2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நியூசிலாந்து - இலங்கை: தப்பிக்குமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இன்றைய நான்காவது நாள் முடிவில், இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்தினாலும், நியூசிலாந்து அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஒரு விக்கெட்டை இழந்து 171 ஓட்டங்களுடன் இன்றைய  நான்காவது நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களுடன் தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் டொம் லேதம் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 71 ஓட்டங்களையும் மார்ட்டின் கப்டில் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

405 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி அல்லது 160 ஓவர்களில் ஆட்டமிழக்காவிட்டால் வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலாவது விக்கெட்டுக்காக, 26.2 ஓவர்களில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தது இலங்கை. இது, இவ்வாண்டில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை, முதலாவது விக்கெட்டுக்காகப் பதிவுசெய்த இரண்டாவது 50-ஓட்ட இணைப்பாட்டமாகும்.

திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணி 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, அறிமுக வீரராக ஜயசுந்தரவும் ஆட்மிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிர்ந்தபோதும், 51ஆவது ஓவரின் முதலாவது பந்தில், குசால் மென்டிஸ் ஆட்டமிழந்தார். அந்நாளில் 19.5 ஓவர்கள் மேலதிகமாகக் காணப்பட்ட போதிலும், மென்டிஸின் விக்கெட்டைத் தொடர்ந்து, மழை கடுமையாகப் பெய்ததையடுத்து, மேலதிகமாக ஒரு பந்தும் வீசப்படவில்லை.

துடுப்பாட்டத்தில் குசால் மென்டிஸ் 46 ஓட்டங்களையும் டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும் நீல் வக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இறுதிநாளான நாளை, 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 296 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறுவதற்கோ அல்லது 90 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி, போட்டியை வெற்றி தோல்வியாக்கவோ இலங்கையால் முடியுமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .