2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரிவினையின் விதை

Thipaan   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-17)

ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள்

ராணுவப் பலங்கொண்டு தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட 'தனிச் சிங்களம்' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழிச் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் குடியியல் மறுப்புப் போராட்டங்களும் அடக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டு, ஏறக்குறைய 7 மாதங்கள் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1961 ஒக்டோபர் 4இல் விடுதலை செய்யப்பட்டனர். இக்காலத்தில் உடல்நலங்குன்றியிருந்த, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாகபத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சா.ஜே.வே.செல்வநாயகம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்வதற்கு ஸ்ரீமாவோ அரசாங்கம் அனுமதித்திருந்தது.

அத்துடன், தடுப்புக்காவலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, தேசிய வைத்தியசாலையில் 'முதற்தர' பிரிவில் ஆயுதந் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சைளிக்கப்பட்டதாகவும் தனது நூலில் வி.நவரட்ணம் பதிவுசெய்கிறார்.

தமிழரசுக் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் தமிழ் மக்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெறும் மொழிப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் பல்வேறு தளங்களிலும் இனப் பாகுபாட்டையும், இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படவேண்டிய நிலையையும் எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது.

இந்த இனப் பிரச்சினை தோன்றிய காலகட்டம் முதல் தமிழ் மக்கள் அதிகம் அடிவாங்கியது கல்வித்துறையிலாகத்தான் இருக்கவேண்டும். 1961இல் நடந்த சம்பவமொன்றை 'இலங்கையின் டட்லி சேனநாயக்க (ஆங்கிலம்)' என்ற தனது நூலிலும், பின்னர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையொன்றிலும் ரி.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க பதிவுசெய்கிறார். 1961இல் இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் (தற்போது கொழும்புப் பல்கலைக்கழகம்) இளமானிப் பட்டப்படிப்பில் கணேஷ் சண்முகம் என்ற மாணவன் முதல் வகுப்புச் சித்தியையும் முதலிடத்தையும் பெற்றிருந்தான். வி.கே.சமரநாயக்க என்ற மாணவன் முதல் வகுப்புச் சித்தியையும் இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தான்.

வழக்கத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கே மேற்படிப்புக்கான அரசாங்கப் புலமைப்பரிசில் கிடைக்கும். ஆனால், கல்வித் திணைக்களம் வி.கே.சமரநாயக்கவுக்கு இதனை வழங்கியது. இதனை வி.கே.சமரநாயக்க ஏற்க மறுத்தார். வி.கே.சமரநாயக்கவும், கணேஷ் சண்முகமும் கொழும்பு றோயல் கல்லூரியிலும், பின்பு இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலும் ஒன்றாகப் பயின்றவர்கள், நல்ல நண்பர்கள். முறைப்படி அரசாங்கப் புலமைப்பரிசில் கணேஷ் சண்முகத்துக்கே கிடைக்க வேண்டும், அதனைத் தனக்கு எப்படித் தரமுடியும் என வி.கே.சமரநாயக்க வினவினார்.

அதற்கு தற்போது ('தனிச் சிங்களம்' சட்ட அமுலாக்கத்துக்குப் பின்) அரசாங்கப் புலமைப்பரிசில் கிடைக்க சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழிப் பாடத்தில் சித்தியெய்தியிருக்க வேண்டும் எனக் கல்வித் திணைக்கள அதிகாரி பதிலளித்தார். இதைக் கேட்ட 22 வயதேயான வி.கே.சமரநாயக்க, 'அது அவ்வாறானால் நான் இப்புலமைப்பரிசிலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக ரி.டி.எஸ்.ஏ.திஸாநாயக்க பதிவுசெய்கிறார். இதன்பிறகு அவரது நண்பரான கணேஷ் சண்முகத்தினதும், ஏனைய சில நண்பர்களினதும் வேண்டுகோளின்படி புலமைப்பரிசிலை அவர் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் எதிர்காலத்தில் தமது துறையில் உச்சநிலையை அடைந்த பேராசிரியர்கள் ஆனவர்கள். ஆனால், ஒரு வித்தியாசம், 'வித்தியா ஜோதி' பேராசிரியர் வி.கே. சமரநாயக்க தனது உயர்கல்வியின் பின் இலங்கை திரும்பி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். ஆனால், பேராசிரியர் சண்முகம் வெளிநாட்டுக் கல்வியின் பின் இங்கிலாந்திலும், பின்னர் அமெரிக்காவிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி, அங்கேயே தனது வாழ்வின் இறுதியையும் அடைந்தார். இந்தச் சம்பவம் ஒன்றே 'தனிச் சிங்களம்' சட்டம் தமிழ் மக்களுக்கு விளைவித்த அநீதியை எடுத்துக்காட்டப் போதுமானது.

திறமையிருந்தும் முதலிடம் பெற்றும், சிங்களமொழிச் சித்தியின்மையால் தமிழர்களின் வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்பட்டன. மிகச்சிறந்த தமிழ் புலமையாளர்களும் திறமையாளர்களும் இந்நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் இங்கிருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கவில்லை. சிவில் சேவையிலும் தமிழர்களின் வாய்ப்புக்கள் 'தனிச் சிங்களம்' சட்டத்தின் பெயரால் அடைக்கப்பட்டன.

ஆகவே, இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்களின் வெளியேற்றம் என்பது தவிர்க்கமுடியாததானது. இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இங்கிருந்து தமிழ் சிவில் சேவையாளர்களும், புலமையாளர்களும் கானா, நைஜீரியா, ஸம்பியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

தோல்விகண்ட இராணுவப் புரட்சிக்கான முயற்சி

1962ஆம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீமாவோ அரசாங்கம் இராணுவப் புரட்சிக்கான முயற்சி ஒன்றை எதிர்கொள்ள வேண்டிவந்தது. இலங்கை பாதுகாப்புப் படைகளைப் பொறுத்தவரை அன்று கணிசமான அளவில் கிறிஸ்தவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து செல்வாக்கோடு இருந்தவர்களால், சுதந்திரத்தின் பின், அதுவும் குறிப்பான 1956இன் பின் ஏற்பட்டுள்ள மாற்றம் அவர்களுக்குக் கசப்பினை ஏற்படுத்தியது. 'சிங்கள-பௌத்தர்கள்' முன்னிலைப்படுத்தப்பட்டு, தாம் இரண்டாம் நிலைக்குத்தள்ளப்படுகிறோமோ என்ற அச்சம் அவர்களையும் ஆட்கொண்டிருந்தது. 'ஒப்பரேஷன் ஹோல்ட் பாஸ்ட்' எனப் பெயரிடப்பட்ட இந்த முயற்சி பற்றிய தகவல்கள் அரசாங்கத்துக்குத் தெரியவந்திருந்ததிலும், கதிர்காமம் செல்லவிருந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் திட்டம் மாறியதன் விளைவாகவும் இராணுவப் புரட்சிக்கான முயற்சி தோல்வி கண்டது.

அரசாங்கம் பாதுகாப்பை அதிகப்படுத்தியதோடு, இந்த முயற்சியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டார்கள். ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஒவ்வொரு குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியையும் விசாரணைக்கு உட்படுத்தினார். கேணல். எ‡ப்.

ஸீ.டி சேரம் இராணுவப் புரட்சி முயற்சிக்கான முழுப் பொறுப்பையும் ஏற்று வாக்குமூலமொன்றை அளித்திருந்தார். கேணல். எப்.ஸீ.டி சேரம், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் அவசரகதியில் 1962ஆம் ஆண்டின் குற்றவியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், இந்த அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டமே, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலைபெறுவதற்கான வழியையும் ஏற்படுத்திக்கொடுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணிகளான ஜி.ஜி.பொன்னம்பலம், எச்.டபிள்யூ.ஜயவர்தன, எச்.ஜே.கதிர்காமர் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில் ஆரம்பமான 'ட்ரையல்-அட்-பார்' நீதிபதிகளால் கலைக்கப்பட்டது. நீதிபதிகளை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் உயர்நீதிமன்றுக்கானது, தமது நியமனம் நிறைவேற்றுத்துறையால் இடம்பெற்றிருப்பதானது அரசியலமைப்புக்குடன்பாடனது அல்ல என்று அறிவித்தனர் நீதிபதிகள். இரண்டாவதாக அமைந்த நீதிமன்றமும் கலைக்கப்பட்டது. இவ்வழக்குக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவரான ஏ.டபிள்யூ.எச்.அபயசுந்தர க்யூ.ஸீ., முன்னர் சட்டமா அதிபராக இருந்தபோது இவ்வழக்கு விசாரணைகளில் பங்களிப்புச் செய்தவராதலால், அவர் இவ்வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது போனது.

மூன்றாவதாக அமைந்த நீதிமன்றம் 1963ஆம் ஆண்டு ஜூன் 3இல் குற்றஞ்சாட்டப்பட் 24 பேரில், 11 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்தது. ஆனால், பிரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டபோது, 1965ஆம் ஆண்டு டிசெம்பரில் பிரிவி கவுன்ஸில் அளித்த தீர்ப்பில், 1962ஆம் ஆண்டின் குற்றவியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், அரசியல் யாப்புக்கு முரணானது எனவும், அது நியாயமான வழக்கினை மறுக்கிறது, இம்மனிதர்களைக் குற்றவாளியாக்கும் நோக்குடன் அச்சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக பொதுவான குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்புக்களைக் கூட அது மறுக்கிறது எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பொறிமுறை ரீதியிலான வழுவின் காரணமாக 11 பேரையும் விடுதலை செய்தது.

இராணுவப் புரட்சியில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட எவரும் இறுதியில் தண்டனை பெறவில்லை. ஆனால், இது ஏலவே, இனரீதியில் குறுகிய பார்வை கொண்டதாக இயங்கிய அரசாங்கத்தை, இன்னும் குறுகிய நோக்கில் இயங்கச் செய்தது. இந்த இராணுவப் புரட்சி முயற்சியுடன் எந்தச் சம்பந்தமும் இல்லையெனினும் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் வின்ஸ்டன் விஜயகோன் மாற்றப்பட்டு, 'சிங்கள-பௌத்தரான' மேஜர் ஜெனரல் றிச்சட் உடுகம - இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வின்ஸ்டன் விஜயகோன், பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இதுபோலவே, இந்த இராணுவப் புரட்சி முயற்சியுடன் சம்பந்தப்பட்டதாகப் பேசப்பட்ட அன்றைய ஆளுநர் சேர் ஒலிவர் குணத்திலக்கவை மாற்ற மகாராணியாரிடம் வேண்டப்பட்டது. ஆளுநர் என்பவர் மகாராணியாரின் பிரதிநிதி என்பதால் அவரை நியமிக்கும், பதவிநீக்கும், மாற்றும் அதிகாரம் மகாராணியாருக்கு மட்டுமே உரியது. குறித்த கடிதத்துடன் தான் லண்டன் சென்ற கதையை அன்றைய பிரதமரின் செயலாளராக இருந்த பிட்மன் வீரக்கோன், தனது 'ரென்டரிங் அன்டு ஸீஸர் (ஆங்கிலம்)' என்ற நூலில் விவரிக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த மகாராணியார், இலங்கை அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், கண்டிச் சிங்களவரும், 'சிங்கள பௌத்தரும்', இராஜதந்திரியுமான வில்லியம் கோபல்லாவ - ஆளுநரான நியமிக்கப்பட்டார். இலங்கையின் முதலாவது 'சிங்கள-பௌத்த' ஆளுநர் இவராவார். 1962 இராணுவப் புரட்சி முயற்சிக்குப் பின்னர், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தன்னைச் சார்ந்தவர்களை அன்றி மற்றவர்கள் மேல் நம்பிக்கை இழந்ததாகவும், அதன் விளைவாகவே அதிகளவில் 'சிங்கள பௌத்தர்களை', அதிலும் குறிப்பாகக் கண்டிச் சிங்களவர்களை முக்கிய பதவிகளுக்கு நியமித்ததாகவும் தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.

தடம்மாறிய இடதுசாரிகள்

'தனிச் சிங்களம்' சட்டத்தை எதிர்த்ததில், இடதுசாரிக் கட்சிகளுக்கு முக்கியபங்கு இருக்கிறது. கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, கலாநிதி என்.எம் பெரேரா ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். தன்னை மிகப்பெரும் 'மாக்ஸிஸ புரட்சியாளனாக' முன்னிறுத்திய ‡பிலிப் குணவர்த்தன ஆரம்பத்திலேயே இனவாத முகத்தை அணிந்துகொண்டார். 1963ஆம் ஆண்டளவில் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் கூட 'தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து' என்ற நிலையிலிருந்து இறங்கி 'தனிச் சிங்களத்தை' ஏற்கும் நிலையை எட்டிவிட்டிருந்தன.

இதற்கு வாக்குவங்கி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழரசுக் கட்சி பலமான கட்சியாக உருவாகியிருந்தது. அதற்கு மாற்றாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தது. இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்ந்துகொண்டிருந்தது. ஆகவே, இந்த இடதுசாரிக் கட்சிகளின் பிரதான வாக்குவங்கியானது சிங்கள வாக்குவங்கியாகவே இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தக் கொள்கை மாற்றம் அதிலிருந்த தமிழ் உறுப்பினர்களின் வெளியேற்றத்துக்கு விளைவித்தது. 1964இல் லங்கா சமசமாஜக் கட்சி 'தனிச் சிங்களம்' சட்டத்தை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் விசனமடைந்த பாலா தம்பு தலைமையிலான தமிழ் மாக்ஸிஸவாதிகளும், எட்மண்ட் சமரக்கொடி தலைமையிலான சிங்கள

மாக்ஸிஸவாதிகளும் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியைத் தோற்றுவித்தனர். 1963இல் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து 'ஐக்கிய இடது முன்னணியை' உருவாக்கின. இதுவே பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து 1970இல் 'ஐக்கிய முன்னணி' அரசாங்கத்தை உருவாக்கியது.

'தனிச் சிங்களம்' சட்டம் பற்றிய பிரதான இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை மாற்றமானது தமிழ் மக்களின் மொழியுரிமைப் போராட்டத்தில் ஒரு முக்கிய பின்னடைவு. தமிழ் மக்களின் மொழியுரிமையை, சமத்துவத்தை ஆதரித்தவர்களுள் இடதுசாரிகள் முக்கியமானவர்கள். அந்த ஆதரவுப் பலம் இல்லாது போனது நிச்சயம் பின்னடைவுதான். ஆனால், இதைவிட மிகப்பெரும் அநீதிகள் இந்தக் கூட்டணியால் எதிர்காலத்தில் நிகழ்த்தப்படும் என்பது அன்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் 'சிங்கள-பௌத்த' தேசியவாசியான மெத்தானந்தவினால் சிங்களம் மட்டுமல்லாமல் பௌத்தமும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்படத் தொடங்கியது.

-அடுத்த வாரம் தொடரும்...

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .