2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

Thipaan   / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.

நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகிய மூவரும், மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் போராட்டத்தை இடை நிறுத்த வைத்தனர்.

நவம்பர் 7ஆம் திகதிக்குள், கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை, இவர்களே காவிச் சென்றிருந்தனர். அந்தக் காலக்கெடு நாளையுடன் நிறைவடையப் போகிறது.

எனினும், இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்தினால் தீர்க்கமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னர், கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கும் வகையில் கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.

அந்த அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரிப்பதற்காக, தமிழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டால், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் படையினருக்கும் அத்தகைய பொதுமன்னிப்பை அளிக்க வேண்டியிருக்கும் என்று, அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ஷவும், சம்பிக்க ரணவக்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் நியாயம் கூறியதாகவும் தகவல்கள் உள்ளன.

இதற்குப் பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் ஓர் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற யோசனை, அரச தரப்பினால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது.

அத்துடன், தண்டனைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும், அரசதரப்பு கைவிரித்தது.

இந்தநிலையில், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளவர்களையும், விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் மாத்திரம், பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், பிணையில்- அதுவும், ஒரு பகுதியினரை மட்டும் விடுவிக்கும் யோசனையை அரசியல் கைதிகள் ஏற்கெனவே நிராகரித்து விட்டனர். பிணையில் விடுவிக்கப்படும் அரசியல் கைதிகள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் பிரச்சினைகளை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனினும், அரசியல் கைதிகளைப் பிணையில் விடுவிப்பதற்கான, எத்தகைய உருப்படியான நடவடிக்கைகளையும் இதுவரை அரசாங்கம் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்திருந்த காலக்கெடு நாளையுடன் நிறைவடையப் போகிறது. இந்தக் காலக்கெடுவுக்குள் தமது விடுதலை குறித்து முடிவெடுக்கப்படாது போனால், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவோம் என்று, கடந்த மாதம் போராட்டத்தை இடைநிறுத்திய போதே அரசியல் கைதிகள் கூறியிருந்தனர்.

இந நிலையில், நாளைக்குள் அரசாங்கம், அரசியல் கைதிகள் விவகாரத்தில், தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறினால், என்ன நடக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. ஒருவேளை, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம், சிலவேளைகளில் இன்னும் குறுகிய காலஅவகாசம் அளிக்கவும் அவர்கள் முனையலாம்.

அரசியல் கைதிகள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயம் அல்ல. அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்ன செய்யப் போகின்றன என்பது தான் கேள்விக்குரிய விடயமாக உள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு, இருக்கின்ற பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

சர்வதேச மட்டத்திலும், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை-முறையான தீர்மானத்தை காலதாமதம் இன்றி நிறைவேற்றத் தவறினால், அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும். ஏனென்றால், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதிலும் சரி, இலங்கையில் ஜனநாயக மாற்றத்தை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் சரி, அதிகளவில் பங்களித்தவர்கள் தமிழர்கள் என்ற உண்மையை யாராலும் மறக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்காது போனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது அவர்கள் ஓரளவுக்கேனும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அவர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கான கடைசி வாய்ப்பு நாளை வரை தான் கிடைக்கும். கைதிகளை விடுவிக்க அதற்கான சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற போதிய காலஅவகாசம் தேவை என்று அரசாங்கம் வாதிட முடியாது. ஏனென்றால், இது இன்று நேற்று எழுந்த பிரச்சினை அல்ல.

ஆட்சி மாற்றம் இடம்பெற்று, 10 மாதங்கள் முடிந்து விட்டன. இந்தக் காலப் பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு நவம்பர் 7ஆம் திகதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதியே உறுதிமொழி அளித்திருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் செய்ய முடியும் என்பதால் தான் அவர் அந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

எழுத்து மூலம் தமக்கும், அரசியல் கைதிகளுக்கும் ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.

அவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதியைக் காப்பாற்ற ஜனாதிபதி தவறுவாரேயானால், அது தமிழ் மக்களிடையே அரசாங்கம் பற்றிய நல்லெண்ணத்தை பெரிதும் பாதிக்கும்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விடயம் தனியே 217 அரசியல் கைதிகளின் விடுதலையுடன் தொடர்புடையதாக மட்டும் பார்க்கப்படவில்லை.

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் தற்துணிவும், அரசியல் விருப்பும் அரசாங்கத்துக்கு இருக்கிறதா என்பதற்கான ஒரு கணிப்பீடாகவும் அமையும்.

இதுவரை காலமும், தமிழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றி எழுதுவதற்கு இன்னும் ஒரே ஒருநாள் காலஅவகாசம் மட்டும் தான் இருக்கிறது.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் நடுநிலை வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாது போனால், அவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்டத்தில் குதிக்கும் என்று முன்னர் கூறியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

அவ்வாறாயின், நாளைக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியப்படாது போனால், சுமந்திரன் முன்னர் கூறியவாறு, கூட்டமைப்பு போராட்டத்தில் குதிக்கப் போகிறதா?

அரசியல் கைதிகளுக்கு ஆதரவான அடையாள உண்ணாவிரதம் என்று, நல்லூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில், கூட்டமைப்பினர் சிலர், காலை  உணவுக்குப் பின் வந்து அமர்ந்து விட்டு, மதிய உணவுக்கு வீடு திரும்பியது போன்ற போராட்டங்கள் நடத்தப் போகிறதா?

அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் கைதிகளுக்கு வாக்குறுதிகளை அளித்து அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்த இரா.சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விடயத்தில் கூடுதல் கடப்பாடு இருக்கிறது.

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஜனாதிபதியின் உறுதிமொழியைப் பெற்றுக் கொடுத்த இவர்கள், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது போனால் அதற்காக என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தமிழ் மக்களிடம் இருக்கிறது.

இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு உறுதியான- ஒன்றுபட்ட எதிர்ப்பைக் காட்டி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த கால அவகாசத்துக்குள் அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் போது, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இதே இழுபறி நிலை அரசியல்தீர்வு விவகாரத்திலும் நீடிக்கும்.

எனவே, அரசியல் தீர்வையோ, அரசியல் கைதிகளின் விடுதலையையோ விரைவுபடுத்த வேண்டுமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் மீது கூடுதல் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

அழுத்தங்கள் குறைக்கப்படும் போது தமிழர்களின் கோரிக்கைகளை, எந்தவொரு அரசாங்கமும், நிறைவேற்ற முனையாது. மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்காது. இது மயிலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக நேரில் கண்ட உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X