2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'ஹத் ஹவுள': டட்லி தலைமையில் அமைந்த ஏழுதரப்புக் கூட்டணி

Thipaan   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 21)

வளர்ந்த இனவாதமும், வேரூன்றத் தொடங்கிய மதவாத அரசியலும், முளைவிடத் தொடங்கிய பிரிவினையும்

1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட 'தனிச் சிங்களச்' சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் 'பிரிந்து' செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி கண்டமையும், மறுபுறத்தில் தமிழ் மக்களின் தொண்டைக் குழியில் சிங்களம் திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தமையும் தமிழ் மக்களிடம் ஒரு நிர்க்கதியற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.

இவையனைத்தினதும் விளைவாக, ஆங்காங்கே பிரிவினைக்கான கோசங்கள் முளைவிடத் தொடங்கின. 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம், 'சிங்களவர்கள் ஒருபோதும் அரசியல் ஒப்பந்தங்களை மதிக்கமாட்டார்கள், சிங்கள அரசியல்வாதிகள், அவர்கள் வலதுசாரியோ, இடதுசாரியோ, நடுநிலைவாதியோ எதுவானாலும் தமிழர்களுடைய மொழியுரிமையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார். அவர், 1963இல் தன்னுடைய 'ஈழம்: விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் (ஆங்கிலம்)' என்ற

நூலில், 'இலங்கையிலிருந்து பிரிந்து, 1802க்கு முன்பு இருந்தது போல தமிழரசு ஒன்றை மீளுருவாக்குவதே தீர்வு என்று கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை நான், ஈழத் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்துக்;குமான போராட்டத்துக்கு அழைக்கிறேன்' என அழைப்பு விடுத்தார்.

இதைவிடவும் 1961இல் உருவாகியதாகக் கூறப்படும் 'புலிப்படை' என்ற அமைப்பும் 'தமிழர் தாயகத்துக்காக' போராடுதல் என்ற எண்ணத்தோடு உருவானதாகவும், இதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் மறைமுக ஆதரவு இருந்ததாகவும் சில அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். வரலாற்றின் பின்னைய காலங்களிலும் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் இந்தப் போக்கை நாம் தொடர்ந்து காணலாம்.

வடக்கிலே தமிழரசுக் கட்சியாகவும், தெற்கிலே 'பெடரல் பார்ட்டியாகவும்' (சமஷ்டிக் கட்சி) தன்னை முன்னிறுத்திக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அஹிம்சை வழிப் போராட்டத்தைத் தனது நேரடி போராட்ட ஆயுதமாக முன்னிறுத்தியது. சா.ஜே.வே.செல்வநாயகம், ஈழத்து காந்தி என அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்டார். ஆனால், வரலாற்றின் பின்னைய காலங்களில், இதே தமிழரசுக் கட்சித் தலைமைகள் ஆயுதப் போராட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் 'தனிச்சிங்களம்' என்பதும் சிங்கள மேலாதிக்கமும் ஆணித்தரமாக வேரூன்றச்செய்யப்பட்டது. இத்தோடு, 'பௌத்தத்தின்' மேலாதிக்கமும் மெதுவாக முன்னிறுத்தப்படத் தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அநகாரிக தர்மபாலவின் வருகையோடு, பௌத்த மறுமலர்ச்சி என்பது பாரியளவில் முன்னெடுக்கப்படத் தொடங்குகிறது. ஆங்கிலேய-கிறிஸ்தவ மேலாதிக்கத்தை எதிர்ப்பதனூடாக, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் அநகாரிக தர்மபாலவின் பங்கு முதன்மையானது.

பௌத்தத்தையும் சிங்கள கலாசாரத்தையும் புகழ்தல், பிரித்தானியரையும் கிறிஸ்தவர்களையும் குற்றம் சுமத்துதல், இலங்கையில் பௌத்தத்தின் அழிவைப் பற்றிய பயத்தை உருவாக்குதல், சிங்கள-பௌத்தத்தின் மறுமலர்ச்சி அல்லது மீளுருவாக்கம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துதல் என்ற நான்கு படிமுறைப் பிரசாரத்தை அநகாரிக தர்மபால முன்னெடுத்ததாக நீல் டிவோட்டா குறிப்பிடுகிறார்.

'அந்நியர்களான முகம்மதியர்கள் இங்கு வந்து வளர்கிறார்கள், ஆனால், மண்ணின் மைந்தர்களான சிங்கள மைந்தர்கள் வேலையற்றுத்திரிகிறார்கள்' என்று அநகாரிக தர்மபால அன்று முழங்கினார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த 'சிங்கள-பௌத்த' மேலாதிக்கவாதம், 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பஞ்சமாபலவேகயவின் ஒரு தரப்பாக பௌத்தபிக்குகளைக் களமிறக்கினார். இது பௌத்த பிக்குகளின் அரசியல் ஆதிக்கத்தின் இன்னொரு அத்தியாயத்தை தொடங்கிவைத்தது. மகாவம்சம்-பௌத்தம்-சிங்களம் என்பவை பற்றிய புரிதலின்றி இலங்கையின் அரசியலை விளங்கிக்கொள்வது கடினம். இன்றுவரை இலங்கை அரசியல் போக்கைத் தீர்மானிப்பது இவைதான்.

1965 காலப்பகுதியில் பௌத்த எழுச்சி ஒன்றும் ஏற்படத் தொடங்கியது. 'ஊடகச் சட்டமூலத்தை' எதிர்க்கும் போராட்டத்துக்கு, ஏறத்தாழ 6,000 பௌத்த பிக்குமார்களை ஐக்கிய தேசியக் கட்சி வரவழைத்திருந்தது. 1965 தேர்தலைப் பொறுத்தவரையில் பௌத்த பிக்குகளினதும், சிங்கள-பௌத்த இனவாதத் தலைவர்களினதும் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 'தனிச்சிங்களக்' கொள்கையை பௌத்த பிக்குகளும், சிங்கள-பௌத்த இனவாத அரசியல் சக்திகளும் ஆதரித்தாலும், ஸ்ரீமாவோடு தோழைமைகொண்டிருந்த 'மாக்ஸிஸக்' கட்சிகள் மீது அவர்களுக்கு நேர்மறையான அபிப்பிராயம் இருக்கவில்லை.

அத்தோடு, 'தனிச்சிங்களச்' சட்டமென்பது அன்றைய நியதியாகிவிட்டதன் விளைவாகவும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டிருந்ததன் விளைவாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு பௌத்த பிக்குகள், மற்றும் சிங்கள-பௌத்த இனவாத அரசியல் சக்திகளின் ஆதரவு 1965இல் அமோகமாக இருந்தது.

'ஹத் ஹவுள': ஏழு கட்சிகளின் கூட்டணி

கொள்கையளவில் ஒன்றோடொன்று முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைப்பது என்பது எவ்வளவு தூரம் அரசியல் நேர்மையுள்ள செயல் என்ற கேள்விகளுக்கு அப்பால், அவை யதார்த்தத்தில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம் பெற்றுக்கொண்டிருப்பதை நாம் இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் அண்மைக்காலம் வரை பழமைவாதக் கட்சியும், தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியும் கூட்டணியாக ஆட்சி செய்தன.

பழமைவாதமும், தாராண்மைவாத ஜனநாயகமும் எந்தப் புள்ளியில் இணங்கிப்போவது அல்லது ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்குவது என்ற தத்துவார்த்தப் பிரச்சினைகளும், யதார்த்த முரண்பாடுகளும் எழாமல் இல்லை, குறிப்பாக இரண்டுதரப்பும் முற்றிலுமாக மாறுபட்ட எதிரெதிர்க் கொள்கைகளைக் கொண்ட விடயங்கள் தொடர்பில் எழும் சிக்கல் நிலையை தவிர்க்க முடியாது.

ஆனால், அரசியல் யதார்த்தம், அல்லது அரசியல் சந்தர்ப்பவாதம் அல்லது அரசியல் தேவை இதுபோன்ற கூட்டணிகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று இலங்கையில் ஆட்சியிலிருக்கும் 'தேசிய அரசாங்கம்' கூட இதுபோன்றதொரு கலவைதான். எந்த ஆட்சியை மக்கள் வேண்டாமென தூக்கி எறிந்தார்களோ, அதே ஆட்சியில் பங்காளிகளாக இருந்தவர்கள், இன்று இந்த ஆட்சியிலும் பங்காளிகளாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டணி யதார்த்தம் மட்டும் தர்க்கங்களுக்கு முரணாணது போலும். 1965ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், அரசாங்கமொன்றை டட்லி சேனநாயக்க அமைத்த போது, அது ஏழு கட்சிகளைக் கொண்ட 'தேசிய அரசாங்கமாகப்' பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆனால், அதில் அங்கம் வகித்த ஏழு கட்சிகளினதும் கொள்கைகள், செயற்பாடுகள், விருப்பங்கள், அபிலாஷைகள் என்பன பலவிடயங்களில் கட்சிக்குக் கட்சி முரண்பட்டதாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி (66 ஆசனங்கள்), இலங்கை தமிழரசுக் கட்சி (14 ஆசனங்கள்), சி.பி. டி சில்வா தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்களின் ஸ்ரீ லங்கா சுதந்திர சோசலிசக் கட்சி(5 ஆசனங்கள்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (3 ஆசனங்கள்), 'மார்க்ஸிஸப் புரட்சியாளன்' ‡பிலிப் குணவர்த்தனவின் மஹஜன எக்ஸத் பெரமுண(1 ஆசனம்), கே.எம்.பி.ராஜரத்னவின் சிங்கள-பௌத்த இனவாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுண (1 ஆசனம்), விஜயானந்த தஹநாயக்கவின் லங்கா ப்ரஜாதாந்த்ரவாதி பக்ஷய (1 ஆசனம்) ஆகியவையே 'ஹத் ஹவுள' (ஏழு தரப்பின் சேர்க்கை) என்று எதிர்த்தரப்பினரால் விமர்சிக்கப்பட்ட கூட்டணியின் தூண்கள்.

தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியுடன், 'மார்க்ஸிஸப் புரட்சியாளன்' ‡பிலிப் குணவர்த்தன கூட்டணி அமைத்தது எப்படி? சிங்கள-பௌத்த இனவாதக் கட்சியான ஜாதிக விமுக்தி பெரமுண இருக்கின்ற கூட்டணியில் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இருப்பது எப்படி? இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியையும், தமிழ்க் காங்கிரஸையும் தவிர ஏனைய 5 கட்சிகளும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகள். தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கோரிநின்றன.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 1948லேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு ஆதரவளித்திருந்தது. சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் அகில இலங்கை தமிழ்

காங்கிரஸிலிருந்து பிரிந்து, தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்ததன் முக்கிய காரணங்களுள் ஒன்றாக ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்தமை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதே சா.ஜே.வே.செல்வநாயகம் 1965இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளித்தார். இந்த முடிவுக்கு 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் என்று பிரபலமாக அறியப்படும், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தமே காரணம்.

1956க்கும் 1965க்கும் இடையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வீழ்ச்சியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுச்சியையும் காணலாம். ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்;கு ஆதரவளித்தமையை பெரும் தவறாக, 'துரோகமாக' தமிழரசுக் கட்சியினர் பிரசாரம் செய்தனர். அரசாங்கத்தோடு இணைவது அல்லது அமைச்சர் பொறுப்பினை ஏற்பது என்பது 'துரோகத்தனமான' அல்லது 'தமிழினத்துக்கெதிரான' விடயம் என்பது போன்ற அரசியல் மாயை இந்த ஒரு தசாப்த காலத்தினுள் எழுப்பப்பட்டது.

இதன் காரணமாகவோ என்னவோ, 1965இல் டட்லி சேனநாயக்க தலைமையில் அமைந்த கூட்டணி அரசாங்கத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம், நாடாளுமன்றத்தின் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் காங்கிரஸ் கூட அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை.

'டட்லி-செல்வா' ஒப்பந்தம், 1965ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலேயே ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்தது. தேர்தல் காலத்தின் போது டட்லி சேனநாயக்கவினால் இந்த ஒப்பந்தம் இரகசியமாக வைக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்றுவரை தொடர்வதைக் காணலாம். இதுவே பல ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் வாய்ப்பளித்தது. எதிர்த்தரப்பினது பிரசாரத்தில் 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் பற்றி நிறைய ஊகங்களும், வதந்திகளும் முன்வைக்கப்பட்டன, அதில் குறிப்பிடத்தக்கதொன்று 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தில் 'தனிச்சிங்களச்' சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான உடன்பாடு இருக்கிறது என்ற பிரசாரமாகும். 1965 பெப்ரவரி 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ (காபந்து பிரதமர்) தன்னுடைய உரையில் கூட பெரும்பான்மையோர் பேசும் மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தினார்.

ஆனால், இந்தவகைப் பிரசாரம் பெருமளவில் எடுபடாததற்குக் காரணம், 'தனிச்சிங்களச் சட்டத்தின் தந்தை' என்றறியப்பட்ட சிங்கள-பௌத்த இனவாத அரசியல்வாதியான மெத்தானந்த, ஸ்ரீமாவோ அரசாங்கத்துக்கு எதிராக இருந்தமை, அத்தோடு ‡பிலிப் குணவர்த்தன, சி.பி. டிசில்வா போன்ற 'தனிச்சிங்களச்' சட்டத்தை ஆதரித்த பெருந்தலைகள் பலரும், ஸ்ரீமாவோ அரசாங்கததுக்கு எதிராக இருந்தமையும் ஆகும். தமிழ் மக்களின் ஏமாற்றமிகு அரசியல் ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்றான 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தில் உண்மையில் என்ன விடயங்கள் இருந்தன? எதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சி இந்த எழுதரப்புக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளித்தது, அது என்ன விளைவுகளைத் தமிழருக்குத் தந்தது?

(அடுத்தவாரம் தொடரும்...)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X