2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

தொடரை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி, ஹராரேயில் இடம்பெற்ற இறுதியும், தீர்மானமிக்கதுவுமான மூன்றாவது போட்டியில் இலகுவாக 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 2-1 க்கு என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணித்தலைமைப் பொறுப்பேற்ற சஃப்ராஸ் அகமட், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று சிம்பாப்வே அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார். பாகிஸ்தான் அணியில் அசார் அலிக்கு பதிலாக அகமட் ஷெஷாட்டும், யாசிர் ஷாக்கு பதிலாக இமாத் வசிமும் அணியில் இடம்பெற்றனர். சிம்பாப்வே அணி சார்பாக ஹமில்டன் மசகட்சாவுக்கு பதில் மல்கொம் வோலரும், காயமடைந்த கிரேமி கிரீமருக்கு பதிலாக தினோடெண்டா முட்டோம்பொட்சியும் இடம்பெற்றனர்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சமு சிபாபா, ரிச்மோண்ட் முத்தும்பாமி 89 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்த போதும், அதன்பின் தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்து 38.5 ஓவர்கள் முடிவில் 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

சிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரிச்மோண்ட் முத்தும்பாமி 67 ஓட்டங்களையும், சமு சிபாபா 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய பிலால் ஆசிப், தனது பத்து ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தீவிர இமாத் வசிம் மூன்று விக்கெட்டினை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 34 ஓவர்களில் மூன்று விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசாத் ஷாஃபிக் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், பிலால் ஆசிப் 38 ஓட்டங்களையும், ஷோய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக தினேஷே பணயங்காரா, சீன் வில்லியம்ஸ், ஜோன் நைம்பு தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக பிலால் ஆசிபும், தொடரின் நாயகனாக ஷோய்ப் மலிக்கும் தெரிவாகினர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X