Thipaan / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ப.தெய்வீகன்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த அறிக்கைக்கு, அரசு உயர் மட்டங்கள் முதல் ஆலய பரிபாலன சபைகள் வரை அனைத்து தரப்பினரும் பதில் கூறிவிட்டனர். சந்து பொந்திலுள்ள சகல சங்கங்களும் தங்களது கருத்துக்களை சொல்லிவிட்டன. இந்த அறிக்கைக்கு அரிதாரம் பூசி குஞ்சரம் கட்டி அழகு பார்க்கும் தமிழர் தரப்புக்கள் தாம் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரியாமலேயே தமது ஆதரவு அறிக்கைகளை ஊடகங்களில் விளாசி வருகின்றன.
தமிழர் தரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இந்த அறிக்கைக்கு ஜெனீவாவில் நின்று தனது பலத்த ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மட்டுமே வேண்டும் என்று மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றிய முதலமைச்சர்கூட, வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லாவிட்டாலும் 'இந்த நாள் எமக்கு நல்ல நாள்' என்று குதூகலித்திருக்கிறார்.
இனி இந்த அறிக்கைக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தொடர்பாகத்தான் அனைத்து தரப்பினரினதும் கவனம் திரும்பியுள்ளது.
வெளிவந்திருக்கும் விசாரணை அறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்ட அழுத்தத்தினால், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினருடன் சேர்ந்து பேசி, அவர்களுக்கு நோகாமால் ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்ற முழு நோக்கத்துடன் வெளிவந்துள்ள பத்திரம் ஆகும்.
இந்த அறிக்கை தயாரிப்புக்காக இலங்கை அரசு தரப்போடு ஐ.நா. குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்கள், சந்திப்புக்கள் ஆகியவையெல்லாம் இந்த அறிக்கையின் நடுநிலை தன்மையை எப்பவோ கேள்விக்குள்ளாக்கிவிட்டன.
அத்துடன், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த அறிக்கையை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டமையும் அந்த ஆட்சிமாற்றத்தை கருத்திற்கொண்ட பிரேரணைகள், அறிக்கையில் எதிரொலித்திருப்பதும் இந்த அறிக்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற யதார்த்தத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டது.
இப்படியான பின்னணியில், இந்த அறிக்கையை முற்றுமுழுதாக மனித உரிமைகள் சார்ந்த அறிக்கையாக சகல தரப்புக்களும் முன்னிலைப்படுத்தினாலும், இது அரசியல் ரீதியான அறிக்கை என்ற கோட்பாட்டின் ஊடாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.
இந்த அறிக்கையை வரிக்கு வரி வாசிப்பவர்கள், இதில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை எந்த தங்குதடையுமின்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வரிசைப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
வெறுமனே கண்துடைப்புப் பத்திரங்களாக கடந்த காலங்களில் வெளிவந்த சர்வதேச அறிக்கைகள் அனைத்தையும் தூக்கி சாப்பிடுமளவுக்கு, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் சம்பவங்களை பட்டியற்படுத்தி, அவற்றை இழைத்த அரச படையினரின் கட்டளை மையம் முதல் கணிசமான தரப்பினரையும் அறிக்கையில் கை காட்டியிருக்கிறது ஐ.நா.
தமிழர்கள் தரப்பிலிருந்து பார்க்கும்போது,அவர்களது உரிமை போராட்டம் போருக்கு பின்னரும் தொடரப்படவேண்டிய காரணங்களை அங்கிகரிப்பதற்குரிய காத்திரமான சர்வதேச அங்கிகாரமாக இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களிலிருந்து இனிவரும் காலங்களில் சர்வதேச சமூகமும் இலங்கை அரசு தரப்பும்கூட பின்வாங்க முடியாத அத்திபாரத்தை - உறுத்திபாட்டினை - இந்த அறிக்கையின் உள்ளடக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
முள்ளிவாய்க்காலை தமிழர் பிரச்சினையின் முற்றுப்புள்ளியாக வரைவிலக்கணப்படுத்த முற்பட்ட இலங்கை அரசுக்கு, தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் ஆரம்பப்புள்ளியாக அடியெடுத்துக்கொடுத்திருக்கிறது அனைத்துலக சமூகம்.
இப்படியாக இந்த அறிக்கையை பொதுமைப்படுத்தி, தமிழர்களின் போராட்டம் குறித்த விசாலமான ஆய்விற்கு உட்படுத்துகின்றபோது இது சாதகமாக தெரியலாமே தவிர,
உண்மையில், இந்த அறிக்கையின் மூலம் தமிழர்கள் நீதி, நியாயம் கிடைக்குமா என்ற கேள்விதான் இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
கலப்பு நீதிக்கட்டமைப்பின் ஊடாக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகளின் முன்னிலையில் அறிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்ற கூட்டுப்பொறுப்பு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆட்சிமாற்றம் என்ற ஒற்றைக்காரணத்துக்காக, ஐ.நாவின் அறிக்கையில் அபரிமிதமான தணிவை எதிர்பார்த்த இலங்கை அரசு, தற்போது வெளிவந்த அறிக்கைக்கு சர்வதேச வெளியில் ஒரு பதிலையும் உள்நாட்டில் இன்னொரு பதிலையும் முன்வைக்க முனைவது இந்த அறிக்கை தொடர்பான எதிர்காலத்தை 'நன்றாகவே' எதிர்வுகூறியிருக்கிறது.
இந்த அறிக்கை தொடர்பாக அண்மையில் கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசிய பிரதமர் ரணில் கருத்து தெரிவிக்கும்போது,
'கலப்பு நீதிமன்ற முறை என்ற விடயத்தை ஐ.நா. தெரிவித்துள்ளபோதும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பது இன்னமும் தெளிவில்லாமலேயே உள்ளது.
பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில்கூட இரண்டு வெளிநாட்டு நீதிபதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
அதுபோல, தற்போது சர்வதேச சமூகம் எம்மிடம் தந்திருக்கும் மேளத்தில் எவ்வாறு ஒலி எழுப்புவது என்பது எங்களில்தான் தங்கியிருக்கிறது' என்று கூறியுள்ளார்.
மறுபுறுத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவுக்கும்போது,
'போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரின் பெயர் விவரங்கள் வெளியாவதிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றோம். அவ்வாறு பெயர் விவரங்களை வெளியிடாமல் தனியறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சியே காரணம்' என்று மார்தட்டியிருக்கிறார்.
ஜனாதிபதியின் இந்த கூற்றின் அர்த்தம் என்ன?
குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை படையினரின் பெயர்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரியும். இலங்கை அரசுக்கும் தெரியும் என்பதுதானே?
அவற்றை மூடிமறைத்ததற்கு இப்போதே பெருமைப்பட்டுக்கொள்ளும் ஜனாதிபதி, கலப்பு நீதிமன்று பொறிமுறையின் ஊடாக அம்பலமாகுவதற்கு விரும்புவாரா என்ன?
தம்மாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமது படையினரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வார் என்பதுதான் யதார்த்தம்.
ஆளும் தரப்பிலுள்ள முடிவெடுக்க வல்லவர்களான இவர்களது இந்த 'கருமங்கள்' இவ்வாறு இடம்பெற்றுக்கொண்டிருக்க,
மறுபுறத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் முகாமிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 'ஐ.நா.வின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கவேண்டும்' என்று சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.
இன்னொரு முனையில்,நாட்டின் படையினரை வெளிநாட்டு விசாரணைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் சிறப்புரிமை கொண்ட சட்டதிருத்தம் ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபடுகிறது.
மொத்தத்தில், ஒப்புக்காக சர்வதேச அரங்கில் கலப்பு விசாரணையை ஏற்றுக்கொண்டுவிட்டு உள்நாட்டு எதிர்ப்புக்களை காரணம் காட்டியும் நாடாளுமன்றில் அதற்கு எதிர்ப்புள்ளதாக காண்பித்தும் இந்த பொறிமுறையை நீர்த்துப்போக செய்வதுதான ஆளும் தரப்பினரின் ஓரேநோக்கம் என்பது தெளிவாகவே தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, பிரதமர் ரணிலின் அரசியல் பயணம் ஜனாதிபதி பதவியை குறிவைத்த பாதையில் நகர்ந்துகொண்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
சரிந்துபோக முடியாத சாம்ராஜ்யம் என்று கருதப்பட்ட மஹிந்தவின் அரசாட்சியை, பொன்சேகா ஊடாக முயற்சிசெய்து முடியாது போனாலும் மீண்டும் முயற்சி செய்து மைத்திரி ஊடாக சாதித்து இன்று ஐந்து லட்சம் விருப்பு வாக்குகளைப் பெற்ற அரசியல் வீரராக தெற்கில் வலம்வந்து கொண்டிருக்கிறார் ரணில்.
தனது ஜனாதிபதி கனவுக்கு இந்த பதவிக்காலத்தை விட்டால் ஏற்ற பருவம் இனிமேல் ஜென்மத்திற்றும் வரப்போவதில்லை என்பது ரணில் எப்பவோ போட்டு முடித்த மனக்கணக்கு.
இந்தமாதிரியான அரசியல் சூழ்நிலையில், நீதி, நியாயமான விசாரணைகள் என்ற கடும் வீதியில் பயணித்து தன்நாட்டு படையினரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கு துணைபோவதன் மூலம் சிங்கள மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொள்வதற்கு ரணில் ஒருபோதும் தலைப்படமாட்டார். அவ்வாறு அவர் முயற்சித்தால் அதுவே அவரது ஜனாதிபதி கனவுக்கு வைக்கும் நிரந்தர முற்றப்புள்ளியாக அமையும்.
இவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துத்தான் தமிழர் தரப்பு ஆரம்பம் முதலே சர்வதேச விசாரணை ஒன்று மட்டும்தான் வேண்டும் என்ற விடயத்தை இடித்துரைந்திருந்தது.
புலம்பெயர்ந்த கணிசமான தமிழர்கள் தரப்புக்களும் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒத்துப்போகும் ஒரு நிலைப்பாட்டை அறிவித்திருப்பது ஆரோக்கியமான விடயமாக தெரிகிறது. கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர், தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையில் விழுந்த பெரிய இடைவெளி இவ்வளவு குறுகிய காலத்தில் மீண்டும் நெருங்கிவரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
(இந்த அறிக்கை விடயத்தை தவிர்த்து வேறு விடயமொன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்தரப்புக்கும் இடையில் பாரிய மோதல் ஒன்று வலுத்திருக்கிறது. இதனை பிறிதொரு பத்தியில் பார்ப்போம்)
இந்த அறிக்கை தொடர்பாக நடைபெறப்போகும் உள்நாட்டு, வெளிநாட்டு பொறிமுறையில் சாட்சியம் வழங்கவுள்ள பலரதும் சாட்சியங்கள், பல வெளிநாடுகள் தத்தமது நாடுகளிலுள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதற்கும் சாதகமாக பயன்படுத்தப்படப்போகின்றன என்பது இங்கு தீர்க்கதரிசனத்துடன் பார்க்கப்படவேண்டிய இன்னொரு விடயம்.
இவை எல்லாவற்றினதும் பின்னணியில் அடுத்த 30 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா. சபை அமர்வையும் கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகம் முன்னிலையில் நடைபெறக்கூடிய விமல் வீரவன்ச கூட்டத்தினரின் ஆர்ப்பாட்டத்தையும் எதிர்பார்த்து காத்திருப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .