2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

Thipaan   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது.

ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல்.

இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப்; பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக பிரதமர் பதவியில் இருக்கிறார்.

ஆனால், அவர் முதல் முறையாக வெளிநாடு ஒன்றுக்கான அதிகாரபூர்வ பயணத்தை இப்போது தான் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார்.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து, அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால், வெறும் 47 ஆசனங்களை மட்டும் கொண்டிருந்தது ஐ.தே.க.

அப்படியிருக்க, பெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் பிரதமரை நீக்கி விட்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இது முறையற்றது என்பதை உலகம் அறியும். ஏன், மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் கூட அறிவர்.

இவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாடு அது. அதனை நிறைவேற்றித் தனது நன்றிக் கடனைச் செலுத்தினார் மைத்திரிபால சிறிசேன.

மஹிந்த ராஜபகஷ்வை அதிகாரத்தில் இருந்து அகற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவின் அந்த நியமனம் தவிர்க்க முடியாத தேவையாக இருந்தது.

அதனால், இந்தியாவோ, அமெரிக்காவோ, பிரித்தானியாவோ எதுவும் பேசவில்லை.

ஏன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்த சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட வாய்திறக்கவில்லை.

தாம் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்ற குற்றவுணர்ச்சி காரணமாகவோ, அல்லது, இவ்வாறு குறுக்கு வழியில் பிரதமரானவர் என்பதால் தனக்கு வெளிநாடுகளில் அவமதிப்பு நேரலாம் என்ற அச்சம் காரணமாகவோ, எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்தையும் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரதமராகப் பதவியேற்றதையடுத்து, ஒருமுறை மட்டும் அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அது அதிகாரபூர்வமற்ற பயணம். கேரளாவில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக ரணில் குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இப்போது அவர் முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியைப் பிடித்திருக்கிறார்.

அதையடுத்து. வழக்கமாக இலங்கையின் அரசியல் தலைவர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில், முதல் வெளிநாட்டுப் பயணத்தை ரணில் இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் பிரதமர் என்ற வகையில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர், ரணில் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரபூர்வ பயணம் இது.

இந்தப் பயணத்தில், இருதரப்பு உறவுகள், வர்த்தக, பொருளாதார விருத்தி, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு அப்பால், இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தான்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தான் ரணில், புதுடெல்லி சென்றிருந்தார்.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றே அமைக்கப்பட வேண்டும், என்றும் அதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.

அது, இந்தியாவின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட செவ்வியின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்.

அதிகாரபூர்வமாக அத்தகைய எந்தக் கோரிக்கையாவது இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

அதேவேளை, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தி, இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியமானது.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக ஜெனீவாவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால், ஜெனீவாவில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெறும் சூழல், 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் முற்றாகவே இருக்கவில்லை.

எனினும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்ததால் மட்டும், ஜெனீவாவில் இந்தியா நடுநிலை வகித்தது.

இம்முறை இந்தியாவின் ஆதரவைப் பெறுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைகிறது.

இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அணி திரட்டுவதன் மூலம், இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திர பலத்தை வெளிக்காட்ட எத்தனிக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், ஜெனீவாவில் தோல்வியுற்ற நாடாகவே இலங்கை இருந்து வந்தது.

அந்த நிலையை மாற்றியமைப்பதன் மூலம், புதிய அரசாங்கம் சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் தனது நன்மதிப்பை மேலும் உயர்த்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் ஆதரவும் அனுசரணையும் மிக அவசியம்.

அதனை மனதில் கொண்டே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதேவேளை, சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பை, புதுடெல்லியிடம் முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, அதற்கான இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்தேயிருக்கும்.

ஆனாலும், அவர்களால் இத்தகையதொரு கோரிக்கையை விடுக்காமல் தவிர்த்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அது அவர்களின் கடப்பாடு- பொறுப்பு.

அவ்வாறாயின், இம்முறை ஜெனீவாவில், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையும்?

நிச்சயமாக இந்தியா சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அதனை இந்தியா கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போதே தெளிவாகக் கூறிவிட்டது.

சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை.

அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி, காஷ்மீரில் இந்தியப் படைகளின் மீறல்கள் குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கிறது.

தனது அயல் நாடான- வலுவான நட்புறவையும் நெருக்கத்தையும் கொண்ட இலங்கையில், சர்வதேச  விசாரணைக்கு இடமளிப்பது இலங்கையுடனான உறவைக் கெடுத்து விடும் என்பது இரண்டாவது காரணம்.

இந்தியா தனது செல்வாக்கைப் பலப்படுத்த வேண்டிய பகுதியில் உள்ள இலங்கையில், சர்வதேச தலையீடுக்கு இடமளிக்க முடியாது என்பது மூன்றாவது காரணம்.

இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் தான் சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மோடி அரசாங்கம் ஆதரிக்காது என்று கூறியிருந்தார் நிருபம் சென்.

ஆனால், நான்காவது காரணம் ஒன்றும் உள்ளது. அது தான், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இறுதிக்கட்டப் போரில், இந்தியாவின் வகிபாகம்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இறுதிக்கட்டப் போரில் இந்தியா மறைமுகமான பங்கை ஆற்றியிருந்ததான குற்றச்சாட்டுகள் உள்ளன.

சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும் நிலை ஏற்பட்டால், அதில் இந்தியாவின் வகிபங்கை- அது பற்றிய இரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிலை ஒன்று ஏற்படலாம் என்ற அச்சமும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை நிருபம் சென் கூறவில்லை.

அவர் அதனைக் கூற மறந்திருப்பார் என்று நினைக்கவில்லை. அதனைக் கூற முற்பட்டால் இந்தியாவின் வகிபங்கை ஏற்றுக் கொண்டதாகி விடும் என்பதால் தான், அவர் அதனை மறைத்திருக்கலாம்.

இத்தகைய கட்டத்தில், இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பவிலலை.

எனவே, உள்ளக விசாரணைக்கு சாதகமாக ஜெனீவாவில் தீர்மானம் ஒன்று கொண்டு வரும் போதும், இந்தியா அதற்குச் சாதகமாக நடந்து கொள்ளுமே தவிர, எதிராகத் திரும்பாது.

ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குச் சென்று கேட்டுக் கொண்டதால் தான் இந்தியா ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ரணிலின் இந்தியப் பயணம் இடம்பெற்றிராது போனாலும் கூட, இதுவே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .