Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாறியிருக்கும் தம்மிக்க பிரசாத், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக மாறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாஸ், 355 விக்கெட்டுகளுடன் முதலாவது இடத்தையும் லசித் மலிங்க 101, டில்ஹார பெர்ணான்டோ 100, பிரமோதய விக்கிரமசிங்க 85, றுமேஷ் ரத்நாயக்க 73 விக்கெட்டுகளுடன் ஏனையோர் அடுத்த இடங்களிலும் காணப்படுகின்றனர். ஆறாவது இடத்தில், 70 விக்கெட்டுகளுடன் தம்மிக்க பிரசாத் காணப்படுகின்றார்.
தம்மிக்க பிரசாத்தின் ஒட்டுமொத்த சராசரி 37.51ஆகக் காணப்படுகின்ற போதிலும், கடந்தாண்டில் 31.41 என்ற சராசரியில் 12 விக்கெட்டுகளையும் இவ்வாண்டில் 26.41 என்ற சராசரியில் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, சிறப்பான முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள தம்மிக்க பிரசாத், முன்னைய காலங்களில் முழுமையான உடற்தகுதியுடன் காணப்படுவதே தனது பிரதான இலக்காகக் காணப்பட்டதாகவும், தற்போது அந்தப் பிரச்சினையில்லை எனவும் தெரிவித்தார்.
'தற்போது, எனக்கு வேறு இலக்குகள் காணப்படுகின்றன. லசித் மலிங்கவும் டில்ஹார பெர்ணான்டோவும் 100 விக்கெட்டுகளுடன் காணப்படுகின்றனர். அவர்களை முந்திக் கொண்டு, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாமிடத்தைப் பெற வேண்டும். அது தான் நான் எனக்கு வைத்துள்ள இலக்காகும்" என்றார்.
முன்னைய காலங்களில் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வந்த போதிலும், அதன் பின்னர் அணியின் உடற்கூற்று நிபுணருடனும் அணியின் உடற்பயிற்சி நிபுணருடனும் கலந்துரையாடி, தனது உடலுக்கு ஏற்றவாறான பயிற்சிகளை வடிவமைத்துக் கொண்டதாக, தம்மிக்க பிரசாத் தெரிவித்தார்.
இலங்கை அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் பிரதீப்புடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கும் தம்மிக்க பிரசாத், அவர் பந்துவீசும் போது அவரின் பந்துவீச்சைப் பார்ப்பது விருப்பமானது எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .