக்கு தயிர்சாதம் படைத்து வணங்கி வர துன்பம் விலகும்.
 
 
 
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!
 
இதுவரை தனது ராசியில் இருந்த சனிபகவான், கடந்த சில ஆண்டுகளாக அதிகமான சிக்கல்,  குழப்பம், பிரச்சினை, பணமுடக்கம், அலைச்சல், வேலைப்பளு, உறவினர் வழியில் தொல்லை, மனச்சோர்வு போன்ற பலன்களை தந்தார். தற்பொழுது 2ஆம் இடமான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது சிறப்பான இடமல்ல. இன்னும் ஏழரை சனியின் கடைசி இரண்டரை வருடம் இருப்பதால் குடும்பத்தில் பிரச்சினை, பொருள் களவு போதல், பண இழப்பு, நிம்மதி குறைவு போன்ற துன்பம் இருந்தாலும் சனிபகவான், தான் நின்ற ராசியில் இருந்து 10ஆம் இடபார்வை உங்களுக்கு கிடைப்பதால் திடீர் என நற்பலன்கள் கிடைக்க வாய்புண்டு. திருமணம் தாமதம் ஆனாலும் அது நன்மையான முடிவாக மாறும். வீண் விவாதத்தை தவிர்க்கவும். மாணவர்கள் கடினமாக முயற்ச்சி செய்தால் மட்டுமே கல்வியில் மேன்மை நிலையை அடையலாம்.
 
பரிகாரம்: சனிக்கிழமை நரசிம்மரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
 
 
 
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவானால் நீங்கள் எண்ணற்ற இடையுறுகளையும், பொருள்நாசம், வீண் அலைச்சல், மணஉழைச்சல், அனைத்தும் தடைப்படுதல் போன்ற பலன்களை அனுபவித்து இருக்கலாம். தற்பொழுது சனிபகவான் 12ஆம் இடமான துலா ராசியில் இருந்து உங்கள் ராசிக்கே பெயர்ச்சி அடைகிறார். இது ஏழரை சனியின் உச்ச கட்டகாலம் ஆகும். 3 ஆண்டு காலம் உடல் நிலை பாதிப்பை எதிர்நோக்க வேண்டி உள்ளது. உறவினர்களால் வீண் சங்கடங்களும் விரோதமும் ஏற்படும். 3ஆம் இடபார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் சிறு பொருளாதார வளர்ச்சியும் தொழிலில் விருத்தியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருமணம் நடைபெறுதலும் உண்டாகும். ஏழரை சனி காலம் என்பதால் அதிகபடியான முதலீட்டை தவிர்க்கவும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பான காலம் இது. 
 
பரிகாரம்: சனிக்கிழமை நவகிரக வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் கடைப்பிடித்து வர நன்மை உண்டாகும்.
 
 
 
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இதுவரை 11ஆம் இடமான துலா ராசியில் இருந்து சனி பகவான் எதிபாராத விதமான முன்னேற்றத்தையும் பொன், பொருள் சேர்க்கையும் மகிழ்ச்சியான வாழ்க்கை போன்ற பலன்களை பெற்று தந்தார். தற்போது 12ஆம் இடமான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. உங்கள் மீது சனி பகவான் பார்வை பட்டு ஏழரை சனி காலமாக இருப்பதால் அதிகமான இடையூறுகளும் எதிரிகளால் பகையும் வியாபாரத்தில் நஷ்டமும் பணமுடக்கமும் தேவை அற்ற செலவு, சொத்துக்கள் சேதமடைதல், கெட்ட சகவாசங்களால் பிரச்சினையும் குடும்பத்தார் இடையே அடிக்கடி கருத்து வேறுப்பாடும் உண்டாகும். நிம்மதி குறையும், ஆனாலும் திருமணம் போன்ற சுப காரியம் நடைபெறும். 
 
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ராமனை வழிப்பாடு செய்து வர துன்பம் விலகும். 
 
 
 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் மகர ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனிபகவான் 10ஆம் இடமான துலா ராசியில் இருந்து கடத்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதை, தொழிலில் மந்தநிலை, கௌரவம் - சொல்வாக்கு கெடுதல், வேலையில் முன்னேற்றம் இன்மை, கொண்ட பலன்களை அனுபவித்து சில மாதங்கள் மட்டும் கேதுவினாலும் குருபகவானலும் காப்பாற்றப்பட்டு இருப்பீர்கள். தற்பொழுது 11ஆம் இடமான விருச்சிகத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இது அதிர்ஷ்டமான காலமாகும். பெண்களால் முன்னோற்றமும் பொன் - பொருள் சேர்க்கையும் நல்ல அந்தஸ்தும் பொருளாதார முன்னேற்றமும், செய்யும் செயலில் வெற்றியும், கணவன் - மனைவி இடையே அன்னியோன்யமும், வெளிநாட்டு தொடர்பால் தொழில் முன்னேற்றமும் திருமணம் போன்ற சுபகாரியமும், குழந்தை பேறும், புதிய வீடு சொத்துக்கள் அமைவதும் நடைப்பெறும். 
 
பரிகாரம்: சிந்திர புத்திர நாயனாரை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வர நன்மை உண்டாகும்.
 
 
 
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பொறுமையின் சிகரமாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இதுவரை சனி பகவான் 9ஆம் இடமாகிய துலா ராசியில் இருந்து பல தோல்விகளை தந்து இருப்பார். பகைவர்களால் தோல்விகளும் சில எதிரிகளால் துன்பமும் உறவினர்கள், நண்பர்களால் கருத்து வேறுப்பாடும் கொண்ட பலன்களை தந்த சனி பகவான், தற்பொழுது 10ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது சிறப்பான பலன்களை தரக்கூடிய இடம் அல்ல. ஏற்கெனவே இருந்த செல்வாக்கின் பின்னடைவும் தொழிலில் பாதிப்பும் உடல் உபாதைகளும் வேண்டாத செலவுகள் உள்ள தாலும் முயற்சிகள் தடைப்படுதலும், திருமண தடை ஏற்படுதலும் மேல் அதிகாரிகளால் துன்பமும், சொத்துக்களால் பாதிப்பும், குடும்பத்தில் ஒற்றுமை இன்மையும், நிம்மதி குறைதல் போன்ற நன்மையற்ற பலன்கள் உள்ளன. 
 
பரிகாரம்: அமாவாசை அன்று இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்து ஞானிகளையும் சித்தர்களையும் வணங்கி வருவதன் மூலம் துன்பம் விலகும். 
 
 
 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
 
சொல்லிலும் செயலிலும் தனிமுத்திரை பதிக்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இதுவரை 8ஆம் இடமாகிய துலாராசியில் இருந்த சனி பகவான் பல இடர்பாடுகளையும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளையும் உறவினர்களால் பகையும் முயற்ச்சிகள் தடைப்படுதலும், நினைத்த காரியத்தை செய்து முடிக்காமையும் அதிக மருத்துவ செலவு, மன உழிச்சல், நிம்மதி குறைவு போன்ற பலன்களை தந்தார். தற்பொழுது 9ஆம் இடமாகிய விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் முன்பு இருந்த கெட்ட பலன்களைவிட கொஞ்சம் முன்னேற்றத்தை தரும். பிறரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ நேரிடும். .எதிரிகளின் இடையூறுகளை எதிர்கொள்ளும் சக்தி உருவாகும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் தீமைகள் அதிகமாக நடந்தாலும் பெரிதான பாதிப்பின்றி காப்பாற்றப்படுவீர்கள். மாணவர்கள் கடினமாக முயற்சித்தால் கல்வியில் முன்னேறலாம். அத்தோடு மேற்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு .திருமண தடை நீங்கும்.
 
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்னை தீபம் ஏற்றி வணங்கி வர நன்மை உண்டாகும்.
"சனிபெயர்ச்சி பலன்கள்: 2014" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty