Gavitha / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்துன் ஏ. ஜயசேகர
புதிய அரசியலமைப்பொன்று வேண்டுமா அல்லது நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவி, நியமன ரீதியான நாட்டுத் தலைவர் பதவி கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவரது வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி, 'எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய பின்னர், இந்த வாய்ப்பு மக்களிடமே வழங்கப்படும்' என்றும் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையைச் சிங்கள தேசமாகப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்க வேண்டும். சிங்கள பௌத்த நாடு பற்றியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையைத் தொடர்ந்து வைக்க வேண்டியமை குறித்தும் சிலர் கதைக்கின்றனர்.
அனைத்துச் சமூகங்களினதும் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு மதத்தினதும் தேசத்தினதும் நன்மைகளைப் பாதுகாப்பதற்கு, ஏனைய சமூகத்தினரின் உரிமைகளை நாம் அடக்கலாகாது' என்றார்.
'இலங்கையை ஒரு நாடாகவும் சிங்கள தேசமாகவும் பாதுகாக்க, தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலேயர்கள், ஏனைய சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகளை நாம் மதிக்க வேண்டும். அவர்களுடைய இடத்தை மறுப்போமானால், நல்லிணக்கம், நிலைத்த தன்மை, சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாடு ஆகியவற்றை நாம் எப்போதும் அடைய முடியாது' என அவர் தெரிவித்தார்.
'புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பான இறுதி முடிவை, அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை.
அது, புதிய அரசியலமைப்பாக அமையுமா அல்லது தற்போதைய அரசியலமைப்பின் திருத்தமாக அமையுமென என்பது எமக்குத் தெரியாது. தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாகவும் என்ன செய்வது என்பது தொடர்பாகவும் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் விருப்பு வாக்கு முறையை என்ன செய்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் முடிவு செய்ய வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
ஜனவரி 9ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார். அன்றைய தினம், நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்கான தீர்மானமொன்றை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவுள்ளார். இதன்மூலமாக, 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்புக்குப் பதிலாக, புதிய அரசியலமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக உருவாக்க ஆரம்பிக்கும் செயற்பாடு ஆரம்பமாகும்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், பொது விவாதத்துக்கு வழங்கப்படுதல், இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறையாக அமையுமெனத் தெரிவித்த ஜனாதிபதி, 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, இதுவரை 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அத்தோடு, முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில், இதைத் திருத்துவதற்கான மேலும் பல முயற்சிகள், இரகசியமாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .