2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனித உரிமைகளுக்குக் கல்லெறியும் சவூதி அரேபியா

Thipaan   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவந்த இலங்கைப் பெண்ணொருவர், திருமணத்துக்குப் புறம்பான உறவை ஏற்படுத்தியதன் காரணமாக, கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிநேரத்தில், இலங்கை அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு, சவூதி அரசாங்கம் சம்மதித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவைச் சபையின் தலைமைப்பதவிக்கு, இவ்வாண்டு நியமிக்கப்பட்ட சவூதி அரேபியா, உலகமட்டத்திலான மனித உரிமைகள் சம்பந்தமான முக்கியமான பொறுப்பைக் கொண்டிருக்கிறது. உலகின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களைக் கையாளும் முக்கிய பொறுப்பானவர்களைத் தெரிவுசெய்யும் பொறுப்பும் அவற்றை அறிக்கைப்படுத்தும் பொறுப்பும், சவூதி அரேபியாவிடம் உண்டு.

ஆனால், மனித உரிமைகள் பற்றிய சவூதி அரேபியாவின் நிலைப்பாடு, அவற்றுக்கெல்லாம் மாற்றாகவே அமைந்துள்ளது. இவ்வாண்டு நவம்பர் 9ஆம் திகதிவரை, 151 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. மரண தண்டனையென்பது வழக்கமாக, பாரிய குற்றங்களுக்கே வழங்கப்படுகின்ற போதிலும், சவூதி அரேபியாவில் வழங்கப்படும் மரண தண்டனை, அவ்வாறு பாரிய குற்றங்களாகக் கருதப்படமுடியாத குற்றங்களுக்கெல்லாம் வழங்கப்படுவதாக, உலகிலுள்ள மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை, இதில் ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் தான், பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்ற இலங்கையைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், இலங்கையைச் சேர்ந்த திருமணம் முடிக்காத ஆணொருவருடன் 'தவறான' தொடர்புகளை ஏற்படுத்தினார் எனக்குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும்,

 

ஷரியா சட்டத்தின்படி, கல்லால் எறிந்து அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும் சவூதி அரேபியா அறிவித்தது. அச்சட்டத்தின் பிரகாரம், திருமணம்முடிக்காத அவ்வாணுக்கு, 100 கசையடிகள் வழங்கப்படவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

100 கசையடிகள் என்பன, சாதாரணமானவை கிடையாது. வெள்ளிக்கிழமை வழங்கப்படும் இத்தண்டனையில், முதற்தடவையில் 50 கசையடிகளும், அடுத்த முறை 50 கசையடிகளும் வழங்கப்படும். 50 கசையடிகளிலிருந்தே மீள்வது, பலருக்கு இயலாத காரியம். மரணமென்பது பொதுவானதல்ல என்ற போதிலும், நரம்பு சம்பந்தமான உபாதைகளும் பாரிய தசை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், கல்லால் எறிந்து கொல்லப்படுவதோடு ஒப்பிடும்போது, கசையடிகள் என்பன மிக இலகுவான தண்டனையே. சவூதி அரேபியாவின் மற்றொரு தண்டனையான, பொது இடத்தில் வைத்து சிரச்சேதம் செய்வதென்பதும் கொடூரமானது, ஆனால் அதுகூட, சில செக்கன்களில் அல்லது நிமிடங்களில் உயிரைப் பறித்துவிடும். கல்லால் எறிந்து கொல்வதென்பது, மிக மிகக் கொடூரமானது, இரக்கத்தனமற்றது.

இலங்கைப் பணிப்பெண்ணின் விடயத்துக்கு வந்தால், அவரது குற்றம் 'நிரூபிக்கப்பட்டதன்' காரணமாக, அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது எனவும், சவூதி அரேபியாவின் சட்டத்தின்படியே இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது எனவும், குற்றம் செய்யும்போது, தண்டனையைப் பற்றித் தெரிந்துதானே இருப்பார் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில் மோசமானதாக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரான அஸ்மி தாஸிம், இந்தத் தண்டனையை நியாயப்படுத்தியிருந்தார். இந்தத் தண்டனைக்கெதிராக இலங்கை ஊடகங்கள் மேற்கொள்ளும் குறைந்தபட்ச பங்களிப்பைக்கூட, அவர் விமர்சித்திருந்தார். 'உள்ளூர்ச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையே அதற்குக் காரணம். (சவூதி அரேபிய) இராச்சியத்தின் சட்டங்கள் பற்றி ஒருவருக்கு விருப்பில்லையெனில், இங்கு வருவதற்கெதிரான முடிவை, அவர்கள் எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறளை, 'சவூதி அரேபியாவின் சட்டங்களுக்கு எதிராக, எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இலங்கையில் ஒருவர் தவறு செய்தால், எமது நாட்டின் சட்டப்படியே அதற்குரிய தண்டனை வழங்கப்படும். அதேபோன்றுதான், வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கமையவே குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இந்தத் தண்டனை தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது, ஷரியா சட்டத்துக்கெதிராகவும் அதன் அமுல்படுத்தல் தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கெதிராக, சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போர்க்கொடி

தூக்கியதாகவும் அறிவிக்கப்பட்டது.

அத்தோடு, ஷரியா சட்டமென்பது, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டமென்பவுதும், சவூதி அரேபியாவில் காலங்காலமாக இருந்துவரும் சட்டமென்பதும் அனைவரும் அறிந்தது தான். ஆகவே, அச்சட்டத்தினை விமர்சிப்பதென்பது, இறையாண்மைமிக்க நாடொன்றில் சட்டத்தில் தலையிடுவது போன்றதாகும் என்ற கருத்தும் காணப்படுகிறது, முன்வைக்கப்படுகிறது. ஆனால், இக்கருத்துக்களும் எண்ணங்களும், சில விடயங்களில் கவனஞ்செலுத்த மறந்துவிடுகின்றன அல்லது சில விடயங்களை மறைத்து விடுகின்றன.

முதலாவதாக, சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் அல்லது இலங்கை போன்ற நாடுகளிலிருந்து செல்வோர், வறுமை காரணமாகவே அங்கு செல்கின்றனர். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தும் பிரயாண முகவர்கள், அவர்களை ஏமாற்றி அனுப்புவதான செய்திகளை, ஏராளமாகவே பார்த்திருக்கிறோம். இந்நிலையில், சவூதி அரேபியாவின் சட்டம் தொடர்பான விளக்கங்கள், அவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டதா என்பது முக்கியமான கேள்வியாகும். 'ஒரு நாட்டுக்குள் செல்லும்போது, அந்நாட்டின் விதிகளைச் சரியாக அறிய வேண்டியது, அவரவரின் பொறுப்பாகும். இப்போது தான் இணையத்தளங்கள் இருக்கின்றனவே' என்று யாராவது சொன்னால், யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்று அர்த்தம். வீட்டில் மூன்று வேளை அடுப்பெரிய வேண்டுமென்பதற்காக, கொடூரமான நாடொன்றுக்குச் செல்லும் பெண்கள் அல்லது தொழிலாளர்கள், இணையத்தளங்களையோ, இல்லை பத்திரிகைகளையோ பார்ப்பார்கள் என எதிர்பார்ப்பது, முட்டாள்தனமே ஆகும்.

அடுத்ததாக, சட்டமென்பது ஒருபுறமிருக்க, அச்சட்டமானது ஒழுங்காக அமுல்படுத்தப்படுகின்றதா என்றொரு கேள்வி இருக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கடந்தகால அறிக்கைகள் (2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை உட்பட) சிலவற்றை வாசித்தால், அந்நாட்டிலுள்ள சட்ட அமுலாக்கம் பற்றிய கேள்விகள் நிறைய எழும். அங்கு, உள்ளூர் நபர்களை விட வெளிநாட்டவர்கள் மீதான மரண தண்டனை, அதிகளவில் வழங்குவதாக, தரவுகளுடன் நிரூபிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, 'வறுமையான பொருளாதாரப் பின்னணியிலிருந்து பெரும்பான்மையாக வரும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது, அளவுக்கொவ்வாத வீதத்தில் மரண தண்டனை வழங்கப்படுவதென்பது, சவூதி அரேபியாவின் நீண்டகாலப் பிரச்சினையாகும்' எனத் தெரிவிப்பதோடு, அப்பணியாளர்களுக்கு, குடும்பங்கள் அங்கு இல்லாமையாலும், அங்குள்ள நாடுகளின் தூதுவரகங்களிலிருந்து குறைந்தளது உதவிகள் கிடைப்பதாகவும் இல்லாவிடில், உதவிகளே கிடைப்பதில்லையெனவும் தெரிவிப்பதோடு, நீதி நடைமுறைகள் அறிவோ அல்லது அரேபிய மொழியறிவோ இல்லாமையும் முக்கியமானது என்கிறது. சர்வதேச சட்டத்தின்படி, அவர்களுக்கான மொழிபெயர்ப்பாளர் வசதி கிடைக்க வேண்டுமென்ற போதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவைச் சபையின் தலைமை நாட்டில், அவ்வசதி வழங்கப்படுவது அரிதென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வெளிநாட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதும் அரிது என, மன்னிப்புச் சபை மேலும் குறிப்பிடுகிறது. ஆகவே, 'அது சட்டம், சட்டத்தைத் தெரிந்துவிட்டுத் தவறு செய்திருக்க வேண்டும்' என்ற வாதம், சவூதி அரேபியாவின் சட்ட அமுல்படுத்தல் தொடர்பான புரிதல்கள் எவையுமற்ற வாதமேயன்றி, வேறேதுமில்லை.

அடுத்ததாக, திருமணத்துக்குப் புறம்பான உறவுகள், குற்றமா என்ற கேள்வியும் எழுகின்றதல்லவா? உலகின் ஏராளமான நாடுகள், இவ்வாறான உறவுகளை குற்றமென்பதிலிருந்து நீக்கியுள்ளன. இன்னும்சில நாடுகள், இவ்வாறான உறவுகளைக் காரணங்காட்டி, விவாகரத்துக்கு அனுமதியளிக்கின்றனவே தவிர, வழக்குத் தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை. இவ்வாறான நாடுகள், இவ்வாறான உறவை 'தனிப்பட்ட விவகாரம்' என்கின்றன. சட்டமென்பது, எப்போதுமே மாற்றமடைந்தே வந்திருக்கின்றது.

கல்லெறிந்து கொல்வதை நியாயப்படுத்துவோர், 'அந்நாட்டுச் சட்டம் அப்படித் தான். அதை மதிக்க வேண்டும்' என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், ஒரு காலத்தில், உலகின் பல நாடுகளில், அடிமைத் தொழிலென்பது சட்டபூர்வமானது என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு விடயம், சட்டரீதியாக ஏற்புடையது என்பதற்காக மாத்திரம், அதற்கெதிரான குரலை எழுப்பக்கூடாது என்போர், மனித நாகரிகமடைதலுக்கு எதிரானவர்களே. ஏனெனில், அடிமைப்படுத்தலுக்கு எதிரான குரல்களும் போராட்டங்களும், அக்காலத்தில் சட்டத்துக்கு எதிரான குரல்களே, ஆனால், அவை கொண்டுவந்த மாற்றங்கள், மனித நாகரிமடைதலில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவவில்லையா?

இறுதியாக, இந்தப் பணிப்பெண் விவகாரத்தில், இலங்கையின் நடவடிக்கைகளும் போதுமானவையாக இருந்தனவா என்ற கேள்வி எழுகிறது. இலங்கைக்கு அதிகளவில் அந்நிய செலாவணியை வழங்கும் நாட்டுக்கெதிராகக் குரல்கொடுக்கத் தயங்குவதை, பொருளாதார ரீதியாக வேண்டுமானால் நியாயப்படுத்தலாம், ஆனால், இந்நாட்டின் அரசாங்கம் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும், எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன, எவ்வாறான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது, இதுவரை தெளிவற்றதாகவே இருந்துவருகின்றது என்பது தான் கவலையானது.

இந்த விடயத்தின் பின்னராவது, பொருத்தமான, ஏற்றுக் கொள்ளத்தக்க மாற்றங்கள் வரும்வரையில், சவூதிக்கான பணிப்பெண்களை அனுப்புவதிலிருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டுமென்பது தான், எமக்குள்ளிருக்கின்ற மனிதாபிமானத்தின் கோரிக்கையாக இருக்கிறது. நடக்குமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .