2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

பொறுப்புக் கூறுவாரா சந்திரிகா?

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் செயல்முறைகள் இன்னும் சில வாரங்களில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ, இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில், இந்தப் பணியகத்தின் ஊடாக முக்கிய பங்காற்றவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

நம்பகமான, நியாயமான, போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உறுதியளித்திருந்த அரசாங்கம், அதனை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்ற கேள்வி இன்னமும் பலரிடம் இருக்கிறது. தற்போதைய அரசாங்கம், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதாக, சர்வதேச சமூகத்துக்கு கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களின் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு வரையில், அந்த விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் அமைக்கவேயில்லை.

இந்தநிலையில், கடந்த செப்டெம்பர் மாத அமர்வின் போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதற்கமைய, அரசாங்கம், ஒரு நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அமைத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது, இந்த விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளையும், சட்டத்தரணிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களையும் உள்ளடக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது அரசாங்கம்.

ஆனால், ஜெனீவாவில் அமர்வு முடிந்தவுடன், வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள் தேவையில்லை, எம்மிடமே போதிய தகைமை பெற்ற நீதிபதிகள் இருக்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைக்கத் தொடங்கியது அரசாங்கம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இதனை ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர். அதுபோலவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கூட, வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, வெளிநாட்டு நீதிபதிகள் இந்த விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எனினும், வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவி மற்றும், ஆலோசனைகளைப் பெறுவது என்பதில் அரசாங்கம் உறுதியாகவே இருக்கிறது.

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகமவும் கூட, விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை பெறலாம் என்று கூறியிருக்கிறார்.

எனினும், அவர்கள் விசாரணைகளில் பங்கெடுப்பவர்களாக இருக்கக்கூடாது, வெறும் கண்காணிப்பாளர்களாக மட்டும் கலந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, வெளிநாட்டு நீதிபதிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருக்கிறார். அதேபோன்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் கூட, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதை, அதன் தலைவர் வெளியிட்டிருந்த அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதால் நாட்டின் இறைமை பாதிக்கப்பட்டு விடும் என்பதால் மட்டுமே, இவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று கருத முடியவில்லை.

அவ்வாறாயின், இலங்கையில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் வந்த போதெல்லாம் அதற்கு இவர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்காத தரப்பினர், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை எதிர்க்கின்றனர் என்றால், அதுவும், விசாரணை செய்து தண்டிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதை எதிர்க்கின்றனர் என்றால் அதற்கு வேறு காரணங்கள் தான் இருக்க வேண்டும்.

அதாவது, வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள் இந்த விசாரணைப் பொறிமுறையில் இடம்பெற்றால், அது நீதியானதாக,  நம்பகமானதாக இருக்கும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையில் பங்கெடுத்தால், தாம், கதாநாயகர்களாகவும் வீரர்களாகவும் கொண்டாடியவர்கள் தண்டிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம், தெற்கிலுள்ள பெரும்பாலானோரிடமும் அரசாங்கத்திடமும் காணப்படுகிறது.

இதனால் தான், பெரும்பாலானவர்கள் இப்போதும், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை எதிர்த்து வருகின்றனர். அதைவிட, தமது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சமும் அரசாங்கத்தில் உள்ள பலரிடம் காணப்படுகிறது. எனவே, சர்வதேச சமூகத்துக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அமைப்போம் என்று வாக்குறுதியைக் கொடுத்திருந்தாலும், அதனைச் செயற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்பதே உண்மையான நிலவரமாகும்.

சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைத்து, விசாரணைகளை மேற்கொண்டால், தம் மீது சர்வதேசம் கேள்வி எழுப்பாது என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.

அரசாங்கத்தின் இந்த நம்பிக்கைக்கு, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் பின்கதவால் பச்சைக்கொடி காண்பித்திருக்கவும் கூடும். எவ்வாறாயினும், அரசாங்கம் கூடிய விரைவில், ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த விடயம் தொடர்பாக இரண்டு தடவைகள் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது. ஆனால், அதன் மூலம் விசாரணைப் பொறிமுறை தொடர்பான இறுதியான எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், சந்திரிகா குமாரதுங்க கூறுவது போன்று அடுத்த மாதத்துக்குள் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா என்பது கேள்விக்குரிய விடயம் தான்.

இருந்தாலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் இனினும் தாமதிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. சர்வதேச ரீதியாக ஆதரவைத் திரட்டியுள்ள அரசாங்கம், அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. ஏனென்றால், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரதிபலனை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளது.

அண்மையில், இலங்கை வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், அதனை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியிருந்தார். இப்போது இலங்கை வரும் பல்வேறு ஐ.நா மற்றும் சர்வதேசக் குழுக்கள், தூதுவர்கள், அரசாங்கம் எதனைச் செய்திருக்கிறது என்ற ஆய்வை நடத்த தொடங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட பலரும் இலங்கைக்கு வரத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பயணம் கூட வரும் ஆண்டு சாத்தியப்படலாம். இந்தநிலையில், அரசாங்கம் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் கையை வைத்து முழம் அளந்து காட்ட முடியாது. ஏதாவதொரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதனைத் தான் சந்திரிகாவின் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.

ஆனாலும், இந்த விசாரணைப் பொறிமுறை எந்தளவுக்கு உண்மையானதாக, நேர்மையானதாக, நம்பகமானதாக இருக்கும் என்பதை உத்தரவாதப்படுத்த முடியாத நிலையே உள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னர், நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் கண்துடைப்பாகவே இருந்திருக்கிறது என்பதால் அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதேவேளை, தமிழர்களை வெறும் வாக்குறுதிகளால் நம்பவைக்க முடியும் என்று அரசாங்கமோ, சந்திரிகா அம்மையாரோ எதிர்பார்க்க முடியாது. புதிய அரசாங்கமும் கூட, தமிழர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றித் தான் வருகிறது.

அரசியல் கைதிகள் விவகாரம், காணிகள் விடுவிப்பு,  இராணுவமய நீக்கம் என்று பல வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியிருக்கிறது.இப்படியான நிலையில், உள்ளகப் பொறிமுறை விடயத்தில் தமிழர்களை அவ்வளவு இலகுவாக நம்பவைக்க முடியாது. அதேவேளை, கடந்தகாலத் தவறுகளையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஏற்றுக்கொண்டால் தான், நல்லிணக்கம் சாத்தியமாகும் என்று சந்திரிகா அம்மையார் கூறியிருக்கிறார்.

இது உண்மையான கருத்தேயாகும். இந்த விடயத்தில் தான் எந்தளவுக்கு  உறுதியாகவும் உண்மையாகவும் இருக்கிறார் என்பதை சந்திரிகா அம்மையாரும் நிரூபித்தாக வேண்டும். அவரும், 11 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரத்தில் இருந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியிருக்கிறார். நவாலி தேவாலயப் படுகொலை, பிந்துணுவௌ படுகொலை, நாகர்கோவில் படுகொலை, குமாரபுரம் படுகொலை என்று பல கொடூரச் சம்பவங்கள் அவரது ஆட்சிக்காலத்தில் நடந்தன.

அந்த அழிவுகள், தவறுகள், அநீதிகளை அவர் முதலில் ஒப்புக்கொள்ள முன்வருவாரா? அல்லது வெறும் போதனைகளை மட்டும் தான் அவர் செய்யப் போகிறாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X