2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு ஓய்வுதியமும் வாக்குப்போடும் வசதியும்?

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு ஓய்வுதியமும் வாக்குப்போடும் வசதியையும் இந்த நல்லாட்சியில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும் அல்- மீஸான் பௌண்டேஷன் தலைவருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு வெளியே வாழும் வெளிநாட்டு தொழிலாளிகள் சார்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வெளிநாட்டில் வேலைசெய்யும் இலங்கையர்களின் நலன்கருதி இந்த நல்லாட்சியில் அரசு அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்க முன்வரவேண்டும். இலங்கைக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் நாட்டின் முள்ளந்தண்டாக செயற்படும் இலங்கைக்கு வெளியே பணி செய்துவரும் இவர்களின் துன்பங்கள் சொல்லிலடங்காதவை.

இந்த நல்லாட்சியை நிறுவுவதிலும் இவர்களது பங்கு அளப்பரியதாகவே இருந்தது என்பதை யாரும் மறுக்கவே அல்லது மறைக்கவோ முடியாது. தமது வாழ்நாளில் அதிகமான காலங்களை நாட்டுக்கு வெளியே கடத்திவரும் இவர்கள் நாட்டின் வளர்ச்சியை தூக்கி நிறுத்துவதில் எப்போதும் முன்னிற்பவர்கள்.

இவர்களின் சேவையை நாடு கொண்டாடாது விட்டாலும் அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க முன்வரவேண்டும். அரசாங்க சேவை செய்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வுதியம் வழங்க முன்வந்த இலங்கை அரசியலமைப்பு இவர்களை மறந்தது கவலையளிக்க கூடியது.

மீனவர்கள், விவசாயிகளுக்கு கூட ஓய்வுதிய திட்டங்கள் சரியான முறையில் வகுக்கப்பட்டிருந்தும் கூட இந்த சகோதரர்களுக்கான ஓய்வுதியத் திட்டங்கள் பற்றிய அறிவு கேள்விக்குறியாகவே உள்ளது? நல்லாட்சி அரசை அமைத்துவிட்டு ஏக்கத்துடன் நமக்கு நலமாக ஏதாவது நடக்காதா? என வாழும் இவர்களுக்கு இந்த அரசு கொடுக்கப்போகும் பதில் என்ன?

தூதரகங்கலின் உதவியுடன் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் சூழ்நிலையிலும் கூட அரசு மௌனம் காத்துவருவது வேதனையான ஒன்றே. 

பல அதிரடி முடிவுகளை பதவியேற்ற நாள் முதல் அறிவித்துக் கொண்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகொறல்ல, நாட்டினை பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நல்லாட்சியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனை கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கையை வெகு விரைவில் எடுக்க வேண்டும். 

மேலும், எதிர்வரும் 2016ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்டத்தில் இவர்களுக்கான ஆக்கபூர்வத் திட்டத்தை அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என்பதுடன் இவர்களின் ஆதரவுடன் கதிரைகளை கைப்பற்றியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தை கையில் எடுத்து போராட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X