2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாவீரர் நாள்- உணர்வு ரீதியாக அணுகப்படுமா?

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நவம்பர் 27ஆம் திகதி- மாவீரர் நாள். விடுதலைப் புலிகள் இயக்கம், முள்ளிவாய்க்கால் மண்ணில் தோற்கடிக்கப்படும் வரை, மாவீரர் நாள் சர்வதேச எதிர்பார்ப்புக்குரிய ஒரு நாளாகவும் இருந்து வந்தது. அன்று தான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பிரகடன உரை இடம்பெறுவது வழக்கம்.

அந்த உரையை, சர்வதேச இராஜதந்திரிகள் கூர்மையாக அவதானித்தும் வந்தனர். 2008ஆம் ஆண்டு வரை, இந்த நிலை நீடித்தது.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், ஆண்டுக்கு  ஒருமுறை இடம்பெறும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரை இடம்பெறுவதில்லை.

ஆனாலும், மாவீரர்களை நினைவு கூரும் மரபு மட்டும் தமிழர்களை விட்டுப் போகவில்லை.

போர் முடிவுக்கு வந்தவுடன், முன்னைய அரசாங்கம் செய்த முதல் வேலை, விடுதலைப் புலிகளை நினைவு கூரும் அத்தனை நினைவுச் சின்னங்களையும் அழித்தது தான்.

மாவீரர் துயிலும் இல்லங்களைக் கூட புல்டோசர்கள் மூலம் அழித்தது மட்டுமன்றி, அங்கு எந்தக் காலத்திலும் நினைவுச் சின்னங்கள் முளைத்து விடவோ அஞ்சலிகளோ, செலுத்தப்படவோ கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக படைத்தளங்களையும் அமைத்துக் கொண்டது அரசாங்கம்.

எங்கெல்லாம் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தனவோ, அங்கெல்லாம், அவற்றின் மீது படைத்தளங்கள் கட்டியெழுப்பப்பட்டன.

விடுதலைப் புலிகள் பற்றிய நினைவுகளோ, பதிவுகளோ எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக முன்னைய அரசாங்கம், தமிழ் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தது.

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரவே தடைவிதித்த அரசாங்கம், மாவீரர்களை நினைவு கூரும் சுதந்திரத்தை மக்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

மாவீரர் தினத்தன்று, எங்கும் மணி ஒலி எழுப்பக்கூடாது, விளக்கேற்றக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் கூட அன்றைய தினத்தில் முடக்கப்பட்டன. ஆனால், இத்தகைய படைக் கெடுபிடிகளையும் தாண்டி, கடந்த ஆண்டு வரை மாவீரர்கள் தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டனர்.

இறந்துபோன தமது உறவுகளான மாவீரர்களை நினைவு கூரத் தடைகள் விதிக்கப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் உறவுகளுக்கும் மக்களுக்கும், நினைவு கூரும் துடிப்புத்தான் அதிகரித்ததே தவிர, குறைந்து போகவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், மாவீரர்களை நினைவு கூருவதற்கு அரசாங்கமும் படைத்தரப்பும் விதித்திருந்த தடைகளை வெளிப்படையாக தமிழ் மக்கள் மீறாது போனாலும், அவர்கள் வீடுகளுக்குள் விளக்ககேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பதை மறுக்க முடியாது.

வடக்கு, கிழக்கில் கடந்த ஆண்டு வரை இருந்த, நெருக்கடியான நிலை இப்போது மாறியிருக்கிறது. முன்னைய ஆட்சி இப்போது இல்லை. தமிழ் மக்களின் பங்களிப்பிலும் உருவான அரசாங்கம் ஒன்றே பதவியில் இருக்கிறது.

மாவீரர் தினம் தொடர்பான புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பான தெளிவான எந்த செய்தியும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் இல்லை.

ஆனால், ஓரிரு வாரங்களுக்கு முன்னர், பயங்கரவாதிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தியைப் பார்க்க முடிந்தது.

அதில் எந்தளவுக்கு உறுதியான நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படும் என்ற கேள்வி இருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தைப் போன்று மாவீரர் தின அனுஷ்டிப்பு விடயத்தில் கண்டிப்பான போக்கை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தாது என்ற கருத்தே பரவலாக இருக்கிறது.

ஆட்சி மாற்றம் வடக்கு, கிழக்கில் முற்றுமுழுதான ஜனநாயக சூழலை ஏற்படுத்தி விட்டதாகவோ, அச்சமற்ற நிலையை ஏற்படுத்தி விட்டதாகவோ, இராணுவமயப்படுத்தலில் இருந்து விடுவித்து விட்டதாகவோ கூற முடியாது.

ஆனால், தமிழ் மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நினைவுகூரல்களை செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வெளியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தற்போதைய அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கு கருணை காட்டும் ஒன்றாகவோ, அவர்களை ஆதரிப்பதையோ, ஆராதிப்பதையோ சகித்துக் கொள்ளும் ஒன்றாகவோ இல்லாவிட்டாலும், போரில் உயிரிழந்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரும் விடயத்தில் அதிகம் தலையீடு செய்யும் ஒன்றாக இல்லை என்பதே உண்மை.

கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளான புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவது உலகப் பொதுவழக்கம்.

ஆனால், அந்த உரிமையை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு விட்டுக் கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மே 18ஆம் திகதி நினைவு கூர முற்பட்ட போதும், நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூர முற்பட்ட போதும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்  மக்கள் மீது கெடுபிடிகளையும், இராணுவ பொலிஸ் அடக்குமுறைகளையும் ஏவிவிட்டு வெறுப்பையும், சினத்தையும் சம்பாதித்துக் கொண்டது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்.

அந்த அரசாங்கத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது தற்போதைய அரசாங்கம். அதனால் தான் முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, கெடுபிடிகளுக்கு மத்தியிலேனும் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தக் கூடிய ஒரு நிலை உருவாகியிருந்தது.

எனினும், மாவீரர்களை வடக்கு மாகாணசபை அதிகாரபூர்வமாக நினைவுகூர முடியாது.

இந்தநிலையில், தமிழ் மக்கள் தாமாகவே வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி நினைவு கூர இன்று இடமளிக்கப்படுமா என்ற கேள்வி இருக்கிறது.

போருக்குப் பின்னர் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கையாண்ட தவறான அணுகுமுறைகளால் கெட்டுப் போனது.

போருக்குப் பிந்திய மஹிந்த அரசின் நடவடிக்கைகளும் நகர்வுகளும், அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்களைக் கூட கடுப்பேற்றும் வகையில் அமைந்திருந்தது.

நல்லிணக்க வாய்ப்புகளை உதறிவிட்டு, மஹிந்த அரசாங்கம் அடக்குமுறை போக்கிலேயே செயற்பட்டது.

அதன் விளைவு தமிழ் மக்களிடத்தில் இருந்து முதலில் அந்நியப்பட்டு போனது. அடுத்து, ஏனைய இனமக்களிடம் இருந்தும் அந்நியப்பட்டது.

இப்போதைய அரசாங்கம் அப்படியானதொரு நிலையை உருவாக்க விரும்பாது.

இப்போதும் கூட, தமிழ் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளிக்கு முக்கியமான காரணம், நம்பிக்கையீனம் தான்.

காலம் காலமாக ஏமாற்றப்பட்டதால், அரசாங்கத்தின் மீதும் சிங்கள மக்களின் மீதும் தமிழ் மக்களுக்கு நிறையவே அவநம்பிக்கை உள்ளது.

இந்த அவநம்பிக்கையைக் களைவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை, சில நாட்களுக்கு முன்னர் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லிணக்கத்துக்கு முதல் நடவடிக்கை பொறுப்புக்கூறலும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தலும் தான். பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கை விடயத்தில் அரசாங்கத்தினால் இன்னமும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை.

அந்த விடயத்தில் அமெரிக்காவும் கூட திருப்தியடைந்திருப்பதாக கருத முடியாது. ஆனால், பரஸ்பர நம்பிகையை ஏற்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் சில ஈவுகளை ஏற்படுத்த முடியும். விட்டுக் கொடுப்புகளைச் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடக்கக் கூடிய சில விடயங்களில் பெரியளவில் இல்லாவிட்டாலும், சிறியளவிலான நெகிழ்வுப் போக்கையேனும் அனுமதிக்கலாம்.

அது, பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

இறந்துபோன உறவுகளை நினைவு கூரும் இரு முக்கிய நாட்களுக்கும் தடைகளை ஏற்படுத்தாமல் விடுவது, தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக, அணுகுவதற்கு முக்கியமானதொரு வாய்ப்பாக அமையும்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் விடயத்தில் சற்றுக் கெடுபிடிகளுடன் விட்டுக் கொடுத்த அரசாங்கம், மாவீரர் தின விடயத்தில் எந்தளவுக்கு விட்டுக் கொடுப்புடன் இருக்கும் என்பது இன்று தெரிந்து விடும்.

இன்றைய நாளில், அரசாங்கம் அனுமதித்தாலும் சரி, தடுத்தாலும் சரி தமிழ் மக்கள், இறந்துபோன தமது உறவுகளை நினைவு கூரப்போவது உறுதி.

ஏனென்றால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான உறவுகளை ஒன்றாக நினைவு கூருகின்ற நாள் இது.

வடக்கு, கிழக்கில் உள்ள பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தமது உறவுகளை இழந்திருக்கிறார்கள். அவர்களால் இந்த நாளை மறக்க முடியாது.

எனவே, இப்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்லெண்ணத்தைக் காட்ட விரும்பினால், இதுபோன்ற உணர்வுபூர்வமான விடயங்களில் அவர்களுடன் நிற்பதை உணர்த்த வேண்டும்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், கண்டும் காணாமல் விடுவதன் மூலம், தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை ஆற்ற முடியும். போருக்குப் பிந்திய நல்லிணக்கம் நடவடிக்கையில் காயங்களை ஆற்றுதல் முக்கியமானது.

அத்தகையதொரு வாய்ப்பை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இன்று பெற்றுக் கொள்ளவிருக்கிறது. இந்த வாய்ப்பை அரசாங்கத் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா அல்லது மஹிந்த அரசின் பாதையிலேயே பயணிக்கப் போகிறதா?

இன்றுமாலை ஒளிரப்போகும் மாவீரர்களுக்கான சுடர்களின் வெளிச்சத்தில் அதற்கான விடை தெரிந்து விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .