2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

பிக்ஸ் செய்ய கெய்ன்ஸ் பணித்தார்: வின்சென்ட்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது அணித்தலைவராக இருந்த கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின் கீழேயே, போட்டிகளை நிர்ணயம் செய்ததாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லூ வின்சென்ட் வாக்குமூலமளித்துள்ளார். இலண்டனில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தின் போது கிறிஸ் கெய்ன்ஸ் சேர்க்கப்படாமைக்கு, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தொடரில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமையே காரணமென, அப்போதைய ஐ.பி.எல் பணிப்பாளரான லலித் மோடி பதிவிட்ட டுவீட், தனது நற்பெயரைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்து, கிறிஸ் கெய்ன்ஸ் 2012ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்து, நட்டஈடு பெற்றிருந்தார். எனினும், கிறிஸ் கெய்ன்ஸ் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது வாக்குமூலமளித்த லூ வின்சென்ட், கிறிஸ் கெய்ன்ஸை முன்மாதிரியான ஒருவராகக் கருதியதாகவும், அவர் திடீரென போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்ட ஈடுபட அழைத்ததாகவும், அத்தொடரில் எல்லாப் போட்டிகளும் நிர்ணயம் செய்யப்பட்டதாக அங்கு பேச்சுக்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ்ஸில் பயணம் செய்யும் போதோ அல்லது காலை உணவின் போதோ தனக்கான பணிப்புரைகள் வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், எனினும், ஆட்டமிழக்கும் கலையைப் பயிலுவதற்குத் தடுமாறியதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, கிறிஸ் கெய்ன்ஸ் தவிர, இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் டினேஷ் மொங்கியா, நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டரைல் டபி ஆகியோரும் இவ்வாறு போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டதாக, வின்சென்ட் குற்றஞ்சாட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X