2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கு- கிழக்கு மாகாணங்களை தமிழீழமாக அறிவிக்கவும்: இராமதாஸ்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், தமிழர்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழ முடியாது என்பதால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா., மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தனித் தமிழீழமாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான  விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது.

போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு இலங்கை நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அத்தகைய விசாரணை நடத்த முடியாது.

உள்நாட்டு விசாரணை தான் நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நேரத்தில், நியூயோர்க்கில் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தான்  இலங்கை ஜனாதிபதி சிறிசேன அவரது உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

இலங்கையில்  மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மீதான இந்த குற்றச்சாற்றுகள் மீது பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக இருந்தனர்; பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களைக் கொண்டு கலப்பு விசாரணை நடத்தலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் ஏற்க மறுத்துவிட்ட  அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும், இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்த விசாரணை  இலங்கை நீதிமன்றத்தில் தான் நடத்தப்படும்; அந்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் பங்கேற்பர் என்று கூறியது.

இது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்த காரணம், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்பது தான்.

கடந்த 26ஆம் திகதி , இலங்கை ஜனாதிபதி சிறிசேனவும்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நியூயோர்க்கில் சந்தித்து போர்க்குற்ற விசாரணை பற்றி பேசினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய செய்தித் தொடர்பாளர்,

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போர்க்குற்றங்களை விசாரிப்பது குறித்த அந்நாட்டின் அணுகுமுறையில் கடலளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பாராட்டு மழை பொழிந்தார்.

இது தொடர்பான செய்திகள் வெளிவந்த நாளிதழ்கள் கசங்குவதற்கு முன்பாகவே, போர்க்குற்ற விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று சிறிசேனா கூறியதில் இருந்தே உலக நாடுகளுக்கு அவர் எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதை உணர முடியும்.

அதுமட்டுமின்றி, போர்க்குற்ற விசாரணை என்பது இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டதாகத் தான்  இருக்கும். விசாரணை அமைப்பு எத்தகைய தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை இலங்கையின்  இராணுவ அதிகாரிகள், பௌத்த மதத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே இலங்கை நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துபவது யார் என்பதையும் அறிய முடியும்.

ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர் படுகொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் இலங்கை நீதி வழங்கும் என உரக்கக் கூறிவந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்போது என்ன பதில் சொல்லப்போகின்றன? என்பது தான் உலககெங்கும் உள்ள தமிழர்கள் எழுப்பும் வினா.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு முறையாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும்.

ஒரு வேளை நேர்மையான போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வில்லை என்றால்,  அந்நாடு இன்னும் திருந்தவில்லை  என்பதை உலக சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .