2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்?

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 03 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. 

அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட்டுக்கு விஜயம் செய்யும் அணிக்கே, முதலில் துடுப்பெடுத்தாடுவதா? இல்லை களத்தடுப்பிலீடுபடுவதா? என்பதைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவது என்பதை இந்த ஆலோசனைகள் முன்மொழிகின்றன. இதனால், ஆடுகளத்தைத் தயார் செய்யும் அணி, தனக்கு மட்டும் சாதகத்தன்மை கொண்டதாக அதனை அமைக்காமல் பொதுவானதாக அமைப்பதற்கு வழியேற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்துக்கு ரிக்கிபொன்டிங், ஸ்டீவ் வோ, மைக்கேல் ஹோல்டிங் போன்ற முன்னாள் முன்னணி வீரர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இது சார்ந்ததொரு திட்டத்தை வரும் கிரிக்கெட் பருவகாலத்தின் உள்ளூர் போட்டிகளின்போது நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது. கவுன்டி அணி ஒன்று, இன்னோர் அணியின் ஆடுகளத்துக்குச் சென்று விளையாடும்போது, அந்த அணிக்கு முதலில் களத்தடுப்பிலீடுபடும் வாய்ப்பு வழங்கப்படும். அதை அந்த அணி மறுக்கும்பட்சத்தில் மட்டும் நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்படும் இந்த புதிய நடைமுறைகள் குறித்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுனர் டெரன் லீமன் தனது வரவேற்பினைத் தெரிவித்துள்ளார். அடிலெய்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

''நிச்சயமாக இந்தத் திட்டம் கிரிக்கெட்டுக்குள் உள்வாங்கப்படவேண்டும். இதன் மூலம் தனக்கு மட்டும் சாதகமான ஆடுகளங்களை தயாரிக்கும் அணிகளின் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார் லீமன். 

''ஆறு வருடங்களுக்கு முன்னர் பகல்-இரவு டெஸ்ட் போட்டி பற்றி எம்.சி.சி திட்டமிட்டபோதே எனக்கு அது ஒரு அற்புதமானவும், சுவாரஸ்யமானதுமான திட்டம் என்பது புரிந்தது. அது, இப்போது விளையாடப்பட்டபோது ரசிகர்களாலும் உணரப்பட்டிருக்கும். இதுபோலவே புதிய திட்டங்களும் டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரஷ்யப்படுத்தும்' என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் டெரன் லீமன்.

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும்போது தினமும் வீசப்படவேண்டிய 90 ஓவர்களுக்கு மேலதிகமாக சில ஓவர்களை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறதாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X