2026 ஜனவரி 03, சனிக்கிழமை

தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது.

இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

அடுத்த வருடம், ஆசியக் கிண்ணத்தை பங்களாதேஷ் நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் முன்வைத்ததாகவும், அதற்கு ஏனைய நாடுகள் அனைத்தும் இணங்கியதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத்தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்தார். இது தவிர, ஆசிய நாடுகளுக்கிடையே அதிகமான பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

டெஸ்ட் அந்தஸ்துள்ள நான்கு நாடுகளும் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுவதுடன், அடுத்த மாத இறுதியில் இடம்பெறும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஓமான், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் என்பன பங்கேற்று வெற்றி பெறும் அணி ஐந்தாவது அணியாக தொடரில் இடம்பெறும்.   

கடைசி இருமுறையும், 2014, 2012 ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷின் டாக்காவில் ஆசியக்கிண்ணபோட்டிகள் இடம்பெற்றதோடு முன்னர் 2000, 1988 ஆம் ஆண்டுகளிலும் பங்களாதேஷில் இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X