Shanmugan Murugavel / 2015 நவம்பர் 17 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இடம்பெற்ற மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நகரங்கள் மீதும் ஆயுதக் குழுக்கள் மீதும் உலகின் கவனம் திரும்பியுள்ள நிலையில், பெய்ரூட்டைச் சேர்ந்த ஒருவர், கதாநாயகனாகப் போற்றப்படுகிறார்.
32 வயதான அடேல் டேர்மொஸ், தனது வாழ்க்கையைப் பணயம் வைத்து, தற்கொலைக் குண்டுதாரியிடமிருந்து ஏனையோரைப் பாதுகாத்தமைக்காகவே கதாநாயகனாகப் போற்றப்படுகிறார்.
அடேல் டேர்மொஸ், தனது பெண் குழந்தையுடன் தென் லெபனானிலுள்ள ஷியா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட போது, வெளியே ஏற்பட்ட சத்தத்தைத் தொடந்து, அது என்னவெனப் பார்க்க வெளியே வந்துள்ளார். அதன்போது, தற்கொலை அங்கியணிந்த குண்டுதாரியொருவர், 'அல்லாஹூ அக்பர்" எனச் சத்தமிட்டபடி, அந்தப் பள்ளிவாசலுக்குள் புகுந்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, முஸ்லிம்களல்லாதோரை மாத்திரமன்றி, ஷியா முஸ்லிம்களையும் இலக்கு வைக்கும் நிலையில், அங்கிருந்தோரைக் கொல்வதற்காகவே அங்கு புகுந்துள்ளார் என நம்பப்படுகிறது.
எனினும், அந்தக் குண்டுதாரியை மறித்த டேர்மொஸ், அவருடன் போராடி அவரை, நிலத்தில் வீழ்த்தியுள்ளார். அதன்போது, தன்னிடமிருந்த தற்கொலை அங்கியை அக்குண்டுதாரி வெடிக்க வைக்க, டேர்மொஸ் இறந்துள்ளார்.
தனது கணவன் இறந்துள்ள போதிலும், அவரின் உயர் தியாகம் காரணமாக தான் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவரது விதவை மனைவி பஸ்ஸிமா டேர்மொஸ், தனது குடும்பத்தின் நற்பெயரை அவர் உயர்த்தியுள்ளதாகவும், தனது கணவன் பற்றிப் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தத் தியாகத்தையடுத்து, பெய்ரூட்டில் மாத்திரமல்ல, உலகெங்கிலுமுள்ள மக்கள், அவரைக் கதாநாயகன் என அழைக்கின்றனர். சமூக வலைத்தளங்களிலும், அவரைப் புகழ்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .