2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வுபெறுகிறார் சங்கா

Editorial   / 2017 மே 24 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இங்கிலாந்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிராந்திய சம்பியன்ஷிப் தொடருடன், முதற்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது அவர், சரே அணிக்காக விளையாடி வருகிறார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற சங்கக்கார, அதன் பின்னர், இங்கிலாந்துப் பிராந்தியப் போட்டிகளிலும் பல்வேறு இருபதுக்கு-20 தொடர்களிலும் பங்குபற்றி வந்தார்.

நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த, மிடில்செக்ஸ் அணிக்கெதிரான போட்டியின் இரண்டு இனிங்ஸ்களிலும் சதம் பெற்ற சங்கக்கார, முதற்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 இனிங்ஸ்களில் சதம்பெற்ற இலங்கையர் என்ற சாதனையை, ரொமேஷ் களுவிதாரணவுடன் பகிர்ந்து கொண்டார். அத்தோடு, 2ஆவது இனிங்ஸில் அவர், முதற்தரப் போட்டிகளில் 20,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அறிவிப்பொன்றை விடுத்த சங்கக்கார, தற்போதைய பருவகாலமே, தனது இறுதிப் பருவகாலமாக அமையுமெனத் தெரிவித்தார்.

ஆனால், கரீபியன் பிறீமியர் லீக் உட்பட, இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடுவதற்கு, அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருபதுக்கு-20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவாரா என்று கேட்டமைக்கு, “எனக்குள் இருக்கும் வியாபாரி, இன்னமும் உயிருடன் இருக்கிறான்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

வயதான ஒருவர், விளையாட வேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து விளையாடுவதை யாரும் விரும்புவதில்லை என்று தெரிவித்த அவர், முதற்தரப் போட்டிகளில் சில மாதங்கள் மாத்திரமே விளையாட விரும்புவதாகத் தெரிவித்தார்.

“நீங்கள் முன்னிலையில் இருக்கும் போதே, நீங்கள் வெளியேற வேண்டும். இது தான் முடிவும். எனக்கு இப்போது 39 வயது. சில மாதங்களில், 40 வயதாகுவேன்.

“நீங்கள் உண்மையாக இருப்பதை விடச் சிறந்தவர் என எண்ணிக் கொண்டு, இறுதி முடிவுடன் போராடுவதே, நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் தவறாக இருக்கும். பருவகாலத்தை நீங்கள் இவ்வாறு ஆரம்பிக்கும் போது, இன்னும் நிறையச் செல்ல வேண்டியிருக்கிறது. நல்ல காலங்களை நீங்கள் மகிழ்வாகக் களிக்க வேண்டியிருக்கிறது. அனைத்து நல்ல விடயங்களும், ஒரு முடிவுக்கு வரும். கிரிக்கெட் வீரர்களும் ஏனைய விளையாட்டு வீரர்களும், காலாவதித் திகதியொன்றைக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .