Thipaan / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப. தெய்வீகன்
நீங்கள் சிங்கள இராச்சியத்தை நிறுவ முற்பட்டால் நாங்கள் தமிழீழ இராச்சியத்தை தோற்றுவிப்போம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்துள்ளார்.
மாவை சேனாதிராசா ஒரு பழுத்த அரசியல்வாதி. பன்னெடுங்காலமாக இலங்கை அரசியலில் முக்குளித்து முழுதும் கண்டவர். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அவரது பயணம் நீண்ட வரலாறு கொண்டது. பதின்ம வயதுகளிலேயே தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயற்பட்டவர்.
இப்போது போலவே அப்போதும், இவரும் இவர் போன்றவர்களும் முழங்கிய மேடைப் பேச்சுக்களினால் வசியம் கொண்ட பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது வரலாறு. இளைஞர்களைக் கொதிநிலையில் வைத்திருப்பதற்கு உணர்ச்சிப் பேச்சுக்களால் ஒலிவாங்கியை கடித்துக்குதறுவது ஒன்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வகுப்பெடுக்கவேண்டிய விடயங்கள் இல்லை.
ஆனால், அப்படிப்பட்ட தமிழ்த் தலைவர்களின் பராம்பரிய அரசியல் மரபுகள், அவர்களில் சிலருக்கு ஏற்பட்ட கசப்பான வரலாறுகளினால் கடந்தகாலங்களில் வழக்கொழிந்து போயிருந்தன. அதற்குப்பிறகு தேர்தல் காலங்களில் மட்டும் அர்த்தமே இல்லாத பிரசார மேடைகளில் இவ்வாறான உணர்ச்சி பேச்சுக்கள் அறிக்கைகளை நிறைப்பது வழக்கம்.
ஆனால், இன்று தமிழினம் நின்றுகொண்டிருப்பது ஒரு வரலாற்று நெடுஞ்சாலை. இதில் பொறுப்புடன் பயணித்து ஒரு விடிவை நோக்கி முன்னேற வேண்டிய கட்டாய தேவையுடன் அந்த இனம் வலிகளை பொறுத்துக்கொண்டு எழுந்து நிற்கிறது.
சிங்கள தேசம் முதல் உலகின் பல நாடுகளிலும் ஆட்சி மாற்றங்களை மக்கள் தீர்ப்பளித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஈழத்திலுள்ள மக்கள் மாத்திரம் இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடியிலேயே தமது ஆதரவை இறக்கிவைத்திருப்பது, அதில் உள்ளவர்கள் மீதான மட்டற்ற நம்பிக்கையில் அல்ல. புதிதான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் சக்தியில்லை. தசாப்த கால விடுதலைப் பயணத்தினாலும் அதன் பக்கவிளைவுகளினாலும் பெரிதும் களைத்துப்போன மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டாயத் தெரிவாகவும் கடைசித் தெரிவாகவும் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட இன்றைய காலகட்டத்தில், யதார்த்தங்களை களத்தில் பிரதிபலிக்கக்கூடிய தலைவர்களும் மக்கள் மனங்களை ஊன்றி கற்றுக்கொண்ட அரசியல்வாதிகளும்தான் தேவைப்படுகிறார்களே தவிர, முன்பு போல உணர்ச்சி அரசியல் பேசுபவர்கள் அல்லர்.
இப்போது மீண்டும் மாவை கூறிய விடயத்துக்கு வருவோம்.
அண்மையில் இடம்பெற்ற தமிழினியின் மரணத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்ட முறை பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
'ஜனநாயகப் போராளிகள் கட்சி' என்ற பெயரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்காக, கூட்டமைப்பின் தலைமையை வவுனியாவில் சந்தித்து பேசிய முன்னாள் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், 'உண்மையான போராளிகள் எல்லோரும் குப்பி கடித்து இறந்துவிட்டார்கள். உயிருடன் உள்ளவர்கள் எல்லாம் இராணுவத்துடன் இணைந்து இயங்குபவர்கள்தான்' என்றார்.
இவரைவிட, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில், 'உங்களது அரசியல் பிரவேசத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. உங்களை மீண்டும் புனர்வாழ்வுக்கு அனுப்பவேண்டுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கிறது' என்றார்.
ஆனால், தமிழினியின் இறுதிநிகழ்வின்போது அங்கு தவறாது பிரசன்னமான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், 'எமது தேசிய இனத்தின் ஆன்மாவாக இந்த மண்ணிலே வாழ்ந்த உயிர் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டது' என்று வருத்தப்பட்டார்.
தமிழினியின் மரணத்தை கேள்வியுற்ற மாவை சோனாதிராசாகூட உடனடியாகவே சென்று தனது அஞ்சலியை செலுத்தி தனது 'வரலாற்று கடனை' நிறைவேற்றியிருக்கிறார்.
தமிழினி மாத்திரமல்ல இன்னும் ஆயிரம் ஆயிரம் போராளிகள் அரசியல் அநாதைகளாக அந்தரித்துக்கொண்டிருப்பது கூட்டமைப்புக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர்கள் தெரிய மறுக்கலாம். ஆனால், மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் பிரகாரம் இறுதிப்போரின் பின்னர் சரணடைந்த 12 ஆயிரம் போராளிகள் 'புனர்வாழ்வளிக்கப்பட்டு' விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளனர். தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் குறித்த பெயர் விவரங்களைப் பெற்றுக்கொள்ளக்கோரியும் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விவரக்கோவை ஒன்றை தயாரிக்க கோரியும் கூட்டமைப்பை நோக்கி கடந்த ஆறு ஆண்டுகாலமாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதியிலுள்ள முன்னாள் போராளிகளின் விவரங்களை பதிவுசெய்துகொண்டாலே போதும். அவர்களின் விவரம். அவர்களின் தற்போதைய வாழ்வாதாரம். அவர்களது தேவைகள் என்று எத்தனையோ விடயங்களை பெற்றுக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவிகளையும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொடுப்பதற்கு வழிசெய்யலாம்.
ஆனால், அவ்வாறு ஏதாவது பொறுப்பான நடவடிக்கைகள் களத்தில் நடைபெறுகின்றனவா?
இராணுவத்தினர் வழங்கும் கடனுதவிகளைப் பெற்றுத்தான் தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள். இன்னும் பலர் அவ்வாறு கடனுதவி பெற்றுக்கூட குடும்பத்தை பராமரிக்கமுடியாமல் அந்தரித்துவருகிறார்கள்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் பலத்த வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்தப் பழுத்த அரசியல்வாதிகளின் வீரப் பேச்சுக்களினால் ஈர்க்கப்பட்டு ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்டவர்கள் வாழ வழியின்றி உடலாலும் உள்ளத்தாலும் ஊனப்பட்டு இந்த 'கருமங்களை' பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழினியின் மரணத்துக்கு பின்னர்தான் அவர் கொடிய புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தது பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரிந்தளவுக்கு இவர்களது 'மக்கள் சேவை' கொடிகட்டிப் பறக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான போக்கின் பின்னணியில் மாவை சேனாதிராசா நாடளுமன்றத்தில் போய் 'தமிழீழ தனியரசை தோற்றுவிப்போம்' என்று அறைகூவியிருக்கிறார்.
இது மாவை, இன்று நேற்று கூறும் விடயமல்ல. அவ்வப்போது கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு களத்தில் திசைமாறுகிறது என்ற அச்சம் அவருக்கு ஏற்படும்போதெல்லாம் இந்த கடைசி காண்டீபத்தைப் பயன்படுத்தி கைதட்டு வாங்கிக்கொள்வார். சிறிது காலத்தின் பின்னர், மக்களும் அதனை மறந்துவிடுவர். இந்த சபிக்கப்பட்ட காலச்சக்கரத்தின் மீதுதான் தமிழர்களின் அரசியல் இன்று பயணித்துக்கொண்டிருக்கிறது.
தேர்தலின்போது வழங்கிய ஆணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சென்று தட்டிக்கேட்கும் காலம் கனிந்துவிட்டது. ஜெனீவா தீர்மான கலவரம் ஓய்ந்துவிட்டது. இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் களத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் கரிசனைகளை நிறைவேற்றும் தருணம் இதுவாகும்.
அது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்துடன் ஆரம்பிக்கப்படவேண்டும். சமாந்தரமாக முன்னாள் போராளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் தனித்திட்டம் ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நடவடிக்கைகளை விஸ்தீரணப்படுத்தவேண்டும். அதற்கான தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு செயற்படுவதுகூட ஆரோக்கியமாக அமையும்.
மாகாண சபையும்கூட கடந்த இரண்டு வருடங்களின் மேற்கொண்ட மக்கள் வாழ்வாதார திட்டங்களில் முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் ஆற்றிய பங்கு, பணி குறித்து சுய மீளாய்வு செய்யவேண்டும்.
மரண வீடுகளுக்கு சென்று நினைவஞ்சலி செலுத்துவதுடன் தங்களது கடன் முடிந்துவிட்டதாக எண்ணும் கூட்டமைப்பின் தற்போதைய வங்குரோத்துநிலை மாறவேண்டும். இறந்த போராளிகளும் இறந்துகொண்டிருக்கும் போராளிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வெற்றிகளுக்கான மூலப்பொருட்களல்ல.
போராட்டத்தை தமது வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தின் அச்சாணியாக செயற்பட்ட இந்த போராளிகளின் நலனைப் புறந்தள்ளிவிட்டு பயணப்படுவதற்கு எத்தனிக்கின்ற அரசியல் நிச்சயம் நீண்ட ஆயுள்கொண்டதாக அமையாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .