பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும்

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘மடிவதாக”வும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, ஹர்ஜபனும் அஷ்வினும் சட்டரீதியற்ற பந்துவீச்சு முறைகளோடு வருடக்கணக்காகப் பந்துவீசிக் கொண்டிருக்க, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உடனேயே, பிலால் ஆசிப் மீது அக்குற்றச்சாட்டு விதிக்கப்படுவதாகவும் அஜ்மல் தெரிவித்திருக்கிறார். (இதில், பிலால் ஆசிப்-இன் பந்துவீச்சு, தவறானதல்ல எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)

உலகின் முன்னணி பந்துவீச்சாளராகவும் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகவும் இருந்துவிட்டு, திடீரென பந்தை வீசியெறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட, பாகிஸ்தான் அணியிலல்ல, பாகிஸ்தான் குழாமிலேயே இடம் கிடைக்க முடியாமல் போன ஒருவரது, இயலாமையால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இல்லாவிடின், பொறாமையால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என, அஜ்மலின் கருத்துக்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக முடியும். உண்மையிலேயே, அவரது கருத்தில் இயலாமையும் பொறாமையும் கலந்திருந்தன என்பது, ஓரளவு தெளிவானது.

திடீரென திரையிலிருந்து காணாமல் போகச் செய்யப்பட்ட திரை நட்சத்திரங்களும், இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதைக் கண்டிருக்கிறோம். அதிகளவிலான புகழுடன் இருந்துவிட்டு, திடீரென எல்லாவற்றையும் இழப்பதென்பது, இலகுவானதல்ல.
ஆனாலும் கூட, அவ்வாறானவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் காணப்படும் உண்மைத் தன்மைகளை ஆராயாமல் விட்டுவிடவும் முடியாது.

அஜ்மல் தெரிவித்த கருத்துக்களில் இருக்கும் தவறுகளை நேரடியாகச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அவர் இலக்கு வைக்கப்பட்டார் என்பது தவறானது. அனுமதிக்கப்பட்ட 15 பாகை முழங்கை மீட்சி அளவுக்குப் பதில், அவரது முழங்கை மீட்சி அளவு, 40 பாகைக்கும் அதிகமாகக் காணப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அந்தளவு அதிகமான அளவைக் கொண்டிருந்துவிட்டு, தன் மீது இலக்கு வைக்கப்பட்டது என்பது சிறிது சிறுபிள்ளைத்தனமானது என்றே கூறப்பட முடியும்.

அத்தோடு, ஒரு சர்வதேச வீரராக, பந்தை எறிவதில் இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, முழங்கை ‘மடிவு” அல்ல, முழங்கையின் ‘நீட்சி அல்லது மீட்சி” தான் கணக்கிலெடுக்கப்படுவது என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் தவறானது.
ஹர்பஜன் சிங், பந்தை எறிகிறாரா என்றால், அதற்கான பதில் இலகுவானதல்ல. ஆகவே, அது தொடர்பில் உறுதியான பதிலெதனையும் கூற முடியாது. ஆனால், அஜ்மலின் கருத்துக் கொண்டிருந்த உட்கருத்தை ஆராய்வது முக்கியமானது. அண்மைக்காலமாக பந்தை எறியும் பந்துவீச்சாளர்கள் மீது, அதிகளவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள் மாத்திரம் அதிலிருந்து தப்பியுள்ளமைக்கான காரணங்கள் விளக்கப்பட வேண்டும்.

ஹர்பஜன் சிங் மீது, முன்பிருந்தே சந்தேகங்கள் காணப்பட்டன. இரவிச்சந்திரன் அஷ்வின் மீது முன்பு காணப்பட்டது. பிரக்ஜான் ஓஜா மீது காணப்பட்டது. அம்பத்தி ராயுடு மீது காணப்படுகின்றது. இதில், ஒருவர் மீது கூட சர்வதேசப் போட்டிகளில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதில்லை. பிரக்ஜான் ஓஜா மீது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உள்ளக செயற்குழுவொன்றே முறைப்பாட்டை மேற்கொண்டு அவரது பந்துவீச்சைத் திருத்தியது. உள்ளகச் செயற்குழுக்களால் அவரது பந்துவீச்சில் தவறைக் கண்டுபிடிக்க முடியுமெனில், சர்வதேச நடுவர்களால் அதைச் செய்ய முடியாது போனது ஏன் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

மிக மோசமான பந்துவீசும் பாணியைக் கொண்டுள்ள அம்பத்தி ராயுடு, இதுவரையிலும் போட்டி மத்தியஸ்தர்களால் முறைப்பாட்டுக்கு உள்ளானதில்லை. ஹர்பஜன் மீது அண்மைக்காலத்தில் முறைப்பாடு உருவானதில்லை.

இவர்களெல்லோரும் பந்தை வீசியெறிகிறார்கள் என்பது இதன் கருத்தல்ல.பந்துவீச்சுச் சோதனையின் போது, அவர்களின் பந்துவீச்சென்பது, விதிகளுக்கு உட்பட்டதாக மாறலாம். இது, வீரர்களின் நேர்மையையோ அல்லது திறனையும் கேள்விக்குட்படுத்துவது கிடையாது. மாறாக, சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியைக் கொண்டுள்ளவர்கள் மீது, இதுவரையிலும் என்ன காரணத்துக்காக முறைப்பாடு மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், நடுவர்களும் போட்டி மத்தியஸ்தர்களும், வெறுங்கண்ணால் காண்பதை வைத்துத் தான் முறைப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

முத்தையா முரளிதரன், சச்சித்திர சேனநாயக்க, சயீட் அஜ்மல், தரிந்து கௌஷால், சுனில் நரைன், மொஹமட் ஹபீஸ், கேன் வில்லியம்ஸன், மார்லன் சாமுவேல்ஸ், ஷேன் என, முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட அனைவரினதும் பந்துவீச்சு முறைகளும், வெறுங்கண்ணுக்கு, சந்தேகத்துக்குரியனவாகவே காணப்பட்டன. இதில், முரளிதரனின் பந்துவீச்சில் தவறு காணப்பட்டிருக்கவில்லை, தரிந்து கௌஷாலின் தூஸ்ரா மாத்திரம் சில பாகைகளால் தவறாக அமைந்தது. ஆக, வெறுங்கண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, பிரக்ஜான் ஓஜா ஆகியோர் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாமைக்கு, உலக கிரிக்கெட்டை முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் அணிக்காக விளையாடுவதா காரணம் என்ற வினா எழுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையினை இந்தியா உள்ளிட்ட ‘பெரிய” நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, சிறிய நாடுகளை ஒதுக்க முற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற நிலையில், கிரிக்கெட் விடயங்களிலும் அவ்வாறான ஆதிக்கம் காணப்படுமாயின், கிரிக்கெட்டிலிருந்து இரசிகர்களை தூர விலக்கவே உதவும் என்பது யதார்த்தம்.


பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.