2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படி தாண்டிய விக்கி; பரிதாபமானது கட்சி

Thipaan   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சற்றுக் குழம்பிப்போயுள்ளது. அதற்கு காரணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அல்லாத இருவருக்கு இடையிலான உள் முரண்டுபாடுமட்டும்தான் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளபோதும், இப்போதைக்கு அந்த காயத்துக்கு மருந்து போட்டால், எல்லாவற்றுக்கும் தீர்வுவரும் என்று நம்புமளவுக்கு அந்த பிரச்சினையைத்தான் பிரதான பிணக்காக கரிசனைகொள்ள வேண்டியிருக்கிறது.

விக்னேஸ்வரன் - சுமந்திரன் என்ற இரண்டு அரசியல்புள்ளிகளை மையமாக கொண்டு கடந்த சில வாரங்களாக பெரு வீச்சுடன் வீசுகின்ற ஓர் அரசியல் பெரும் புயல், பல தமிழ்க் கட்சிகளை எந்த பேதமுமின்றி ஓங்கி தாக்கியிருக்கிறது. பல அரசியல்வாதிகளை - ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே, தியாகிகளாகவும் துரோகிகளாகவும் பிரசவித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்களை அநியாயத்துக்கு குழப்பிவிட்டிருக்கிறது.

இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், மஹிந்தவின் கொடுங்கோலோட்சியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக, அவரது கட்சியிலிருந்தே மைத்திரி என்பவரை உருவி எடுத்து மஹிந்தவுக்கு எதிராக பயன்படுத்தியது போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் மீது அதிருப்தி கொண்ட சிலர் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபையின் முதலமைச்சராக வெற்றி பெற்ற விக்னேஸ்வரன் ஐயாவையே கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக பயன்படுத்தி,

தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு மாற்றத்தை தோற்றுவிப்பதற்கு மேற்கொண்டுள்ள நகர்வுகளும் அதற்கு முதலமைச்சரும் ஒரு பங்காளியாக மாறக்கூடிய சமிக்ஞைகள் தெரிவதும்தான்.

முதலமைச்சரை முன்னிறுத்தி நடைபெறுகின்ற இந்த குருஷேத்திர போரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் நிற்கின்றவர்கள் மேற்கொள்ளுகின்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய அரசியலில் சில புதிரான சலனங்களை ஏற்படுத்தினாலும் முதலமைச்சர் வெளிப்படையாக இன்னும் இது விடயத்தில் வாய் திறக்கவில்லை. ஆனால், அண்மையில் சுமந்திரனுக்கு எழுதிய அவரது கடிதத்தில் தெரிவித்துள்ள விடயங்கள், அவர் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து வெகு தூரத்துக்கு போய்விட்டார் என்பதை மட்டும் தெளிவாக காட்டியிருக்கின்றன.

இது விடயத்தில் சம்பந்தரின் மௌனம் இன்னமும் நீடித்தவாறே உள்ளது. மஹிந்தவின் கடும்போக்கு ஆட்சியை எதிர்கொள்வதற்கு மஹிந்தவைப்போல கடும்போக்குள்ள ஒருவரை கட்சிக்குள் கொண்டுவந்தால் நல்லது என்ற மனக்கணக்கோடு, எத்தனையோ எதிர்ப்புக்களையும் மீறி கூட்டமைப்புக்குள் அழைத்துவரப்பட்ட விக்னேஸ்வரன், இன்று தன் மீதும் தனது தலைமையிலான கட்சி மீதும் எகிறிப்பாய்வதை எப்படி சமாளிப்பது என்று இன்னமும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் சம்பந்தர்.

ஆனால், பிரச்சினை மறுமுனையில் வேறு திசையில் விகாரமடைந்துகொண்டு செல்வதை சம்பந்தர் இன்னமும் ஏன் உணரவில்லை என்பதுதான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

விக்னேஸ்வரன், தற்போது தன்னைச் சுற்றி ஏற்படுத்தி வருகின்ற அரண் எனப்படுவது தனியே மக்கள் ஆதரவினால் மட்டுமே உருவாக்கப்பட்டுவருகிறது. அது மிகவும் பலமானதுகூட.

அவர், தென்னிலங்கையுடனும் ஒத்துப்போகவில்லை, மேற்குலகத்துடனும் ஒத்துப்போகவில்லை. இந்தியாவுடனும் ஒத்துப்போகவில்லை. ஏன் தான் அங்கம் வகிக்கும் கூட்டமைப்புடனும் ஒத்துப்போகவில்லை. தனியே,தான் ஒரு மக்கள் முதல்வராக வலம் வருகின்ற விம்பத்தைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

அவரது அந்த முயற்சி தாயகத்தில் உள்ள மக்கள் மத்தியில் கணிசமானளவு ஆதரவை பெற்றுக்கொடுத்ததோ இல்லையோ புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு அலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஏற்றுக்கொண்டாகவேண்டிய ஒன்று.

2009ஆம் ஆண்டின் பின்னர் மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் அப்பழுக்கற்ற - இதயசுத்தியான - மக்களுக்கே தன்னை அர்ப்பணிக்க வல்ல ஒரு ஒப்பற்ற தலைவனுக்குரிய பதவி தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருக்கிறது. அந்த இடத்தில் எவரையும் கொண்டுவந்து நிறுத்துவதற்கோ அல்லது அங்கிகாரம் வழங்குவதற்கோ எவராலும் முடியவில்லை.

ஆனால், அதற்கு அடுத்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரை கொண்டுவருவதில் பகீரத பிரயத்தனம் செய்த புலம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் அதில் தோல்வியடைந்துவிட்டனர். தாயகத்தில் அவருக்கான ஆதரவு என்ன என்பது கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புடன் வெளியானதால், அந்த இடத்துக்கான அடுத்த தெரிவில் இறங்கினார்கள்.

மிதவாத அரசியல் மீதான வெறுப்புடனும் அரசியல் தலைமைகள் மீது ஏற்பட்ட சலிப்புடனுமிருந்த புலம்பெயர்ந்தமக்களுக்கு விக்னேஸ்வரன் எடுத்த திடீர் 'அரசியல் ஸ்டைல்' மிகவும் பிடித்துப்போனது. மிதவாதத்திலிருந்து மேல்நோக்கி அவர் மேற்கொண்ட கொள்கை இடப்பெயர்வு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பெருவரவேற்பு பெற்றது. அவரை முழுவதுமாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

முன்னாள் நீதியரசர் என்ற கௌரவத்துடன் கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்ட விக்னேஸ்வரனுக்கு தாயகத்தில் தேர்தல் மூலம் ஏலவே கிடைத்த ஆதரவுடன் புலம்பெயர்ந்த மக்களும் அள்ளிக்கொடுத்த ஆதரவு அவரை உச்சத்தில் அழைத்து சென்றுவிட்டது.

அரசியல் பின்புலம் எதுவும் இல்லாது கூட்டமைப்புக்குள் வந்த விக்னேஸ்வரனுக்கு பல திசைகளிலுமிருந்து கிடைத்த மக்கள் ஆதரவு, அவரை அந்த ஆதரவுத்தளத்தை சிதைக்காமல் அரசியல் செய்யவேண்டும் என்ற ஆபத்தான பொறியினுள் மெல்ல மெல்ல தள்ள தொடங்கியது. சரியான வழியில் மக்களை அழைத்து செல்லவேண்டிய விக்னேஸ்வரனோ, இந்த திடீர் ஆதரவின் பின்னர், மக்களுக்கு பின்னால் செல்லவேண்டிய நிலைக்கு ஆளானார்.

எந்த இடத்தில் தனது சரியான அரசியல் பாடத்தை ஆரம்பிக்கவேண்டியிருந்ததோ, அந்த இடத்தில் அவர் இன்னொரு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

(8ஆம் பக்கத் தொடர்ச்சி...)

ஒரு மாகாணசபை முதலமைச்சராக பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய பதவிநிலையில் இருந்த விக்னேஸ்வரன், தனது நிர்வாகத் திறமையினால் எத்தனையோ பல திட்டங்களை முன்னெடுப்பார், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவல்ல நடவடிக்கைகளை மேற்கொள்வார்,தூரநோக்கு சிந்தனையுடன் புதியவழிகளை திறந்துவிடுவார் என்று எதிர்பார்த்த கூட்டமைப்புக்கும் மக்களுக்கும் அவரது செயற்பாடுகள் ஏமாற்றத்தைத்தான் தந்தன.

அதற்காக அவருக்கு கிடைக்கவேண்டிய ஆதரவும் அங்கிகாரமும் கிடைக்கவில்லை என்று கூறிவிடமுடியாது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இந்திய பிரதமர் மோடியும் வந்து சந்தித்து சென்ற ஒரேமாகாண சபை முதலமைச்சர் என்றால் அவர் விக்னேஸ்வரன் அவர்கள் மட்டுமே. உள்நாட்டு அரசியல் பரப்பிலிருந்து மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அவருக்கான மதிப்பையும் கௌரவத்தையும் மக்கள் தங்க தாம்பாளத்தில் வைத்;து கொடுத்துவிட்டு, தமக்கு என்ன கிடைக்கும் என்று காத்திருந்தார்கள்.

ஆனால், அந்த அங்கிகாரங்களையும் ஆதரவினையும் அதற்கு மேல் அவரால் கொண்டுசெல்லமுடியவில்லை. அதனை அவர் தொடர முடியவில்லையா அல்லது விரும்பவில்லையா என்பதும் ஒருவருக்கும் புரியவில்லை.

போரின் வடுக்களால் பிளந்துபோய் கிடந்த தாயகத்தின் வடக்கில் முதலமைச்சராக பதவியேற்றவர், யுத்த்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரும்தேசமாக வன்னிமண் கண்ணீரும் செந்நீருமாக சகதியில் கிடக்க, தனது நடவடிக்கைள் அனைத்தையும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.

வன்னியின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை மையமாக கொண்டு, நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக அபிவிருத்தி திட்டங்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் பொருளாதார மேம்பாட்டினை மேற்கொள்ளவேண்டியவர்,

அவற்றுக்காக தனது மாகாணசபை அமைச்சுக்களை பயன்படுத்தவேண்டியவர், அந்த முயற்சிகளுக்காக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு தன்முனைப்பு காண்பிக்கவேண்டியவர், யாழ்ப்பாணத்தில் இருந்து தீர்மானங்களை நிறைவேற்றி பத்திரிகைகளின் பசியை மட்டும் தீர்த்துக்கொண்டார்.

உதாரணத்துக்கு ஒரு விடயத்தை இங்கு பார்ப்போமாக இருந்தால் - பிரதமர் மோடிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்ற பின்னர், இந்திய அரசினால் வடக்கில் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்ட தொழிற்றுறைத்திட்டம் ஒன்றை வடக்கு மாகாணசபைக்கு அனுப்பி வைக்க, அதற்கு பதிலளிக்காமலேயே முதலமைச்சர் இழுத்தடித்துக்கொண்டிருக்க, அந்த தொழிற்துறை கடைசியில் தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொழிற்துறைக்கு வடக்கில் உள்ளவர்கள் பலர் உள்வாங்கப்பட்டபோதும் அவர்கள் வடக்கிலிருந்து தென்னிலங்கைக்கு சென்று தங்கியிருந்து தொழில்பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட்ட பொறிமுறையின் ஊடாகவே அந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடிந்தது.

இவ்வாறு வடமாகாண சபை ஊனமுற்றிருக்கும் பல பாகங்களை ஒவ்வொரு அமர்விலும் ஒப்பாரி வைக்காத முறையாக பட்டியல் போடுகிறார் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா. சுருக்கமாக சொல்லப்போனால், கருணாவும் பிள்ளையானும் சேர்ந்து மஹிந்த அரசாங்கத்தை பயன்படுத்தி கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தியளவுகூட, விக்னேஸ்வரனால் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியை பயன்படுத்த முடியவில்லை என்றார் அண்மையில் பேசிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர்.

இன்று புதிய வரவு - செலவு திட்டத்தில் வவுனியாவைiயும் அம்பாறையையும் கேந்திர வர்த்தக நிலையங்களாக மாற்றப்போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு எவ்வளவு ஆபத்துக்களை தமிழர்தாயகத்துக்கு நீண்டகால நோக்கில் கொண்டுவரப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ளாமலேயே குறுகிய கனவுகளில் அரசியல்வாதிகள் மூழ்கிப்போயுள்ளனர்.

இந்த வர்த்தக மையங்களை நோக்கி சிங்கள வர்த்தகர்களை படையெடுத்து சென்று அங்கேயே நிரந்தரமாக குடியமர்ந்துவிடப்போவதையும் ஏற்கெனவே நிலங்களை பறிகொடுத்துவரும் தமிழர் தாயகம் இம்மாதிரியான வாணிப படையெடுப்புக்களால் மேலும் சுயத்தை இழக்கப்போவதையும் யாரால் மறுக்கமுடியும்.

ஒரு மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், இன்று இவ்வாறு கைமீறிப்போகும் ஆபத்துக்கள் நிகழ்ந்திருக்குமா?

ஆனால், முதலமைச்சரை பொறுத்தவரை இன்று இவ்வாறான கரிசனைகளையும் கவலைகளையும் கொண்டிருக்க வேண்டியவர் என்ற தகுதியை விட்டு தொலைதூரம் போய்விட்டார்.

தமிழீழத் தேசிய தலைவருக்கு அடுத்ததாக மக்கள் மதிப்புடன் பார்க்கும் தலைவர் விக்னேஸ்வரன் அவர்களே என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் கனடாவில் வாழ்த்துரை வழங்கி அவரை நோக்கி கைகாட்டியிருக்கிறார்.

இந்தப் பாதையில்தான் பயணப்படுவதற்கு முதலமைச்சரும் தலைப்படுவதாக, கூட்டமைப்பு வட்டாரங்களும் கோடி காட்டியிருக்கின்றன.

இலங்கை அரசியல் எப்போதுமே விசித்திரமானது. ஜனாதிபதி வேட்பளராக மஹிந்தவுக்கு எதிராக சவால்விடுத்துக்கொண்டு களமிறங்கி தோல்வியடைந்தாலும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற, ஏன் தமிழ்மக்கள்கூட அவருக்குத்தான் ஆதரவளிப்பது என்று முடிவு செய்த, சரத் பொன்சேகாவே கடந்த பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று எடுத்த முடிவுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  இதுபோலவே, மாற்று சக்தி, மாற்றுத் தலைமை என்று பலத்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் களமிறங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழ் மக்கள் மத்தியில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாகக்கூட இடம்பெறமுடியவில்லை.                   இலங்கையின் அரசியல் மாத்திரமல்ல தமிழர் அரசியலும் விசித்திரமானது. அந்த நெளிவு சுளிவுகளுக்குள்ளால் பயணம் செய்பவர்கள்தான் அரசியலில்ல தாக்கு பிடிக்கிறார்களே தவிர, உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் அல்ல. ஆகவே, கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்காமல், மக்களின் ஏகோபித்த ஆணையை பிரதிபலிக்கின்ற கூட்டமைப்பின் உறுதியை குலைக்காமல், முரண்பாடுகளை கட்சி தலைமையுடன் பேசித்தீர்த்து தன்னிலையையும் தமிழர் நிலைமையையும் கருத்தில்கொண்டு அரசியல் செய்வதுதான் முதலமைச்சர் தற்போது வகிக்கும் பேரபிமானம் மிக்க அரசியல் தலைவர் என்ற கௌரவத்துக்கு அணியமாக அமையும்.

இதனை மேற்கொள்வதனால், கூட்டமைப்பின் தலைமை இழைத்த - இழைக்கும் தவறுகளை அங்கிகரிப்பதாக பொருட்படாது. பொருள்படவும் கூடாது. அந்த விடயம் விலாவாரியாக அலசப்படவேண்டிய விசாலமான விவகாரம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வங்குரோத்து நிலையும் அதற்கு சுமந்திரன் அவர்கள் மேற்கொண்ட பாதிப்புக்களும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும்கூடத்தான், இன்று இப்படியான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொண்டுவந்திருக்கிறது என்பதை முதலில் கூட்டமைப்பின் தலைமையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியல் தெரியாத முதலமைச்சர் மிரண்டு ஓடுகிறார் என்று மிகச்சாதரணமாக அவரின் மீது குற்றஞ்சாட்டும் கூட்டமைப்பு அவரது அந்த போக்கை ஆரம்பத்திலேயே ஏன் உணரவில்லை, உணர்ந்தால் ஏன் தங்களுக்குள் பேசி அதற்கு முடிவு எடுக்கவில்லை, முதலமைச்சருடன் பிரச்சினையுள்ள விவகாரத்தை அவுஸ்திரேலியாவில் சென்று வானொலிக்கு பேட்டி கொடுப்பதன் மூலம் சுமந்திரன் சாதிக்க முயன்றது என்ன? இப்படி எத்தனையோ கேள்விகள் அடங்கிய குற்றப்பத்திரிகைக்கு பதில் அளிக்க வேண்டிய புள்ளியில்தான் கூட்டமைப்பின் தலைமையும் இன்று இருந்துகொண்டிருக்கிறது.

இது விடயத்தில், சம்பந்தரனும் விக்னேஸ்வரனும் தத்தமது துறைகளில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் உரையாடிக்கொண்டாலே போதும். தமிழர் அரசியல் மாத்திரமல்ல, தமிழ்மக்களும் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. 2007 இல் 'தாமிரபரணி' என்றொரு தமிழ் திரைப்படம் வந்திருந்தது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் அந்த படத்தில் அடிக்கடி ஒரு வசனம் படம் பூராகவும் வந்துகொண்டேயிருக்கும். அதாவது -

'ஒரு குடும்பத்துக்குள் பகை என்று வந்துவிட்டால், யார் ஜெயிச்சார் என்பது பெருமையல்ல. யாருமோ தோற்கவில்லை என்பதுதான் கௌரவம்' இதை முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினர் சற்று ஆழமாக சிந்திப்பார்களானால், முடிவுகள் முன்னேற்றமாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .