2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 05 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில், காணாமல் போகச் செய்வதாக அச்சபை மேலும் தெரிவிக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'சிறைக்கும் கல்லறைக்கும் நடுவில்" என்ற தலைப்பில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் நான்கு பிரிவுகளான இராணுவப் புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிரிவு, அரசியல் பாதுகாப்புப் பிரிவு, பொது புலனாய்வுப் பிரிவு ஆகியனவும் இராணுவப் படைகளும் சிரிய அரசாங்கத்தோடு தொடர்புடைய ஆயுதக்குழுக்களும், இக்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, மார்ச் 2011க்கும் ஓகஸ்ட் 2015க்கும் இடையில், 58,148 சிவிலியன்கள் உட்பட, 65,116 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாகக் அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்தோடு, உண்மையில் காணாமல் போகச் செய்யப்பட்டோர், இன்னமும் அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திடம் மாற்றுக் கருத்துக் கொண்டோர், அரசாங்க உத்தியோகத்தர்கள், பிரியக்கூடிய வாய்ப்புக் கொண்டதாகக் கருதப்பட்ட படைவீரர்கள், இராணுவத்தால் தேடப்படுவோரின் குடும்ப உறுப்பினர்கள் என, இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டோரின் பட்டியல், விரிவடைந்து செய்வதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடத்தப்படுவோர், மோசமான வசதிகளையுடைய சிறைகளிலும் இடங்களிலும் தடுத்து வைக்கப்படுவதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, மின்சார அதிர்ச்சி, அடித்தல், எரித்தல், பாலியல் வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக, அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இந்தச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டோர் பற்றிய விவரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான கறுப்புச் சந்தையும் காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. சில டொலர்கள் தொடக்கம் நூற்றுக் கணக்கான டொலர்கள் வரையிலான கட்டணத்தை அறவிட்டு, அங்குள்ளவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதாகவும், சிரிய அரசாங்கத்துக்கும் படைகளுக்கும் நெருக்கமானவர்களே, இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அவ்வறிக்கை மேலும் குற்றஞ்சாட்டுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X