Gavitha / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அதன் வரைவு காணப்பட்டதாக, இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த ப. சிதம்பரம், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்காத நிலையில் வட மாகாண முதலமைச்சரான தன்னைச் சந்திக்க வேண்டுமென்ற வகையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததாகவும், தங்களுடைய சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக அமைந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இருவருடைய சந்திப்பின் போதும், 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கான வரைவைத் தயாரிப்பதில் தானும் பாலகிருஷ்ணன் என்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் ஈடுபட்டதை ப. சிதம்பரம் நினைவு கூர்ந்ததாக, முதலமைச்சர் கூறினார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 'எங்களுடைய வரைவான இந்திய, இலங்கை உடன்பாட்டு வரைவை பல மணித்தியாலங்களாகச் செய்ததாகவும், என்ன விதத்தில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு, இந்தியாவின் தமிழ்நாடு போன்று, அங்கு மாநிலங்களுக்கு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தார்களோ, அதேயளவுக்குப் பகிர்ந்து கொடுப்பது போன்று அந்த வரைவைத் தயாரித்ததாக அவர் தெரிவித்தார்' என விக்னேஸ்வரன் கூறினார்.
இதன்போதே, இங்கிருக்கும் ஏனைய மாகாணங்களை விட வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்படவே வரைவு தயாரிக்கப்பட்டதாக ப. சிதம்பரம் தெரிவித்ததாக, முதலமைச்சர் கூறினார்.
இந்நிலைமை தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைவு, 'அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தனவால் மாற்றப்பட்டு, எமக்கு மேலதிக வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி, இலங்கையிலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் ஒரேவிதமான அதிகாரங்களைக் கொடுப்பதாக சட்டம் மாற்றப்பட்டது' என்றும் சிதம்பரம் கூறியதாக முதலமைச்சர் கூறினார்.
மேலும், '1992ஆம் ஆண்டில் தரப்பட்ட குறைந்த அதிகாரத்திலும், எங்களுக்கு இருந்த குறைந்த அதிகாரங்களிலும் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், இவர்கள் எல்லோரையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். முன்னர் எங்களுக்கிருந்த அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் மஹாவெலி அதிகாரசபை போன்றவற்றால், எங்களுக்குத் தரப்பட்டுள்ள உரித்துகள், அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
தான்தோன்றித்தனமாக எங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன' என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இறுதிப் போரின் போது, காங்கிரஸ் கட்சியே இந்தியாவில் ஆட்சியில் காணப்பட்டதோடு, முக்கிய அமைச்சராக சிதம்பரம் காணப்பட்டிருந்த நிலையில், இறுதிப் போர் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினாரா, அது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டனவா எனக் கேட்கப்பட்டபோது, ஒரு விருந்தினராக அவர் வந்துள்ளதாகவும், தன்னைச் சந்திக்கும் ஆவலில் வந்துள்ள அவரிடம் அவ்வாறான வினாக்களைக் கேட்க விரும்பியிருக்கவில்லை எனத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவர் ஒருவேளை இன்னமும் இந்தியாவின் அமைச்சராக இருந்திருந்தால், அதைக் கேட்டிருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறைவேற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோது, 'தற்போது மாகாணமும் மத்தியும் சேர்ந்து, சுமுகமான உறவை ஏற்படுத்தவும், அதனூடாக தமிழ் மக்களுக்கு நல்ல வருங்காலத்தை ஏற்படுத்த காலங்கனிந்துள்ளது என அவர் தெரிவித்தார்' என, முதலமைச்சர் பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .