2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆட்டம் காண்கிறதா அரசாங்கம்?

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்களுக்குள் அதிகரித்து வரும் உள்முரண்பாடுகளும், அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் அதிகரித்துள்ளதும், தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றது.

ஆனால், இப்போது நடப்பது நல்லாட்சியா என்று அரசாங்கத்துக்குள் இருக்கும் அமைச்சர்களே கேள்வியெழுப்பும் அளவுக்கு, உள்முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது.

நெகிழ்வுத் தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடித்த - சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்ட, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளை, தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாகச் சமாளித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இரு பிரதான கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டு அரசாங்கம், அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்குத் துணையாக அமையும் என்ற கருத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில், அமைச்சர்களுக்கிடையிலான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக, அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பான நடவடிக்கைகள் விவகாரத்தில், அரசாங்கத்துக்குள் தீவிரமான கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அவன்ட் கார்ட் நிறுவனத்துக்குச் சார்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்ட, சட்டம், ஒழுங்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரான திலக் மாரப்பன, அரசியல் அழுத்தங்களினால் பதவி விலக நேரிட்டது. இத்துடன் இந்த விவகாரம், முடிவுக்கு வரவில்லை.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவன்ட் கார்ட் நிறுவனம் சார்பாகவே கருத்துக்களை வெளியிடுகிறார். அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் கருத்தும், அதற்குச் சாதகமாகவே இருப்பதைக் காண முடிகிறது.

அதேவேளை, அமைச்சர்கள் ராஜித சேனாரத்னவும் சம்பிக்க ரணவக்கவும், அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக மட்டுமன்றி, அதற்கு ஆதரவு தருவதாக ஐ.தே.க அமைச்சர்களையும் விமர்சித்து வருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, இந்த விவகாரம் பலமுனைத் தலைவலிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள், நடவடிக்கைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பது முதலாவது பிரச்சினை.

அதற்குச் சாதகமாகவும், எதிராகவும் அமைச்சர்கள் மோதிக் கொள்வது இன்னொரு பிரச்சினை.

இந்த மோதலின் விளைவாக, அரசாங்கத்தில் உள்ளவர்களே தமக்குள் சேற்றை அள்ளி வாரிக்கொள்வது, மற்றொரு பிரச்சினை.

இதைவிட, தமக்குச் சார்பானவர்கள், ஆதரவாளர்களின் நிலைப்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய இக்கட்டான நிலை, இன்னொரு பிரச்சினை.

அதைவிட, அவன்ட் கார்ட் மீதான நடவடிக்கைகள், விசாரணைகள் விடயத்தில், அந்த நிறுவனத்தின் கடுமையான குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதனை, படையினருக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக திருப்பி விடும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கட்டத்தில், அமைச்சர்களுக்கிடையில் தொடங்கியிருக்கும் மோதல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள் விடயத்தில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க  போன்றோரால், இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இறுக்கமான ஒரு தலைமைத்துவத்தின் கீழ், இவ்வாறான குற்றச்சாட்டுகள், முரண்பாடுகள் நீடிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், இவ்வாறான ஒரு நிகழ்வை காண முடிந்திருக்காது. அவ்வாறு குரல் எழுப்பியிருந்தால் அவர்கள் உடனடியாகவே பதவியில் இருந்து

தூக்கப்பட்டிருப்பார்கள். துரத்தப்பட்டிருப்பார்கள்.

தாம், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் எவ்வாறு அடக்கி வைக்கப்பட்டிருந்தோம் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால், இப்போதைய அரசாங்கத்தில் அத்தகைய இறுக்கமான போக்கு இல்லை. இது ஜனநாயகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், தலைமைத்துவக் கட்டுக்கோப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அதைவிட, அமைச்சர்களுக்கிடையில் கூட்டுப் பொறுப்பின்மை இருப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கூட்டுப் பொறுப்பில்லாத ஓர் அரசாங்கத்தினால், நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே உண்மை.

தற்போதைய அரசாங்கத்துக்குள் கூட்டுப் பொறுப்பின்மை தலைதூக்கியுள்ளமைக்கு முக்கிய காரணம், இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளமை தான்.

ஒரே அரசாங்கத்துக்குள் இருந்தாலும், பச்சைக்கும், நீலத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் இன்னமும் களையப்படவில்லை.

எல்லா அமைச்சர்களுமே, தமது கட்சியின் நிறத்துக்குள் நின்று செயற்படவே முனைகின்றனர். பொதுநிலைப்பட்டு இயங்கத் தயாராக இல்லாததால், அரசியலில் முதிர்ச்சி பெற்ற அமைச்சர்களால் கூட, கூட்டுப் பொறுப்புடன் நடக்க முடியாதுள்ளது.

அரசாங்கத்துக்கு ஏற்படும் முரண்பாடுகள், ஊடகச் சந்திப்புகளில் எப்போது பகிரங்கமாகப் பேசப்படத் தொடங்கியதோ, அப்போதே இந்த அரசாங்கத்தின் ஆணி வேர் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது.

முன்னைய அரசாங்கத்தில், ஊழல்கள், மோசடிகள் நடந்த போது, கைகட்டிக் கொண்டு நின்று விட்டு, கடைசி நேரத்தில் எதிரணியுடன் இணைந்து கொண்டவர்கள், இப்போதைய அரசாங்கத்தைக் காட்டமாகவும் பகிரங்கமாகவும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளமை விந்தையானது.

அதுபோலவே, ஐ.தே.க அமைச்சர்கள் பலரும், சர்ச்சைக்குரிய விவகாரங்களில், அமைதியைக் கடைப்பிடிக்கத் தவறியுள்ளதும், குழப்பங்கள் தீவிரமடையக் காரணமாகியுள்ளது.

ராஜித சேனாரத்னவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடக்க முடியவில்லை. காரணம், அவர் தான் முதன்முதலில், மஹிந்தவை விட்டு மைத்திரிபால சிறிசேனவுடன் வெளியே வந்தவர். ஜனாதிபதி பதவியில் மைத்திரிபால சிறிசேன அமர்வதற்கு முக்கிய காரணமானவர் அவர்.

எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதேவேளை, விஜயதாஸ ராஜபக்ஷ போன்றவர்களையும் ரணில் விக்கிரமசிங்கவினால் அடக்க முடியாதிருக்கிறது. இங்கு வேடிக்கையான விடயம் ஒன்று உள்ளது.

அவன்ட் கார்ட் விவகாரத்தில் மோதிக் கொள்ளும் ராஜித சேனாரத்னவும், விஜயதாஸ ராஜபக்ஷவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து தான் வெளியே வந்தவர்கள்.

அரசாங்கத்துக்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் சேறுபூசத் தொடங்கியுள்ளமை, கூட்டு எதிரணி என்ற பெயரில் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு வாய்ப்பாக மாறியுள்ளது.

அவர்களுக்குத் தான், இந்த முரண்பாடுகள் அதிக ஆதாயத்தைப் பெற்றுத் தரக் கூடியன.

தற்போதைய அரசாங்கம் ஆட்டம் கண்டால், ஐ.தே.கவினருடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று மஹிந்த தரப்பு கனவு காண்பதாகவே தெரிகிறது. அவன்ட் கார்ட் விவகாரம், அமைச்சரவைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குத் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

மங்கள சமரவீரவைப் பிரதமராக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கவே இந்தத் திட்டத்துடன் காய்களை நகர்த்துவதாகவும் கூட சில ஊடகங்கள், செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், நடைமுறையில் இது, சாத்தியமான ஒன்றாக இருக்காது என்பதே உண்மை.

தேசிய அரசாங்கம் தொடர்பாக இரு பிரதான கட்சிகளும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டின் முக்கியமான அம்சம், கட்சி தாவுவோரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் தலைமை தாங்கும் இருகட்சிகளும், இந்த இணக்கப்பாட்டை மீறமாட்டாது.

இந்த இரண்டு தலைவர்களுக்குமே, சர்வதேச ஆதரவு உள்ளது. அரசியல் செல்வாக்கும் உள்ளது. கட்சித் தாவலை ஊக்குவிக்குவித்தால் அது, பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

எனவே, அரசாங்கத்தில் இருக்கும், முரண்பாடுகள், கட்சித் தாவல் பற்றிய இணக்கப்பாட்டுக்கு சவாலாக மாறும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேவேளளை, ஐ.தே.கவின் உதவியுடன், சுதந்திரக் கட்சியினர் ஆட்சியமைப்பதற்கு, மைத்திரிபால சிறிசேன இடமளிக்கமாட்டார்.சந்திரிகா குமாரதுங்கவும் அத்தகையதொரு குறுக்கு வழியில் தனது ஆதரவாளர்களை வழி நடத்த மாட்டார். இது, அவர்களின் இமேஜை உடைத்து விடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

எனவே, இப்போதைய அரசாங்கத்துக்கு உள்ளிருந்து ஆபத்து ஏற்படும் என்று கருத முடியாது. ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கணிசமாக வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் இணைந்து கொள்ளலாம்.

ஆனாலும் அது, ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, அமைச்சர்களுக்குள் தலைதூக்கியிருக்கும் மோதல்களின் விளைவாக, பரஸ்பரம் வீசும் குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதுபற்றி அமைச்சர் ஒருவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடுமையாகக் கண்டித்தாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அது விஜயதாஸ ராஜபக்ஷ அல்ல என்றும், அவர் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட காலத்தில், தாய்லாந்து சென்றிருந்தார் என்றும் நீதி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, இந்த விடயத்தில் விஜயதாஸ ராஜபக்ஷ கொண்டிருக்கிற அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கிடையில் தலைதூக்கும் மோதல்களை, ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் தவறுவார்களேயானால் அது, அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்கும். அது, உடனடியாக ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நகர்வுகளை முடக்கிப் போட்டு விடும். அதற்குள், இனப்பிரச்சினை விவகாரமும் அடங்கும்.

அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கறைகள் படிவது தவிர்க்க முடியாத விடயமாகி விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .