Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸூக்குக் கிடைத்துள்ளது.
உலகின் முன்னணி விளையாட்டுச் சஞ்சிகையான ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட், 1954ஆம் ஆண்டுமுதல் இந்த விருதை வழங்கிவருகிறது. உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள் கருத்திலெடுக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்படுகிறது.
34 வயதான செரினா வில்லியம்ஸ், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமுமே, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பருவகாலத்தில் ஆறு வாரங்களுக்கு, இரண்டாமிடத்தில் காணப்பட்ட வீராங்கனையின் தரப்படுத்தல் புள்ளிகளை விட இரண்டு மடங்கு புள்ளிகளை செரினா கொண்டிருந்தார். இது, 40 வருடகால பெண்கள் டென்னஸ் தரப்படுத்தலில், முதற்தடவையாகும். அத்தோடு, இவ்வாண்டு பங்குபற்றிய 56 போட்டிகளில் மூன்றில் மாத்திரம் தோல்வியடைந்து, 53 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
இவ்வாண்டின் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களில், அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் ஆகியவற்றின் சம்பியன் பட்டங்களை வென்ற அவர், உலக டென்னிஸ் வரலாற்றில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வீர, வீராங்கனைகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
இதுவரைகாலமும் தலா 6 தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன் தொடர், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் ஆகியவற்றிலும், 3 தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்று, 21 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இது, பகிரங்க யுகத்தில், பெண்கள் சார்பில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய சம்பியன் பட்டங்களாகும்.
அவரது இவ்வருடச் சாதனைகளுக்கு மாத்திரமல்லாது, அவரது ஒட்டுமொத்த சாதனைகளுக்காகவும், அவர் வெளிப்படுத்திவரும் சிறப்பான நடத்தைகளுக்காகவும் அவருக்கு இந்த விருதை வழங்குவதாக, அச்சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .