"> Tamilmirror Online || சுமந்திரனுக்கு எதிரான கோசம்

2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

சுமந்திரனுக்கு எதிரான கோசம்

Thipaan   / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எங்கட ஆணியை நாங்கள் புடுங்குவம், நீ புடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியா, சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் எழும்பிய கோசம் இது. இப்படியான பல கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டன.

அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் அரங்கினுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எம்.ஏ.சுமந்திரனை உரையாற்றுவதிலிருந்து தடுத்து வெளியேற்றுவதில் குறியாக இருந்தார்கள். அதில், அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்ற வெற்றியும், அது ஒரு தளத்தில் கொண்டாடப்படும் விதமும் பெரும் அச்சுறுத்தலானது.

அதீத உணர்வூட்டலினால் அடிப்படைய ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளி வளர்ந்தவர்களாக தமிழ்ச் சமூகம் தம்மை தொடர்ந்தும் முன்னிறுத்தி வருகின்றது. எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் அதன் வடிவமே. அது, ஆர்ப்பாட்டம் என்கிற நிலையைத் தாண்டி காடைத்தனம் என்கிற அளவில் நோக்கப்பட வேண்டியது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த கருத்துக்களும், கோசங்களும், அவர்களின் நடவடிக்கைகளும் அதனையே பிரதிபலித்தன.

எம்.ஏ.சுமந்திரன் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு 58,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவும், சர்வதேச விவகாரங்களுக்குமான பொறுப்பாளராகவும் இருக்கின்றார்.

அவர், தனக்கு வாக்களித்த மக்களின் நலத்திட்டங்களில் எவ்வளவு அக்கறையோடு செயலாற்ற வேண்டுமோ, அதேயளவுக்கு தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களையும் முன்னெடுக்க வேண்டும். அதனை முன்னிறுத்திய செயற்பாடுகளில் குறைபாடுகள் காணப்படுகின்ற போது, விமர்சனங்களும், மாற்றுக் கருத்துக்களும் அவசியமானவை.  ஆனால், அவர் தனக்கான பொறுப்புக்களை முன்னெடுப்பதைத் தடுப்பதையோ, முடக்குவதையோ பெரும் வெற்றியாக கொள்ள முடியாது. அது, தார்மீக அணுகுமுறையும் அல்ல.

கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ்த் தளம் இருவேறு துருவங்களாகவே தன்னை முன்னிறுத்தியது. தாயகத்திலுள்ளவர்கள் ஒரு பக்கத்திலும், புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் இன்னொரு பக்கமாகவும் பெருமளவு பிரிந்து நின்றார்கள். தேர்தல்களின் வெற்றி தோல்விகளில் அதன் பிரதிபலிப்பை கண்டுகொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அதன் விளைவும், வன்மமும் இன்னமும் பெரிய இடைவெளியை தாயகம்- புலம்பெயர் தேசங்களில் உருவாக்கி விட்டிருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என்று தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்களும் கருதியிருக்கவில்லை. அவர், மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராகவே அரசியலரங்கிற்கு வருவார் என்றும் நம்பியிருந்தனர்.  ஆனால், அந்த நம்பிக்கை அப்படியே மாற்றம் கண்டது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கணிசமான வாக்குகளோடு வெற்றிபெற்றார்.

 எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியை உறுதி செய்த காரணிகளில் புலம்பெயர் ஊடகங்களின் (குறிப்பாக, இணைய ஊடகங்கள்) செயற்பாடுகள் முக்கியமானவை. அவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பிரசாரங்களின் போக்கில் எம்.ஏ.சுமந்திரனை அதிகமாக குறிவைத்தன.

அது, பொதுத் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பில் தாயகம்- புலம்பெயர் தேசங்களில் காணப்பட்ட நீண்ட விவாதங்களின் போக்கில் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதாரவாக மாறின. தாயகத்திலுள்ள மக்களே வாக்காளர்களாக இருக்கின்ற நிலையில், புலம்பெயர் ஊடகங்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்தன. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியிலும், எம்.ஏ.சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகளிலும் பிரதிபலித்தன.

அதன்பின்னர் எம்.ஏ.சுமந்திரனின் அணுகுமுறையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது. புலம்பெயர் தேசங்களிலுள்ள ஊடகங்கள் தொடர்பிலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் தொடர்பிலோ அவர் மிகுந்த எள்ளல் மனநிலையோடு அணுகினார். இன்னமும் அவர் அந்த மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

இனியும் மாற்றிக் கொள்ளவார் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு, அவர் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று முக்கியமானது. அதாவது, தாயகத்திலுள்ள மக்களின் விருப்பத்தை புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் மதிக்க வேண்டும் என்பது.  தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது தாயகத்தையே அடிப்படையாக கொண்டது. தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளும், விருப்பங்களும் அதன் துணைக்கூறுகளினால் மதிக்கப்பட வேண்டியது. தாயகத்திலுள்ள மக்களைப் புறந்தள்ளிக் கொண்டு விடுதலையையோ, தீர்வினையோ பெற்றுக் கொள்ள முடியாது. அது, அர்த்தமுள்ள செயற்பாடும் அல்ல.

 கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் மூன்று விடயங்கள் சார்ந்து அதிகம் பேசப்பட்டார். முதலாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான அவரது நிலைப்பாடு. இரண்டாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அவரின் நடவடிக்கைகளை முன்னிறுத்தியமை மற்றும் அவருக்கு எதிரான பொய்ப்பிரசாரங்கள் சார்ந்தவை. மூன்றாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமை 'இனச்சுத்திகரிப்பு' என்று அவர் குறிப்பிட்ட விடயம் சார்ந்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாடு கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டமையை முன்னிறுத்திய எழுந்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னரே இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்புக்குள்ளிலிருந்து முதலமைச்சர் தன்னை விடுவித்துக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு சென்றுவிட்டார். அதன் பிரதிபலிப்பினையே, முதலமைச்சர் பொதுத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தினார்.

அதன்போக்கிலான விடயம், கட்சி சார்ந்ததாகவும், மக்களின் உணர்வுவெளிப்பாடு சார்ந்ததும் ஆகும். குறித்த விடயத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் மக்களுக்கு பெரும் அதிருப்தியுண்டு. ஆனால், அவர் நீக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டிருக்கவில்லை. அப்படியான நிலையில், கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் தொடர்பிலான விடயத்தை எம்.எ.சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்கலாம். அது, உட்கட்சி சார்ந்த விடயமும் கூட.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கத் தீர்மானம், உள்ளக விசாரணைக்கு ஆதரவானதாக முன்வைக்கப்பட்டது. அதற்கு, எதிர்ப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளும் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவில்லை அல்லது, அவரின் செயற்பாடுகளில் பாரிய குறைகள் காணப்பட்டன என்பது சார்ந்ததாக எழுந்தவை.

அத்தோடு, சுவிஸில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவரினால் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் அவற்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பதில்களினூடு தோன்றிய சர்ச்சை சார்ந்தது. அதாவது, இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டார் என்கிற விடயம் தொடர்பிலானது. ஆனால், கேள்வி எழுப்பிய இரு நபர்களினாலும் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவினூடே குறித்த விடயம் பொய்த்துப் போனது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள் அதனை வைத்து முன்னெடுத்த பிரசாரங்கள் சில நாட்களுக்குள்ளேயே அவர்களுக்கு எதிராக திருப்பின.

1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயம் தார்மிக ரீதியிலும், மானுட குலத்துக்;கு எதிரானது என்கிற ரீதியிலும் பெரும் குற்றம். ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அதனை இராணுவ ரீதியிலான பாதுகாப்பு அணுகுமுறையில் செய்ய வேண்டிய ஏற்பட்டிருக்கலாம்.

அது, இராணுவ அணுகுமுறை சார்பில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது, மிகப்பெரிய தவறு. அந்தத் தவறினைத் திருத்திக் கொள்வது தொடர்பிலான உறுதிப்பாட்டினை 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தனர். அதற்காக, நிகழ்த்தப்பட்டது தவறில்லை என்பதல்ல. அந்த விடயத்தினை எம்.ஏ.சுமந்திரன் கையாளும் போது அது, புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் பெரும் உணர்வுக்கும் எதிரானதாக மாறியிருக்கலாம்.

'எமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக நீதியைக் கோரும் தரப்பு என்கிற வகையில், நாம் நிகழ்த்திய அநீதிகளுக்கு நீதியை வழங்குவதும், மன்னிப்புக் கோருவதும் அடிப்படையானது.' அதன்போக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தை எம்.ஏ.சுமந்திரன்  கையாண்டிருந்தால் அது ஒருபோதும் தவறாக அமையாது. அது, அரசியல் ரீதியாகவும் முன்னோக்கியதாகவே கொள்ளப்பட வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய அரசியல்- ஆயுதப் போராட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றார்கள்.  உணர்வு ரீதியாக விடுதலைப் புலிகள் இன்னமும் தமிழ் மக்களோடு இருக்கின்றார்கள் என்பது உண்மை.  ஆனால், அரசியல் ரீதியான செயற்பாடுகள், நகர்வுகளின் போக்கில் முன்னோக்கி பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு.

அதற்கு, உணர்வுகளுக்குள் மாத்திரம் தங்கியிருப்பதனால் பலனில்லை. அப்படியான நிலையில், யதார்த்தத்தினை உள்வாங்கி பயணிக்க வேண்டும். மாறாக, 'தலைவர் மீண்டும் வருவார், புலிப்படை வெல்லும்' என்று கோசங்களை எழுப்புவதனால் வெற்றி கிடைத்துவிடும் என்று கருதுவது பாரிய தோல்வியை வழங்கும். அப்படியான நிகழ்வின் கூறாகவே எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அவுஸ்திரேலிய ஆர்ப்பாட்டத்தினையும் பார்க்க முடியும்.


You May Also Like

  Comments - 0

  • Antony Gratian Friday, 13 November 2015 02:07 AM

    An excellent and honest analysis of a very difficult and hostile situation. An enlightening piece for all concerned. Thank you. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்! சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் இங்கே ஓர் செய்தி இருக்கிறது. பாடம் கற்பதற்கும் திருந்துவதற்கும் ஒருபோதும் தயங்கக்கூடாது. அதுதான் பெருந்தன்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X