2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து வெளியேறியவர்கள், உலகச்சம்பியன்களையும், தரப்படுத்தல்களில் முதலிடத்தில் இருக்கும் அணியையும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைச் செய்தது என்பது பாராட்டப்படவேண்டிய விடயமே. இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் சாதகம் என்றே கூறலாம். உலகக் கிண்ண தொடரின் பின்னர்  நிறைய மாற்றங்களின் பின்னர் கிட்டத்தட்ட புது அணியாக இந்த தொடரை சந்தித்தனர். எனவே மீள் கட்டுமானத்தில் வெற்றி கண்டுள்ளனர். 

அவுஸ்திரேலியா அணியைப் பொறுத்தளவில் தொடரை வென்றுவிட்டார்கள். அழுத்தத்தின் மத்தியில் வளர்ந்து வரும் புதிய தலைவரின் கீழ் இந்த வெற்றி நல்ல வெற்றி என்று கூறலாம். ஆக இரு அணிகளுக்கும் இந்த தொடர் நல்ல தொடரே.

இந்த தொடரின் விருவிறுப்புத்தன்மை ஒய்ன் மோர்கன் தலையில் பந்து தாக்கியதை அடுத்து மைதானத்தை விட்டு வெளியேறியதும் இல்லாமல் போய் விட்டது. அவரின் துடுப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு 4 போட்டிகளிலுமே கைகொடுத்து இருந்தது. மிச்சல் ஸ்டார்க் வீசிய பௌன்சர் பந்து ஒய்ன் மோர்கனின் தலை கவசத்தை தாக்கி, அதனூடாக தலையையும் தார்க்க அவர் தொடர்ந்து துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். அது மற்றைய வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஒரு மரணத்தை பார்த்தும் அவுஸ்திரேலியா வீரர்களின் ஆக்ரோஷம் இன்னமும் குறையவில்லையா என்ற ஒரு கேள்வியையும் கேட்க தோன்றுகின்றது. மறுபுறம் விதிமுறை அவ்வாறு உள்ளது. பௌன்சர் பந்து என்று தெரிந்து அதை விலகிச் செல்ல விட்டு இருக்கலாம். அவ்வாறு ஏன் துடுப்பாட்ட வீரர் செய்ய தவறினார் என்ற நியாயத்தையும் சொல்ல முடிகின்றது.

ஐந்து போட்டிகளினதும் சுருக்கமான ஒரு மீள் பார்வை 

முதற்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்கள். மத்தியூ வேட் ஆட்டமிழக்காமல் 71 (50 பந்துகளில்) ஓட்டங்கள், டேவிட் வோர்னர் 59 ஓட்டங்கள். ஆதில் ரசீட் பந்துவீச்சில் 4 விக்கெட்கள். இங்கிலாந்து அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்கள். ஜேசன் ரோய் 67 ஓட்டங்கள். ஜேம்ஸ் ரெய்லர் 49 ஓட்டங்கள். பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், நேதன் கொட்லர் நைல், பட் கம்மின்ஸ், ஷேன் வொட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகன் மத்தியூ வேட் .

இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று ஆதிக்கத்தை செலுத்தியது. 49 ஓவர்களில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்டீபன் ஸ்மித் 70, மிச்சல் மார்ஸ் 31 பந்துகளில் 64, ஜோர்ஜ் பெய்லி 54 ஓட்டங்களைப் பெற்றனர். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 3 விக்கெட்களையும், ஸ்டீபன் பின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து 42.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஒய்ன் மோர்கன் 85 ஓட்டங்களைப் பெற்றார். பட் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும், கிளன் மக்ஸ்வெல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மிச்சல் மார்ஸ் தெரிவானார். டேவிட் வோனர் தசைப் பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். பின்னர் தொடரில் இறுந்தும் விலகினார்.   

மூன்றாவது போட்டியில் 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நல்ல மீள் வருகை ஒன்றைக் காட்டியது. இந்த வெற்றி அடுத்த போட்டியிலும் வெற்றி பெறக்கூடிய நிலையை தந்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜேம்ஸ் ரெய்லர் தனது முதல் சதத்தைப் பெற்றார்.அவர் 101 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 63 ஓட்டங்களையும், ஒய்ன் மோர்கன் 61 ஓட்டங்களையும் பெற்றனர். பட் கம்மின்ஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவுஸ்திரேலியா அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது. ஆரோன் பிஞ்ச் 53 ஓட்டங்களையும், மத்தியூ வேட் 42 ஓட்டங்களையும் பெற்றனர். லியாம் பிளங்கட் 3 விக்கெட்களையும், மூயேன் அலி 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ரெய்லர் தெரிவானார். டேவிட் வோர்னரின் இடத்துக்கு ஜோ பேர்ன்ஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஷேன் வொட்சனின் இடத்துக்கு அஸ்டன் ஏகர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். நேதன் கொட்லர் நைலின் இடத்துக்கு ஜேம்ஸ் பட்டின்சன் இணைக்கப்பட்டார். மூவருமே உபாதை காரணமாக அணியை விட்டு வெளியேறினார்கள். இது அவுஸ்திரேலியா அணிக்கு பெரியாக அடியாக அமைந்தது. ஒரே போட்டியில் மூன்று வீரர்களை இழப்பது என்பது அணிக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும். கடந்த இரண்டு போட்டிகளிலும் தடுமாறிய விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரை அணியால் நிறுத்தி ஜொனி பெயர்ஸ்டோவை அணியில் இங்கிலாந்து அணி இணைத்தது. பட்லருக்கு ஓய்வு வழங்கப்பட்டு தொடரால் முழுமையாக நீக்கப்பட்டார். அவுஸ்திரேலியா தொடரின் போது அவரின் துடுப்பாட்ட போர்ம் இழந்தமையே அதற்க்கு காரணமாகும்.

நான்காவது போட்டியில் இரு மாற்றங்களுடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி போராடிய போதும்  வெற்றிபெறமுடியவில்லை. அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. கிளன் மக்ஸ்வெல் 64 பந்துகளில் 85 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 75 ஓட்டங்களையும், மத்தியூ வேட் 26 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தப் போட்டியில் இணைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லே 3 விக்கெட்களையும், லியாம் பிளங்கட், மூயேன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஒய்ன் மோர்கன் 92 ஓட்டங்களைப் பெற்று போட்டியன் நாயகனாக தெரிவானார். ஜேம்ஸ் ரெய்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 41 ஓட்டங்களைப் பெற்றனர். பட் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும், மிச்சல் மார்ஷ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  

ஐந்தாவதும், இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி மிக இலகுவான வெற்றியைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மிச்சல் மார்ஸ் 4 விக்கெட்களையும், ஜோன் ஹஸ்டிங்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஒய்ன் மோர்கனின் இழப்பு இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக மிச்சல் மார்ஸ் தெரிவானார்.  

துடுப்பாட்டம் 

ஒய்ன் மோர்கன்         5    5    278    92    69.50    98.66    0    3
ஜேம்ஸ் ரெய்லர்         5    5    246    101    49.20    87.23    1    0
ஜோர்ஜ் பெய்லி         5    5    218    75    54.50    76.49    0    2
ஜேசன் ரோய்         5    5    201    67    40.20    112.92    0    2
கிளன் மக்ஸ்வெல்     5    4    166    85    41.50    128.68    0    1
மத்தியூ வேட்         5    4    164    71*    82.00    137.81    0    2
ஸ்டீபன் ஸ்மித்         5    5    156    70    31.20    72.89    0    1
ஆரோன் பிஞ்ச்         3    3    138    70*    69.00    91.39    0    2
மிச்சல் மார்ஸ்         5    4    134    64    44.66    116.52    0    1
பென் ஸ்டோக்ஸ்          5    5    120    42    24.00    77.41    0    0

(போட்டிகள், இன்னிங்ஸ், மொத்த ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச்சதம் ) 

பட் கம்மின்ஸ்         5    5    44.0    236/12    49/4    19.66    5.36
மிச்சல் மார்ஸ்         5    5    33.0    193/8    27/4    24.12    5.84
ஆதில் ரஷிட்         5    5    41.0    241/7    59/4    34.42    5.87
கிளன் மக்ஸ்வெல்     5    4    36.0    183/6    44/2    30.50    5.08
மூயேன் அலி        5    5    40.0    202/6    32/3    33.66    5.05

(போட்டிகள், இன்னிங்ஸ், சராசரி, ஓட்டங்கள்/விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)   

இரு அணிகளையும் பொருத்தமட்டில் இந்த தொடர் புதிய சில வீரர்களை அணிக்குள் உள் வாங்குவதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையாக அமைந்துள்ளது. உலக சம்பியன்கள், மிக மோசமாக தடுமாறிக்கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணியிடம் தடுமாறியுள்ளது முழுமையாக அவர்களின் சம்பியன், முதற்தர அணியாக பலத்தை வைத்துள்ளதா என்ற கேள்வி எழும்பத்தான் செய்கின்றது. இங்கிலாந்து அணியின் வளர்ச்சிக்கான ஒரு படியாக இந்த தொடர் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .