Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 01 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இலங்கை கிரிக்கெட் சபையாலோ இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.
ஆனால், இந்திய கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் முகுல் முட்கல் தலைமையிலான குழு, இவ்விடயம் தொடர்பாகவும் விசாரணை செய்திருந்தது. எனினும், இது தொடர்பான முடிவுகள், பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, அப்போட்டி இடம்பெற்றபோது, இலங்கை கிரிக்கெட் சபைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ எழுதிய ஜூன் 19, 2010 எனத் திகதியிடப்பட்ட கடிதம், வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அப்போதைய முகாமையாளர் ரன்ஜிப் பிஸ்வத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், போட்டி மத்தியஸ்தர், இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர், அதன் மேலதிக பிரதம நிறைவேற்று அதிகாரி, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஜூன் 18, 2010இல், தம்புள்ளையிலுள்ள வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கும், சுரேஷ் ரெய்னாவின் அறைக்கும், பெண்ணொருவரை அன்று மாலை அனுமதிக்குமாறு, ரன்ஜிப் பிஸ்வத் கோரியதாகவும், அவர் ஊடகவியலாளரெனவும் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி அனுமதி வழங்கப்பட்டதோடு, இரவு 8 மணி வரையே தங்கியிருக்க முடியுமென பாதுகாப்பு அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கு ரன்ஜிப் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
'8 மணியின் பின், அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் (வீரர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பிரிவு) அதிகாரியொருவர், குறித்த பெண், இன்னமும் வீரரின் அறையை விட்டு வெளியேறவில்லை என உங்களின் கவனத்துக் கொண்டு வந்தார். சிறிது நேரத்தின் பின், இது தொடர்பான அழைப்புகளுக்கு நீங்கள் பதிலளித்திருக்கவில்லை, அத்தோடு, அப்பெண்ணை வெளியேறுமாறும் தெரிவித்திருக்கவில்லை. அப்பெண், ஜூன் 19, 2010 வரை அவ்வறையில் காணப்பட்டிருந்தார்" என அக்கடிதம் குறிப்பிடுகிறது.
இது தவிர, இன்னுமொரு வீரரின் அறைக்குள், ஜூன் 18ஆம் திகதி, ஆணொருவரின் தனது அனுமதியின்றித் தங்குவதற்கு, ரன்ஜிப் அனுமதி வழங்கியிருந்தார் எனவும், மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.
இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு மீறல் என்பதோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டுமெனவும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.
அத்தோடு, இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஏற்படும் எந்தவிதமான துரதிர்ஷ்டவசமான நடவடிக்கைகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபையோ அல்லது பாதுகாப்புப் பிரிவோ பொறுப்பேற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 19ஆம் திகதி, இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கியமான போட்டி இடம்பெறவிருந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஏன் அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வி, இதன் மூலமாக எழுந்துள்ளது. அப்போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட்டுகளால், இறுதி ஓவரின் 5ஆவது பந்தில் வெற்றியைப் பெற்றிருந்தது. அதில் சுரேஷ் ரெய்னா, 27 பந்துகளில் 34 ஓட்டங்களைக் குவித்ததோடு, இறுதி ஓவரில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .