இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க டுபாயில் முன்னேற்ற நடவடிக்கை
08-05-2015 01:12 PM
Comments - 0       Views - 526

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்திச்சபை, டுபாயிலுள்ள இலங்கை பிரதித் தூதுவராலயத்துடன் இணைந்து பல்வேறு சுற்றுலாப் பயணத்துறை ஊக்குவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவதாக டுபாயிலுள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம்.அப்துல் றஹீம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை டுபாய் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அரபு சுற்றுலாக் கண்காட்சியில் இலங்கையை சேர்ந்த 56 கம்பனிகள், சுற்றுலா அபிவிருத்திச் சபை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மிஹின்லங்கா மற்றும் இலங்கை தேயிலைச்சபைகள் ஆகியன பங்கேற்றன.

கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்ட இலங்கைக்கான காட்சிக்கூடத்தை டுபாயிலுள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம்.அப்துல் றஹீம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் காட்சிக்கூடத்தை இலங்கை விமானப்போக்குவரத்து அமைச்சர் ரெஜினோல்ட் குரே திறந்து வைத்தார்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக இலங்கை காட்சிக்கூடத்துக்கு விசேடமாக வருகை தந்து இலங்கையிலிருந்து  வந்த சுற்றுலாத்துறை கம்பனிகளை சந்தித்து ஊக்குவித்ததோடு, இலங்கை பிரதித் தூதுவர் அப்துல் றஹீம் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்திகளை கண்டுவருவதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் அதற்கான வாய்ப்புக்கள் என்பன கிடைத்துள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம்.அப்துல் றஹீம் குறிப்பிட்டார்.

கண்ணை கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை காட்சிக்கூடம் வெளிநாட்டவர், அரேபியர் என பலரையும் கவர்ந்ததோடு கோடைகால விடுமுறைக்காக பலரும் இலங்கை வர விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

"இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க டுபாயில் முன்னேற்ற நடவடிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty