2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காஸ்ட்ரோ- பாப்பரசர்: முரண்பாட்டுச் சந்திப்பு

Thipaan   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ஃபிடல் காஸ்ட்ரோவும் பாப்பரசர் பிரான்ஸிஸும் கடந்த வாரம் சந்தித்துக் கொண்டமை பல புருவங்களை உயர்த்தியிருந்தது. அத்தோடு, கியூபாவுடனான இராஜதந்திரத் தொடர்புகளை அமெரிக்கா மீள ஆரம்பித்துள்ள பின்னணியில், கியூபாவுக்கான பாப்பரசரின் விஜயமும் முன்னிலை பெற்றுக் கொண்டது.

அமெரிக்காவும் கியூபாவும் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்திய பாப்பரசர், நல்லிணக்கத்துக்கான உதாரணமாக முழு உலகுக்குமே இவ்விரு நாடுகளும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு, சமாதான தூதுவனாகவும் ஏழைகளின் தோழனாகவும் ஒதுக்கப்பட்டோரின் தோள்கொடுக்கும் உறவாகவும் பாப்பரசர் தன்னைத் தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டார்.

இறுதியாக, (அது முதன்முறையாகவும் அமைந்து கொண்டது) 1998ஆம் ஆண்டு கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாப்பரசர், தற்போது புதிய தலைவரின் கீழ் (அவர் முன்னைய தலைவரின் சகோதரனாக இருந்தாலும்) இந்த விஜயத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ‡பிடல் காஸ்ட்ரோவையும் அவர் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பே, சிறிது கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது.

ஃபிடல் காஸ்ட்ரோவும் பாப்பரசரும் நெருக்கமான சந்திப்பொன்றை நடாத்தியதாக, அச்சந்திப்புத் தொடர்பான உத்தியோகபூர்வ வெளியீடு தெரிவித்தது. ஆனால், அந்தச் சந்திப்பின் போது, ஃபிடல் காஸ்ட்ரோ அணிந்திரு;த ஆடை தான் அதிக கவனத்தையும் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தியிருந்தது.

உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த 'அடிடாஸ்' நிறுவனத்தில் விளையாட்டுக்கான ஆடைகளை அவர் அணிந்திருந்தார்.

அவர் எதற்காக விளையாட்டுக்கான ஆடைகளை விரும்புகிறார், அதுவும் பாப்பரசர்  போன்றதொரு மாபெரும் சந்திப்புக்கு ஏன் அவ்வாறு என்ற வினா எழுந்தாலும், அதற்கான பதில் கிடைக்கவில்லை. ஊகங்கள் அல்லது எடுகோள்களின்படி, சத்திரசிகிச்சையின் பின்னர் இவ்வாறான ஆடைகளில் இருப்பதை அவர் அதிகம் விரும்புகிறார் என ஒரு விளக்கமும், தனது சகோதரருக்குப் பதவியை வழங்கிய பின்னர், அவரது ஆட்சியில், தான் எந்தவிதத் தாக்கத்தையும் செலுத்தவில்லை, வெறுமனே சாதாரணனாக இருப்பதை வெளிப்படுத்தவே, இவ்வாறான ஆடைகளை அணிகிறார் என மற்றொரு விளக்கமும், உலகத் தலைவர்கள் வரும் போது, 'உங்களை நான் பெரிதாக எண்ணவில்லை. நான் ஒரு பெரும் புரட்சித் தலைவன். இந்த ஆடையே உங்களுக்குப் போதுமானது' என்பதை வெளிப்படுத்தவே இவ்வாறான ஆடைகளை அவர் அணிகிறார் என்று இன்னுமொரு விளக்கமும் தெரிவிக்கின்றன. இவற்றில் எது உண்மை, எது பொய் என்பது உறுதிப்படுத்தப்பட முடியாததாகவே இருக்கிறது.

அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், அவ்வாறானதொரு மாபெரும் நிறுவனத்தில் வியாபாரக்குறி காணப்பட்ட ஆடையை காஸ்ட்ரோ அணிந்தமை, அவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. பொதுவுடைமையைப் பின்பற்றும், அதைப் போதிக்கும் தலைவரான ஃபிடல், இவ்வாறு முதலாளித்துவ நிறுவனமொன்றின் ஆடையை, இவ்வாறான மிகப்பெரிய சந்திப்புக்கு எதுவித சிந்தனையுமின்றி அணிந்தாரா என்ற வினாவும் எழுகின்றது.

எந்த ஆடையை ஃபிடல் காஸ்ட்ரோ அணிய வேண்டுமென்றொ எதை அணியக் கூடாதென்றோ கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவரது ஆட்சியில் அவர், பொருத்தமானதென வலிந்து திணித்த பொதுவுடைமைக் கொள்கைக்கு முரணாக, பல்தேசிய நிறுவனங்களின் உற்பத்திகளைப் பயன்படுத்துவதென்பது பொருத்தமற்றது.

விளையாட்டு ஆடைகளைத் தான் அணிய வேண்டுமெனின், வியாபாரக் குறியற்ற எத்தனையோ விளையாட்டு ஆடைகளைச் சந்தையில் பெற்றுக் கொண்டிருக்க முடியும். ஆகவே, 'போதிப்பதற்கும் ஆட்சி செய்வதற்கும் பொதுவுடைமையும் வேண்டும், சொகுசாக வாழ்வதற்கு முதலாளித்துவம் (எனக்கு மட்டும்) வேண்டும்' என்பது, ஒரு தலைவராக அவரைப் பின்பற்றியவர்களுக்கு அவர் செய்யும் மாபெரும் துரோகமும் கூட.

மறுபுறத்தில், தற்போதைய பாப்பரசர் என்னதான் முதலாளித்துவத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிரானவராக இருந்தாலும் கூட, ஒழுங்குபடுத்தப்பட்ட மதம் என்னும் மாபெரும் முதலாளித்துவ நிறுவனத்தின் தலைவரே அவர். வத்திக்கான் நகரமானது மிகவும் செல்வச்செழிப்பானதொரு நகரம். அவற்றுக்கு மேலாக, உலகம் முழுவதிலும் தேவாலயங்களின் வலையமைப்பை அது கொண்டுள்ளது. பாப்பரசர் உண்மையிலேயே இடதுசாரித்துவத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருந்தால், வத்திக்கான் நகரமோ அல்லது தேவாலயமோ, இவ்வளவு செல்வச்செழிப்பு மிக்கதாக இருந்திருக்காது. எனவே, முதலாளித்துவத்தின் தவறான பக்கங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டு இருந்தாலும், பாப்பரசரை ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் தலைவராகவே பார்க்க வேண்டியுள்ளது.

மாறாக, பொதுவுடைமையைப் பொறுத்தவரை, ஒழுங்குபடுத்தப்பட்ட மதங்களென்பவை மிகப்பெரும் எதிரிகள். அதுவும், வத்திக்கான் போன்றதொரு மாபெரும் அமைப்பு, பொதுவுடைமைக்கு எதிரியாகவே இருக்க வேண்டும். ஆனால், இடம்பெற்ற நெருக்கமான சந்திப்போ, வேறெதனையோ சொல்வது போல் அமைந்துள்ளது. இவற்றையெல்லாம், பாப்பரசர் பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இருபக்கக் காதல் போல, இது இருபக்கமும் முரண்பாடான கொள்கைகளை வெளிப்படுத்திய சந்திப்பாக அமைந்திருந்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ மீது உலகில் பல்வேறு நாடுகளிலும் மரியாதை காணப்படுகின்ற போதிலும், அவர் மீதான மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. எதிர்த்தரப்பு மீதான தாக்குதல்கள், கருத்து வேற்றுமைக்கான கொலைகள், மக்களின் சுதந்திரத்தைப் பறித்தமையென, அக்குற்றச்சாட்டுகளை மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியே வந்திருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தின்படி, 1959ஆம் ஆண்டு ஆட்சியைப் புரட்சி மூலம் கைப்பற்றிய முதல் 6 மாதங்களில், 550 பேர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் 1970ஆம் ஆண்டில் சுமார் 5,000 மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, ஊழியர்களின் பலவந்தமான பழி வாங்குதல், சிறையிலடைக்கப்பட்டோர் மீதான துஷ்பிரயோகங்கள், அரசியல் எதிர்ப்பாளர்களைச் சிறையிலடைத்தல் என, துஷ்பிரயோகங்கள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்டன.ஃபிடல் காஸ்ட்ரோவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கொடூரங்கள், அவரது சகோதரராலும் தொடர்ந்தும் கொண்டு செல்லப்படுகின்றன.

1959ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2008ஆம் ஆண்டுவரை முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியாற்றியிருந்தார். அதன் பின்னர், அவரது சகோதரர் பதவியாற்றுகிறார். அங்கு நடாத்தப்படும் தேர்தல்களில் எந்தவித சுதந்திரமோ அல்லது சுயாதீனத்தன்மையோ கிடையாது எனவும், அந்நாடு சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட நாடு எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் விவரிக்கின்றன.

இந்நிலையிலேயே, இவ்வாறானதொரு நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ள எடுத்த முடிவு கேள்விக்குரியது. இலங்கையில் கூட, சர்வாதிகாரத்தன்மை போன்றதான ஆட்சி உருவாகுகிறது, மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலான மனித உரிமைகள் அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றுக்கு மத்தியிலேயே இவ்வாண்டு ஆரம்பத்தில் இங்கு வருகை செய்வதை பாப்பரசர் உறுதிப்படுத்தினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர் சந்தித்தாரென்பது வெறுமனே தற்செயல் நிகழ்வு மாத்திரமே.

இருந்த போதிலும், கியூபாவுக்குச் சென்ற உலக கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர், வெறுமனே 'மதங்களை வெளிப்படுத்துவதற்கு இன்னமும் வாய்ப்புத் தேவைப்படுகிறது' என்று தெரிவிப்பதற்குப் பதில், கியூபாவின் ஜனநாயகமற்ற தன்மை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கலாம். அதிக தாக்கங்களை அது ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

மாறாக, இரண்டு வௌ;வேறான, முரண்பாடான கொள்கைகளைக் கொண்டவர்களென வெளிப்படுத்திக் கொள்ளும் இரு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட சந்திப்பாகவும், அதன் போது இரு தலைவர்களின் கொள்கைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட வேண்டிய சூழ்நிலையையுமே இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியிருக்கிறதென்பது யதார்த்தம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .