2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஆழ் அமைதி எனும் அரசியல் அச்சுறுத்தல்

Thipaan   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரங்காற்றுகை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கின் பகுதியொன்று எந்தவித சலனமும் இன்றி ஆழ் அமைதியில் இருப்பது மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது.

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' தேவையெனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை, கிட்டத்தட்ட 'உள்ளக விசாரணை' எனும் நிலைக்குள் அமெரிக்காவினாலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினாலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. 

இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்பின் சமூக- அரசியல் கூறுகள் தீர்க்கமான முடிவுகளோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

அது, நீதியான விசாரணைகளைக் கோருவதற்கான அடிப்படைகளைத் தொடர்ந்தும் முன்வைப்பதுடன், நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு மற்றும் கண்காணிப்புக்களைக் கொண்டுவருவதற்கான நகர்வுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக மேல் மட்டத்தில் (மக்கள் மட்டத்தில் அல்ல) கவனம் பெறும் ஒரு தரப்பின் வழமைக்கு மீறிய அமைதி என்பது அச்சுறுத்தும் அளவுக்கு உணரப்படுகின்றது.

தமிழ் மக்களின் பெரும் ஆணைபெற்ற தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் 'மென்வலு' முன்வைப்பாளர்களின் கை 'வன்வலு' கோரிக்கையாளர்களினையும் பார்க்க ஓங்கியிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நெகிழ்நிலை (மென்வலு) தரப்பாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக, தேர்தல் காலங்களில் தம்மை வன்வலு தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே காட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட, தேர்தலின் பின்னரான நாட்களில் மென்வலு தரப்பினரோடு ஒட்டிக்கொண்டு அமைதியாகிவிட்ட நிலை காணப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது மென்வலுவுக்கு எதிரான தரப்பின் தேவை என்பது பெருமளவு காணப்படுகின்றது. அது, சமநிலை சார்ந்த அரசியல் நகர்வுக்கும் அவசியமானது.

கடந்த பொதுத் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அதன் ஆதரவுத் தளமும் மேல் மட்டத்தில் ஆற்றிய வெளிப்பாடுகள் என்பது குறிப்பிட்டளவானதாக இருந்தது. ஆனால், தேர்தல் தோல்விகளின் பின்னரான கடந்த ஒன்றரை மாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை நோக்கி வந்தது ஒரேயொரு தடவை மாத்திரமே. அதாவது, சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் போதாகும்.

ஆனால், அதன்பின்னராக நாட்களில் பெரும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் பற்றியோ, அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் பற்றியோ எதிர்பார்க்கப்பட்ட எதிர்வினைகளைக் கூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அதன் ஆதரவுத் தளங்களும் ஆற்றவில்லை. சில செய்தி இணையங்களிலும், சமூக ஊடகங்களிலும் சிறிதளவான எதிர்வினைகள் மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அது, தேர்தல் காலங்களோடு ஒப்பிடும் போது பெருமளவு வீழ்ச்சியைக் காட்டியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அதன் ஆதரவுத் தளம் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் அவசியமான தரப்பு என்று தொடர்ச்சியாக கூறி வந்திருக்கின்ற இந்தப் பத்தியாளர், முன்னணி மக்களை நோக்கி நகரவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வந்திருக்கின்றார்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும் அதனையே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல்களுக்குப் பின்னரான நாட்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரின் அமைதி நிலை என்பது ரசிக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது.

பொதுத் தேர்தல் தோல்வி மக்கள் மீதான அதிருப்தியாகவும்- இயங்குவதற்கான ஆர்வத்தினை மட்டுறுத்தும் விடயமாகவும் தமிழ்த் தேசிய முன்னணிக்கும், அதன் ஆதரவுத் தளங்களுக்கும் இருக்கக் கூடியது.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தம்மை மாற்றம் கோரும் தரப்பாக முன்னிறுத்துகின்றவர்கள், தோல்விகளுக்கு அப்பால் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்தாக வேண்டும்.

இல்லாத பட்சத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் வாக்குகளை மட்டும் கோரும் தரப்பாக மக்கள் கருதி எதிர்காலத்தில் இன்னமும் மோசமான தோல்வியை வழங்குவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை பெருமளவாக இரசித்த தரப்புக்கள், எதிர்ப்பு அரசியலைச் செய்வதற்காக மட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தேடுகின்றன எனும் குற்றச்சாட்டுக்கள் எழுவது நியாயமானது.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் 'அரசியல் சமநிலை'யொன்றுக்கான தேவைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் குறிப்பிட்டளவு நிவர்த்தி செய்ய முடியும் என்பதுவும், இப்போதுள்ள ஒரே தரப்பு அதுதான் என்பதுவும் அதற்கான காரணங்களாக கொள்ளக் கூடியவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் மென்வலுத் தரப்புக்கு எதிரான வன்வலுக் கோரிக்கையாளர்களின் உறக்கமும் கூட அச்சுறுத்தலானதாகவே கொள்ளப்பட வேண்டியது. விடயங்களை குழப்புவதற்கும்- நீட்சியான போக்கில் நியாயமான காரணங்களுக்கான விவாதங்களைக் தோற்றுவிப்பதற்குமான வித்தியாசம் சரியாக உணரப்பட வேண்டியது. அதனை, உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்வலுத் தரப்பினருக்கும் அவசியமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பு என்பது கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அண்மித்த கருத்தியலையும், அரசியல் வெளிப்பாட்டையும் கொள்ளும் வன்வலுத் தரப்பாகும். ஆனால், அவர்களும் கூட ஜெனீவா நோக்கிய தமது பயணத்தில் குறிப்பிட்டளவான அரங்காற்றுகைகளைச் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மென்வலுத் தரப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும், அவர்களோடு ஒத்திசைகின்றவர்களும் நெகிழ்நிலை அரசியலின் பக்கம் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மீறி நகர்ந்து விட்டார்களோ என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.

தவிர்க்க முடியாமல், தமிழ்த் தேசியப் பிரச்சினைகள் சார்ந்தும்- இறுதி மோதல் கோரங்கள் சார்பிலும் பேசுவதற்கான அங்கிகாரம் பெற்ற தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற போது, இராஜாதந்திர நகர்வுகளின் போக்கில் நெகிழ்நிலையையும், தேவைக்கேற்ப விடாப்பிடியான நிலைப்பாட்டையும் கொள்வது அவசியமானது.

அது, மக்களை நம்பிக்கையான அரசியல் பக்கத்தில் நகர்த்துவதற்கான விடயங்களை தொடர்ச்சியாக தக்க வைக்க வேண்டும். மாறாக, நம்பிக்கையீனத்தை தோற்றுவிப்பதாக அமையக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் காணப்படும் பெரும் குறை தமது நிலைப்பாடுகள்- இராஜதந்திர நகர்வுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதில்லை. அதனால், சில தரப்பினரால் பிழையான விடயங்கள் முன்வைக்கப்பட்டு குழப்பகரமாக நிலை தோற்றுவிக்கப்பட்டுகின்றது.

அதற்கான அண்மைய உதாரணமாக, 'இன அழிப்பு இடம்பெறவில்லை' என்று எம்.ஏ.சுமந்திரன் சுவிஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியதாக செய்தி வெகு வேகமாக பரப்பப்பட்டது. அதன் உண்மை நிலை அறியாமலேயே பலரும் எதிர்வினையாற்ற தலைப்பட்டார்கள். அது, மக்களை பெரும் குழப்பத்திலும், எரிச்சலின் உச்சத்துக்கும் நகர்த்தியது.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் 'இன அழிப்பினை' சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப நிறுவ வேண்டும். இல்லையென்றால், இன அழிப்பு நடைபெறவில்லை என்று சர்வதேசம் அறிவித்துவிடும் என்றும், வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பிலான தீர்மானம் அரசியல் தீர்மானம் என்னும், அது, சர்வதேசத்தில் பெரிய தாக்கங்களைச் செலுத்தாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தன்னை நோக்கிய கேள்வியொன்றுக்கு விளக்கமளித்தார்.

அதனை, கையாண்ட தரப்பு சுமந்திரன் 'இன அழிப்பு நடைபெறவில்லை' என்று கூறியதாக அப்படியே திரித்து வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால். அந்த உரையாடலில் ஒலிப்பதிவு வெளியாகியதும் மக்கள் தெளிவு பெற்றனர். இப்படியான விடயங்கள் எமக்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.

சர்வதேச விசாரணையொன்றுக்கான நகர்வுகள் எவ்வாறாக அமைய முடியும், அதன் சர்வதேச நியமங்கள், பூகோள அரசியலின் போக்கு என்பது பற்றியதாக தொடர்சியான விவாதங்கள் தமிழ்த் தேசிய அரசியலரங்கில் இடம்பெறவில்லை.

மாறாக, தமது நிலைப்பாடுகள் சார்பிலான தன்னிலை விளக்கங்கங்களும், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முறைமையும் சார்ந்ததாகவே அரசியல் இங்கிருக்கின்றது. அது, திரும்பத் திருப்ப வாக்குகளை நோக்கியதான நகர்வுகளாக கொள்ளப்படக் கூடியது.

இந்த இடத்தில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் களமாற்றும் சட்டத்துறை சார்பானவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அவர்கள் தமக்குள் சிறியளவிலான விவாதங்களை அல்லது எதிர்கேள்விகளை எழுப்பிவிட்டு அமைதியாகின்றனர். மக்களுக்கு புகட்டுவது அல்லது தெளிவு படுத்துவது தொடர்பில் பெரிதான அக்கறை அவர்களும் கொள்ளவில்லை. அதனைச் செய்யாது விட்டு மக்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை வைப்பது நியாயமாகாது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம் மீது 'சர்வதேச (பொதுநலவாய) நீதிபதிகளின் பங்களிப்போடு?' உள்ளக விசாரணை என்கிற விடயம் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்குள் எவ்வாறு சுழித்து ஓடி சில இலக்குகளையாவது அடையலாம் என்பது தொடர்பிலான திறந்த விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக, ஆழ் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தரப்புக்களும் முன்வர வேண்டும். அது அவசரமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X