2024 மே 02, வியாழக்கிழமை

குண்டூஸ் தாக்குதல்: பொய் சொல்லும் அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் (எம்.எஸ்.எப்) வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல், மனித, தொழிநுட்பத் தவறால் ஏற்பட்டது என, ஐக்கிய அமெரிக்காவின் படைகளின் தளபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதல், அருகிலுள்ள தலிபான்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதியொன்றின் மீது மேற்கொள்ளப்படவே எண்ணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள் உட்பட 30 பொதுமக்கள், உயிரிழந்திருந்தனர். குறித்த விமானத் தாக்குதல், 29 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜெனரல் ஜோன் கம்ப்பெல் இவ்வாறு தெரிவித்தார்.

அந்தத் தாக்குதல், 'மிகக் கவலைதரக் கூடியதெனவும் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதெனவும்" தெரிவித்த அவர், 'மனிதத் தவறால் அது இடம்பெற்றது" எனக் குறிப்பிட்டார்.

அந்தத் தாக்குதல், பிற்பகல் 2.08க்கு ஆரம்பித்ததாகவும், 2.20க்கு, பக்ராமிலுள்ள விசேட நடவடிக்கைப் பணிகள் அதிகாரிக்கு, எம்.எஸ்.எப் அமைப்பிடமிருந்து அழைப்புக்கிடைத்ததாகவும், 2.37 மணிக்கே தங்களது தவறை, அவர்கள் உணர்ந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அப்பகுதி, எம்.எஸ்.எப் நிலையமென்று, அமெரிக்கப் படையினருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்தத் தாக்குதல் இடம்பெறுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, அந்த வைத்தியசாலைக்குள் தலிபான் போராளிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அது உண்மையா என்றும், அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள அதிகாரியொருவர், எம்.எஸ்.எப் அமைப்பிடம் கேட்டதாகவும், அவ்வாறான நிலை அங்கு காணப்பட்டிருக்கவில்லை எனப் பதிலளித்ததாகவும், எம்.எஸ்.எப் அமைப்பின் பேச்சாளரொருவர் தெரிவித்திருந்தார். அத்தோடு, அதற்கு முன்னர், எம்.எஸ்.எப் வைத்தியசாலையின் அமைவிடம் குறித்த தெளிவான தகவல்கள், படையினருக்கு வழங்கப்பட்டிருந்தன.

எனவே, தாக்கப்பட்ட பகுதி, வைத்தியசாலையென்பது அமெரிக்கப் படையினருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்ததோடு, அங்கு தலிபான்கள் இருப்பதாகவே நினைத்தே, அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதோடு, அந்தப் பகுதி, வைத்தியசாலையென அமெரிக்கப் படையினருக்குத் தெரிந்திருக்கவில்லையென்பது, வெளியான தகவல்களின் அடிப்படையில் பொய்யென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .