2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோல்வியடைந்த எல்லோரும் தகுதியற்றவர்கள் அல்ல

Thipaan   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் களத்தில், இரண்டு விடயங்கள்  சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, சில அரசியல் கட்சிகள் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமித்தமை. இரண்டாவது தேசிய அரசாங்கம் என்ற பெயரில் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்குதலாகும்.

தேர்தலில் ஆசனங்களைப் பெற தகுதி பெற்ற சகல கட்சிகளும், அத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமித்துள்ளன. தாம் தோல்வியடைந்த எவரையும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் முடிந்தவுடன் கூறியிருந்தார். ஆனால், அதுவும் பொய்யாக்கப்பட்டுள்ளது.ந.ஐ.தே.முவின் கீழ் போட்டியிட்ட ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ந.ஐ.தே.மு மூலம் தமக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்கு, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எச்.எம். நவவியை நியமித்திருக்கிறது. படித்தவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கி ஏனைய கட்சிகளை விட சிறந்த தேசியப் பட்டியல் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்திருந்தது. அக் கட்சியும் தமக்கு கிடைத்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றுக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியை நியமித்துள்ளது.

நவவியை நியமத்தமை மக்கள் காங்கிரஸுக்குள் பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியிருக்கிறது. அக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த வை.எல்.எஸ். ஹமீத்- தாமே அந்த ஆசனத்துக்கு தகுதியானவர் என கட்சித் தலைவர் பதியுதீனை பகிரங்கமாக விமர்சித்ததன் விளைவாக அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, ஐ.தே.க சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரோஸி சேனாநாயக்கவை தேசியப் பட்டியல் மூலம் எம.;பியாக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவுக்குள் ஒரு கோஷம் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்களில் ஒருவரான சோமவீர சந்திரசிறி தமக்கு

தேசியப் பட்டியல் ஆசனமொன்றை வழங்கவில்லை என்று ஐ.ம.சு.கூவுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பது தொடர்பாக சில சமூக நிறுவனங்களும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. தோல்வியடைந்தவர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் அதனை எதிர்க்கிறார்கள்.

இந்த விமர்சனங்கள் உண்மையிலேயே யதார்த்தத்துக்கு முரணானவையே. தோல்வியடைந்தவர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மக்கள் வேட்பாளர்களின் தகைமைகள், திறமைகள் ஆகியவற்றைப் பற்றி அறிவுபூர்வமாக சிந்தித்துத் தான் வாக்களிக்கிறார்களா என்பது இங்கு எழும் கேள்வியாகும். மக்கள் அவ்வாறு சிந்தித்து வாக்களிப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

உதாரணமாக, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர வெற்றி பெற்றிருக்கிறார், ரோஸி சேனாநாயக்க தோல்வியடைந்திருக்கிறார். இவர்களில் இருவரில் எவர் அறிவாற்றல் உள்ளவர், திறமையானவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட முதன் முறையாக தேர்தலொன்றில் போட்டியிட்ட பபா என்றழைக்கப்படும் நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி விருப்பு வாக்குகளைப் பெற்றார். அண்மையில், தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றுக்கு வந்த பபா 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் 17ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் என்ன என்று தெரியாமல் திண்டாடினார். மக்களின் தேர்வு இவ்வாறு தான் இருக்கிறது.

இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூவின் கீழ் போட்டியிட்டவர்களில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருக்கும் பிரேமலால் ஜயசேகரவே. அவர், ஒன்றரை லட்சம் விருப்பு வாக்குகளைப் பெறும் போது முன்னாள் மூத்த அமைச்சர் ஜோன் செனெவிரத்ன 90 ஆயிரம் விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

இவ்வாறு தான் மக்கள் விருப்பு வாக்குகளை வழங்குகிறார்கள். அந்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தோல்வியடைந்தால் அது தகுதியின்மையாக கருதுவது யதார்த்தபூர்வமான முடிவல்ல. ரோஸியின் தோல்வி அதனை நன்றாக எடுத்துக் காட்டுகிறது.

விருப்பு வாக்குகளைப் பெற மாவட்டம் முழுவதிலும் பிரசார வேலைகளில் ஈடுபட ஒருவரிடம் பணம் இருக்க வேண்டும். சண்டித்தனம் இருக்க வேண்டும். எனவே, விருப்பு வாக்குகளின் அடிப்படையிலான தோல்வியை தகுதியின்மையாக கருத முடியாது.

விருப்பு வாக்கு முறையினால் தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதனாலேயே அந்த முறையை மாற்றி அமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட இருந்தன. விருப்பு வாக்கு முறையை இரத்துச் செய்வதே அந்த சீர்திருத்தங்களின் அடிப்படை நோக்கமாகியது. அவ்வாறாயின், அந்த விருப்பு வாக்கு முறையை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்களின் தகைமையை நிர்ணயிப்பது முறையல்ல. அதாவது விருப்பு வாக்குகளைக் குறைவாகப் பெற்ற வேட்பாளர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறுவதும் எப்போதும் சரியல்ல.

அதேபோல், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு தேசியப் பட்டியலில் உள்ளவர்களே தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும் சரியான வாதமல்ல. ஏனெனில், பொதுவாக எந்தவொரு கட்சியும் சிறந்தவர்களை மட்டுமே தேசியப் பட்டியலில் உள்ளடக்குவதில்லை. இம்முறை, மக்கள் விடுதலை முன்னணி மட்டும் சிறந்தவொரு பட்டியலை முன்வைத்திருந்தது. சில கட்சிகள் கடமைக்கு ஏதோ ஒரு பட்டியலை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கின்றன. அக் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் மூலம் ஓரிரு ஆசனங்கள் கிடைத்தாலும் அவற்றுக்கு பட்டியலில் உள்ளவர்கள் நியமிக்கப்படப் போவதுமில்லை.

தேசியப் பட்டியல் மூலம் ஒரு கட்சிக்குக் கிடைக்கும் ஆசனங்களுக்கு தோல்வியடைந்தவர்கள் நியமிக்கக் கூடாது என்றால், அவர்கள் தகுதியற்றவர்கள் என்றால், அந்த வாதத்தின் படி இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள், போட்டியிட்டு வெல்லக் கூடியவர்களா? அவர்கள் வெற்றி பெறாவிட்டால் அவர்களும் தகுதியற்றவர்கள் தானே?

உண்மை என்னவென்றால், போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடையேயும் தோல்வியடைந்தோரிடையேயும் தேசியப் பட்டியல்களிலும் நாடாளுமன்றம் செல்லத் தகுதியுள்ளவர்கள் இருப்பதைப் போலவே சிறைக்கு அனுப்பப்படக்கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பதே. எனவே, தோல்வியடைந்தவர்கள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிப்பது பிழையென்றோ அல்லது சரியென்றோ எடுத்த எடுப்பில் கூறுவது பிழையாகும்.

தோல்வியடைந்த கட்சிகளை அரசாங்கத்தில் சேர்த்துக்கொண்டு, அக் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதும் இது போன்றே சிக்கலான விடயமாகும். வெற்றி பெற்றது ஒரே ஒரு கட்சி மட்டுமே. மற்றைய சகல கட்சிகளும் தோல்வியடைந்தவையே. அந்த வகையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் அரசாங்கத்தில் சேர்ந்தாலும் தோல்வியடைந்த கட்சிகள் அரசாங்கத்தில் சேர்ந்ததாக சிலர் வாதிடலாம்.

ஆனால், ம.வி.முவோ தமிழ்க் கூட்டமைப்போ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் தேர்தலில் போட்டியிடவில்லை. அவை எதிர்ப்பார்த்த அளவு ஆசனங்களை பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இம்முறை மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வராமல் பார்த்துக் கொள்வதே அவற்றின் பிரதான நோக்கமாக இருந்தது. அது நிறைவேறியது. அந்தவகையில் அக் கட்சிகள் எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் அரசியல் ரீதியாக வெற்றி பெற்ற கட்சிகளாக கருத முடியும்.

அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐ.ம.சு.கூ ஜனாதிபதிக்கும் ந.ஐ.தே.முவுக்கும் எதிராக அவதூறுகளைப் பொழிந்த வண்ணம் இனவாதத்தை தூண்டியவண்ணம் தேர்தலின் போது நடந்து கொண்டமை மறந்து விட முடியாது.

ஆயினும் ஐ.ம.சு.கூவை எதிர்க்கட்சிக்கு தள்ளிவிட்டு அரசாங்கத்தை நடத்த பிரதமரால் முடியாது. ந.ஐ.தே.முவுக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் இல்லை. தமிழ் கூட்டமைப்பும் ம.வி.முவும் அமைச்சரவையில் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருவதில்லை. அந்த நிலையில், அவர்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்க முன்வரக்கூடுமாயினும் அது அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு ஆபத்தானதாகும்.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை பெற ஆசையாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெற்றால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தீவிரவாதிகளும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கூட்டமைப்பைத் துரோகிகளாக சித்திரிக்கலாம்.

அதேபோல், தமிழ்க் கூட்;டமைப்புடனான கூட்டரசாங்கமொன்றை அமைத்தால், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது தெற்கே வாழும் சிங்கள தீவிர போக்குடையோர், குறிப்பாக மஹிந்த ஆதரவாளர்களும் விமல் வீரவன்சவின் ஆட்களும் கம்மன்பிலவின் ஆட்களும் ந.ஐ.தே.முவுக்கு எதிராக அதனைப் பாவிக்கலாம். அது, அத் தேர்தல்களின் போது ஐ.தே.கவை பாதிக்கும்.

எனவே, பிரதமர் ஐ.ம.சு.கூவை ஆட்சி அமைப்பதில் சேர்த்துக்கொள்ள நினைப்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வசதியாகவே இருக்கும். ஏனெனில், ஸ்ரீ.ல.சு.கவினதும் ஐ.ம.சு.கூ.வினதும் தலைவராக இருந்த போதிலும் அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே நினைக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியே பிரதானமாக அவரை ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்திய கட்சி. பொதுத் தேர்தலின் போதும் தாம் தலைமை தாங்கும் ஐ.ம.சு.கூ தோல்வியடையும் வகையிலேயே அவர் செயற்பட்டார். எனவே, இப்போது தாம் தலைமை தாங்கும் கட்சியை எதிர்க்கட்சியில் அமர்த்திவிட்டு பிரதமரின் அரசாங்கத்தை ஆதரித்து நடவடிக்கை எடுப்பதானது அவருக்கு மீண்டும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் நிலைமையாகும். ஐ.ம.சு.கூவும் ஐ.தே.கவும் ஒரே அணியில் இருந்தால், அவருக்கு தமது அலுவல்களைச் செய்ய வசதியாகவே இருக்கும். அது மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்பது வேறு விடயம்.

ஆனால், தேர்தலின் போது ஊழல் பேர்வழிகள் வெற்றி பெறுவது போலவே இந்த கூட்டரசாங்கத் திட்டத்தின் மூலமும் ஊழல் பேர்வழிகள் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம். அதற்காக ஆட்சியில் அமரும் கட்சிகளிடையே பகிரங்க அல்லது இரகசிய அல்லது பிரகடனப்படுத்தப்படாத இணக்கப்பாடொன்றை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே, மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட சில குற்றங்கள் தொடர்பாக இரு சாராரும் ஒருவருக்கொருவர் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மத்திய வங்கி முறிப் பகிர்வு தொடர்பாக, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றை ஒரு சாரார் வாபஸ் பெற்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றை மற்றைய சாரார் வாபஸ் பெற்றுள்ளனர்.

அதேவேளை, மஹிந்தவின் அணியில் இருந்த முன்னாள் ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சரணாகதி அடைந்ததாகக் காட்டிக் கொள்ளவே அவருக்கு எதிராகவும் ஏற்கெனவே பின்வாங்கிவிட்ட ஸ்ரீ.ல.சு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியர்தர்ஷன யாப்பாவுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

மஹிந்த அணியில் இருந்தவர்களும் இப்போது அமைச்சுப் பதவிகளில் கண்வைத்துக் கொண்டு, நல்ல பிள்ளைகளாகி வருகிறார்கள். இவர்களிடையே இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சிலவேளை கூட்டரசாங்கம் அதிர்வு காணலாம். எனவே, சிலவேளை ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் இத்தோடு படிப்படிhக நின்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அரசாங்கத்தில் உள்ள முக்கிய நபர்களும் தேர்தலுக்காக கோடிக் கணக்கில் செலவழித்துள்ளார்கள். ஒரு கோடி ரூபாயாவது செலவழிக்காத எவருமே இல்லை எனத் தெரியவருகிறது. இந்த மா பெரும் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு தேர்தல் கணகாணிப்பாளர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு கோடிக் கணக்கு செலவழித்தவர்கள் அந்தப் பணத்தை இந்தப் பதவிக் காலத்திலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். செலவழித்த தொகையை மட்டும் சம்பாதித்துக் கொள்வதாக இருந்தால் தேர்தலில் போட்டியிடாமலே இருந்திருக்கலாம். சம்பாதிக்க வழி முறைகள் ஏற்படுத்திக் கொண்டால் செலவழித்த தொகையை மட்டும் சம்பாதித்துக் கொள்ளும் மடையர்கள் உலகில் இல்லை.

எனவே, இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும் காலப்போக்கில் பாரியளவில் திருட முற்படுவார்கள். முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களின் ஊழல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டு அவ்வாறு சம்பாதிக்க முடியாது. ஏனெனில், எப்போதோ ஒரு நாள் தாமும் தோல்வியடைந்தால் தமது கதியும் அதே கதியாகிவிடும். இந்தக் காரணத்தினாலும் கூட்டரசாங்கம் நாட்டுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .