2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

தீர்மானம் என்ற புஸ்வாணம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. தெய்வீகன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் விசாரணைசெய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நாளைய தினம் ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவுள்ளது.

எந்த விதமான எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தீர்மானத்தின் எதிர்காலம் குறித்த ஜோதிடங்களுக்கெல்லாம் அப்பால், இந்த தீர்மானத்தில், அமெரிக்கா உட்பட அதன் உறுப்புநாடுகள் எவ்வளவு தூரம் நீதி நியாயத்துடன் நடந்துகொண்டன என்பதுதான் பாதிக்கப்பட்ட தரப்பை; பொறுத்தவரை வேதனைகொள்ளவேண்டிய விடயமாக நோக்கப்படவேண்டியுள்ளது.

இந்த நூற்றாண்டின் பெருங்கொடூரங்கள் நிறைந்த போரொன்றில் இடம்பெற்ற பாரியளவிலான மனித உரிமை மீறல்களையும் யுத்தக்குற்றங்களையும் விசாரணை செய்வதற்கு இலங்கை அரசு கதவடைத்தும்கூட, தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு விசாரணை ஒன்றை நடத்தி, கிடைக்கப்பெற்ற உண்மைகளின் அடிப்படையில் கணிசமானளவு நீதி நியாயங்கள் பொதிந்த அறிக்கை ஒன்றை தயாரித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை வெளியிட்டு வைக்க, அந்த அறிக்கைக்கு சம்பந்தமே இல்லாதது போன்றதொரு தீர்மானத்தை கொண்டுவந்த அமெரிக்காவும் அதன் உறுப்புநாடுகளும் 'இலங்கைவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றமே தமக்கு போதும்' என்ற தோரணையில் தமது இராஜதந்திர கைங்கரியங்களை செய்து முடித்திருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்றுதான் சாத்தியமான தீர்வாக அமையும் என்று தமிழ்மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியும்கூட, கலப்புநீதிமன்றத்தின் ஊடான பொறிமுறையை தாம் விதந்துரைப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

அது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

ஏனெனில், இன்னமும் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இனங்காணப்படும் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கோ அல்லது முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை பகைத்துக்கொள்ளுகின்ற அரசாட்சி நடைபெறும் நாட்டிலுள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ முழுமையான சர்வதேச பொறிமுறையை வலியுறுத்துவது ஏற்புடையது.

ஆனால், இலங்கைவில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில், அரசுத்தரப்பிலிருந்து தொடர்ச்சியாக சர்வதேசத்தை நோக்கி நேசக்கரம் நீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், போர் முடிவடைந்து ஓரளவுக்கு அமைதிநிலை நிலவும் இந்த காலப்பகுதியில்,  முழுமையானதொரு சர்வதேச பொறிமுறைத்திட்டத்தை நோக்கி சர்வதேச சமூகம் நகராது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.

ஆனால், ஐ.நாவின் விதந்துரைகளின் அடிப்படையில் இலங்கை குறித்த தனது தீர்மானத்தை வரைய வேண்டிய அமெரிக்காவோ பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அந்த அரசிடமே பிடித்துக்கொடுத்தது போன்ற தீர்மானத்தையே கொண்டுவந்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்த கலப்புநீதிமன்ற பொறிமுறையை தனது தீர்மானத்தில் முற்றாக நீக்கிய அமெரிக்கா, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியுடனும் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளின் உதவியுடனும் கூடிய பொறிமுறை என்ற வெற்று யோசனையை உள்ளடக்கிய இலங்கை அரசு கோரிய விடயங்களுக்கு தலையாட்டிய தீர்மானம் ஒன்றையே நாளை வாக்கெடுப்புக்கு முன்வைக்கவுள்ளது.

இலங்கை அரசும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தபோது அதனை முதலில் பாய்ந்து விழுந்து வரவேற்றுவிட்டு, பின்னர் பின்கதவால் சென்று அமெரிக்காவிடம் எத்தனையோ விண்ணப்பங்களை முன்வைத்து தனக்கெதிரான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்திய அரசாட்சி ஊடாக நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபடுவோம் என்றும் வார்த்தைக்கு வார்த்தை கூறிய மைத்திரி அரசு, நீதி பரிபாலன பீடங்களிலும் நீதிவான்கள் விடயங்களிலும் மஹிந்த அரசு மேற்கொண்ட அடாவடித்தனங்களை நீக்கி சுதந்திரமான  நியாயமான - சூழலை நாட்டில் ஏற்படுத்துவோம் என்று உள்நாட்டில் உறுதியளித்துவிட்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த அறிக்கை தொடர்பில், அன்று மஹிந்த அரசு உள்நாட்டில் எதை செய்ததோ அதைத்தான் தான் இன்று வெளிநாட்டில் செய்திருக்கிறது.

தனது சொந்த நாட்டு மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளையும் நீதி விண்ணப்பங்களையும் சர்வதேச சபை வரை என்று மறுத்துரைத்துவிட்டு உள்நாட்டில் வந்து மார்தட்டி பெருமைகொண்டிருக்கிறது.

கொழும்பில் பேசிய ஜனாதிபதி மைத்திரியும் வெளிவிவகார அமைச்சர் மங்களவும் 'நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்து மிகப்பெரிய சதியை முறியடித்துவிட்டோம். சர்வதேச விசாரணை என்ற பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக எமது நாட்டை பிடித்து உலுப்பிக்கொண்டிருந்த சனியனை விரட்டிவிட்டோம். ஒருமாதிரி எமது படையினரை காப்பாற்றிவிட்டோம்' என்று பெரு மூச்சுவிட்டுள்ளார்கள்.

தற்போது வெளியாகியுள்ள தீர்மானத்தின் கனதியைக்கூட, இன்னமும் தணித்து முற்று முழுதாகவே உள்நாட்டு விசாரணை என்ற கண்துடைப்பு பொறிமுறையினுள் அமிழ்த்திவிடுவதற்கு இலங்கை அரசு மேற்கொண்ட பகீரதப்பிரயத்தனங்களை தமிழத்; தேசியக் கூட்டமைப்பு ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும்.

முற்றுமுழுதான உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு கடைசி நேர முயற்சிகளில் இறங்கியுள்ளது என்பதை அறிந்துகொண்டவுடன் அமெரிக்க தீர்மானம் வெளியான நாளன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கொழும்பில் மேற்கொண்ட தூதவர்களுடனான சந்திப்புக்கள் மற்றும் சுமந்திரன் அவர்களின் நியூயோர்க் பயணம் ஆகியவை இந்த தீர்மானத்தை முற்றுமுழுதாகவே காவு கொள்வதற்கு இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்திருக்கின்றன.

இந்த விடயத்தில் தமிழத்; தேசியக் கூட்டமைப்பு தனது சக்திக்கு ஏற்றவகையில் சமராடியிருக்கிறது என்றே கூறலாம்.

இந்த தீர்மானத்தை மேலும் நீர்த்துப்போக முடியாதவண்ணம் பாதுகாத்துக்கொண்டது மட்டுமல்லாமல், இனி இறங்கிப்போகமுடியாது என்று நிறுத்திக்கொண்ட புள்ளிக்கு இலங்கை அரசை இழுத்துவந்து அதன் ஒப்புதலை பெற்றுக்கொண்டதன் மூலம் அந்த புள்ளியிலிருந்து விலகமுடியாத உறுதிப்பாட்டை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 'சிம்பிளாக' தீர்மானத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறியிருந்தால், இவ்வளவுகாலம் மேற்கொண்ட முயற்சிகளும் வீணடைந்து, வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் விளைவுகளையும் பெற்றுக்கொள்ள முடியாது போயிருக்கும்.

ஆகவே, தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, இது விடயத்தில் முன்னர் கூறியது போல இயன்றளவு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த முயற்சியில் முற்றுமுழுதாக தம்மால் வெற்றிகொள்ளமுடியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதியை தம்மால் பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விட்டது என்பதையும் தெரிவித்திருக்கிறது.

ஆனால், இந்த சர்வதேச சதுரங்க மேடையில் தமிழ்க் கூட்டமைப்பு ஆடக்கூடிய உச்ச விளையாட்டு இவ்வளவுதான். தீர்மானம் தொடர்பான தனது எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் சேர்ந்தியங்கிக்கொண்டு தமது மக்களுக்கான பாதுகாப்பு அரணாக செயலாற்றுவதுதான் கூட்டமைப்பின் முன்னால் இருக்கின்ற ஒரே தெரிவு.

ஏனெனில், இலங்கையை மையமாக கொண்ட அனைத்துலக சக்கரத்தை எடுத்துநோக்கினால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்களைவிட சிங்கள தேசத்தின்தேவைதான் சர்வதேச சமூகத்துக்கு அதிக அவசியமானதாகும்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி ஜனாதிபதியானாலும் ரணிலின் தலைமையிலான மேற்குலகம் சார்பு ஆட்சிதான் இன்று இலங்கையை ஆட்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். இவ்வாறு தமக்கு சார்பாக நடந்துகொண்டிருக்கும் ஆட்சிக்கட்டமைப்புக்கு ஆபத்தொன்றும் வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்காவும் கரிசனையுடன் செயற்படுவது இந்த தீர்மானத்தின் ஊடாக தெளிவாகியிருக்கிறது.

அவ்வாறான ஆபத்தொன்றை ஏற்படுத்தி, தற்போதைய அரசும் சீனாவின் பக்கம் முற்றுமுழுதாக சாய்ந்துவிடுவதையோ, தனது கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவதையோ மேற்குலகம் விரும்பாது.

இவ்வாறான சமன்பாட்டின் ஓர் அந்தத்தில் தமிழர்களின் நலன்கள் மீண்டும் பலியிடப்பட்டிருக்கின்றன.

போருக்கு பின்னரான மஹிந்தவின் தொடர்ச்சியான சர்வதிகார ஆட்சியிலிருந்து விடுப்பட்ட பின்னர், பலத்த எதிர்பார்ப்புக்கு உள்ளான ஆட்சிமாற்றம் தமிழர்களின் அடுத்த கட்ட விடுதலை போராட்டத்துக்கான ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்பட்டது.

தமிழர்களின் இந்த புதிய அரசியல் பாதைக்கு அனைத்துலக சமூகம் ஒரு நீதியான ஆதரவை நல்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிங்கள தேசத்துக்கு மாற்றமும் தமிழர்களுக்கு ஏமாற்றமும் மட்டுமே தந்திருக்கும் இந்த புள்ளியிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் முன்பாக தற்போதிருக்கும் பெரும் சவால்.

இதனை இன்னொரு வகையில் சாதகமாக பார்க்கப்போனால், இவ்வளவு காலமும் ஒவ்வொரு தரப்புக்களினாலும் பந்தாடப்பட்டுக்கொண்டிருந்த தமிழர்களது பிரச்சினையை தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தற்போது ஓர் ஆயத்தப்புள்ளி கிடைத்திருக்கிறது. மீண்டும் நம்பிக்கைகளுடன் தமிழ்மக்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .