2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

'பொறுமையிருங்கள், கடவுள் உங்களுடனிருக்கிறார்": ஐ.எஸ் தலைவர்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோதல் களங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவைத் தொடர்ந்து,  போராளிகளுக்க உத்வேகமூட்டுவதற்கான முயற்சியாக, போராளிகளுக்கான செய்தியொன்றை, அக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அனுப்பிவைத்துள்ளார்.

'இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்) போர்வீரர்கள், பொறுமையாக இருங்கள், ஏனெனில், நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என, அச்செய்தி குறிப்பிடுகிறது. 'பொறுமையிருங்கள், ஏனென்றால், கடவுள் உங்களுடனிருக்கிறார்" என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இச்செய்தியில், பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோதல் குறித்தும், செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 'நாங்கள் அதைப் (இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்) பற்றி மறந்துவிட்டதாகவும், அதிலிருந்து கவனந்திருப்பப்பட்டுள்ளதாகவும் யூதர்கள் நினைக்கிறார்கள். இல்லை யூதர்களே, பலஸ்தீனை நாங்கள் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகள், விமானத் தாக்குதல்களிலேயே கவனஞ்செலுத்துவதோடு, தரைப்படைகளை இறக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிராகப் போராடும் முடிவை எடுக்காத நிலையில், அதையும் பக்தாதி விமர்சித்தார். மேற்கு நாடுகளும் யூதர்களும், ஏற்கெனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தோல்வியடைந்த வரலாற்றைத் தொடர்ந்தே, தரைப்படைகளைக் களமிறக்கத் தயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து டிசெம்பர் 14ஆம் திகதிவரை, தங்களின் கட்டுப்பாட்டிலிருந்த 14 சதவீதமான நிலங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், துவண்டுபோயுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு உத்வேகமூட்டுவதே, இச்செய்தியின் பிரதான நோக்கமென, ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X