2016ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்: ஓர் அலசல்
16-10-2015 03:50 PM
Comments - 0       Views - 630

-அச்சுதன் ஸ்ரீரங்கன்

கடந்த வாரம், இலங்கையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினை (Appropriation Bill) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எனப்படுவது, குறித்த நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்துக்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும் அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதியேற்பாடுகளைச் செய்வதற்கும் அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்துக்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும், திரட்டு நிதியத்துக்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட ஏற்பாடுகள், 2016- 2018 நடுத்தர காலத்தில் கிடைப்பனவிலுள்ள மொத்த வளங்களை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2016ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபாயாகும். அதேபோன்று நடைமுறையிலுள்ள அறவீட்டுக் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு மானியங்கள் உள்ளடங்களான வருமானம் ஏறக்குறைய 1,789 பில்லியன்களாகும்.

அரசாங்கத்தின் மொத்த செலவில் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூலம் மதிப்பிடப்பட்ட செலவு 1,941 பில்லியன் ரூபாய், இவற்றில் 1,314 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினமும் 627 பில்லியன் ரூபாய் மூலதன செலவுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலதிகமாக சிறப்பு சட்டங்களின் கீழ் பொதுப்படுகடன் மற்றும் கடன் மீள் செலுத்துகைக்கான செலவுகள், விதவைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளுக்காக 1,191 பில்லியன் ரூபாய் செலவுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மொத்தமாக 306.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

257.7 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினமாகவும் 48.9 பில்லியன் ரூபாய் மூலதன செலவாகவும் காணப்படுகின்றது. 2015இல் பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அமைச்சுடன் சேர்க்கப்பட்டிருந்த போது மொத்த ஒதுக்கீடு 285 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 85 சதவீதம் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் செயற்பாட்டு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2.3 பில்லியன் ரூபாய், 2015 வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் 9.6 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு, முன்னைய ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டின் வரவு- செலவுத் திட்டத்தில் 47.6 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட ஒதுக்கிடு 2016ஆம் ஆண்டுக்கு 185.9 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மற்றைய பெரிய ஒதுக்கீடுகளாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாயும், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு 171 பில்லியன் ரூபாயும் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சுக்கு 156 பில்லியன் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு  107 பில்லியன் ரூபாயும் மற்றும் சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கு 174 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கிகாரம் அளித்தது, இவ் சட்டமூலம் ஒக்டோபர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 

நவம்பர் 20ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் வரவு- செலவுத் திட்டத்துக்கான இரண்டாம் மதிப்பீடு செய்யப்படும்.

"2016ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்: ஓர் அலசல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty