2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 03 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், இறுதிக் காலத்தில், அணியின் பெறுபேறுகள் வீழ்ச்சியடை, சில வீரர்களுக்கும் வாஸூக்குமிடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து, அப்பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள வாஸ், 'பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்த போது, சில பந்துவீச்சாளர்கள், தங்களுடைய தனிப்பட்ட பயிற்றுநர்களுடன் பயின்றுகொண்டிருந்ததை நான் கண்டேன். அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு நான் விரும்பினேன். ஆனால், அது அந்த வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதியாக, அணியின் சில வீரர்களைப் பயன்படுத்தி சில சக்திகள், சிலரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு முயன்றதாக நான் உணர்ந்தேன். ஆனால், அதிகாரப் போட்டியின் காரணமாக, எங்களுடைய சொந்தக் கிரிக்கெட்டே பாதிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்பாக இதற்கு முன்னரும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட சமிந்த வாஸ், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், உடற்தகுதி குறித்துக் கவனஞ்செலுத்துவதில்லை எனவும், அதிக எடையும் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஆரம்பிக்கவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில், ஐந்து அணிகளில் ஒன்றின் பயிற்றுநராக, சமிந்த வாஸ் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X