2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பந்தரின் சாணக்கியம் எதுவரை?

Thipaan   / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் 'தீர்வு' பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக இருக்கின்றார். பிறந்திருக்கின்ற 2016ஆம் ஆண்டினை அவர் அதன் போக்கில் குறிப்பிட்டளவான நம்பிக்கைகளோடு எதிர்கொள்கின்றார்.

கடந்த கால தேர்தல் மேடைகளிலும், அதனைத் தாண்டிய சில உரையாடல்களிலும் தமிழ் மக்களுக்கு 2016ஆம் ஆண்டு தீர்வு கிடைத்துவிடும் என்கிற விடயத்தை இரா.சம்பந்தன் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கின்றார். ஆனால், அந்தத் 'தீர்வின் உறுதிப்பாடு' எவ்வகையானது, எதனை நோக்கியதாக இருக்கப் போகின்றது என்பது தொடர்பில் அவர் அவ்வளவாக பேசியதில்லை. அப்படியான கட்டங்களை அவர் மௌனியாக கடந்து வந்திருக்கின்றார்.

அதுபோலவே, தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமையொன்றின் வருகையையோ, தன்னுடைய ஆளுகைகளை மீறிய உரையாடல்களையோ இரா.சம்பந்தன் என்றைக்கும் இரசித்ததில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை ஒரு சிலர் எடுக்கின்றார்கள் என்கிற விமர்சனமும், அதன் தொடர்ச்சியும் இரா.சம்பந்தனின் இந்த நிலைப்பாடுகளின் போக்கினால் வருவதுதான். இதனை, இரா.சம்பந்தன் தன்னுடைய அடையாள அரசியல் நிலைப்பாட்டின் போக்கில் அணுகுவதாகவும் கொள்ள முடியும். அதாவது, அரைநூற்றாண்டுகளைத் தாண்டிய தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய தலைமையின் கீழ் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது என்கிற வரலாறுப் பதிவு சார்ந்தது அது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையிலிருந்து மௌனிக்கப்பட்டதும், அதுவரை விடுதலைப் புலிகளின் டம்மியாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய அரசியலை தலைமையேற்கின்றது. அதன்பின்னரான, கடந்த ஆறரை ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற அங்கிகாரம் என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டியது. அது, மீண்டுமொரு ஏக தலைமை நிலையை தோற்றுவித்தது. இந்தநிலை, இரா.சம்பந்தனை அதிகாரங்கள் சார்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிகார மையமாகவும், ஏனைய பங்களிக் கட்சிகள் அதிகாரங்களற்ற துணைத் தரப்புக்களாகவும் மாற்றப்பட்டதற்கும் அது காரணமாகியது. இன்றைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை ஒவ்வொரு தரப்பாக வெளியேற்றும் நிகழ்ச்சி நிரலொன்று தமிழரசுக் கட்சியினால் கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்த நிகழ்ச்சி நிரல், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்கிற பெயரினை தன்னோடு தக்கவைத்துக் கொள்வது தொடர்பிலான உறுதிப்பாட்டோடும் இருக்கின்றது.

இரா.சம்பந்தன் தன்னுடைய தலைமைக்கு அச்சுறுத்தலான தரப்புக்களைப் பெரும் பதற்றத்தோடு எதிர்கொள்வது இல்லை. மாறாக, அவர் மிக நிதானமாக இருந்து கொண்டு, எதிர்த்தரப்புக்களை பதற்றப்பட வைக்கின்றார். அதாவது, எதிராளிகளை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மக்கள் முன் செல்ல வைக்கின்றார். அதன்மூலம், தன்னுடைய எதிராளிகள் பலவீனமானவர்கள், பதற்றமானவர்கள் அவர்களினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது என்கிற தோற்றத்தினை ஏற்படுத்த முனைகின்றார். 

இந்த நிலைக்குள் சிக்கிக் கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்தப் பட்டியலில் முக்கியமானவர்கள். 

இரா.சம்பந்தன் தன்னுடைய தலைமைக்கு அச்சுறுத்தலான அரசியல்வாதிகளை எப்படிக் கையாள்கின்றாரோ அதேபோலலே, புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட தரப்புக்களையும் கையாள்கின்றார். அவர், சிவில் சமூக வெளிக்குள்ளும் விடாக்கொண்டன் மனநிலையில் இருந்து கொள்கின்றார். அத்தோடு, தன்னை நோக்கி 'அரசியல் சாணக்கியர்' என்கிற நிலையை மிக கச்சிதமான உருவாக்கி வைத்திருக்கின்றார்.

அவரை நோக்கிய விமர்சனங்கள் பெரியளவில் முன்வைக்கப்பட்டாலும், அவருடனான நேரடியான உரையாடல்கள் மற்றும் கேள்விகளின் போது, அவரை மீறிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்கின்றார். தன்னை உணர்ச்சிவசப்பட வைக்கும் நிலைக்கும் எந்தத் தரப்பினாலும் செலுத்த முடியாதவாறு பார்த்துக் கொள்கின்றார். அதாவது, எப்போதுமே அவர் அடுத்த கட்டத்திலிருந்து கொண்டு மற்றவர்களை கீழ்நோக்கி பார்க்கின்றார்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பிலான அணுகுமுறை தொடர்பிலும் இரா.சம்பந்தன் அதே நிலைப்பாட்டினையே வெளிப்படுத்துகின்றார். அது, வெற்றிகரமான பக்கத்தில் தன்னை தொடர்ந்தும் வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கருதுகின்றார். தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை உரையாடல்களை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், அவற்றை அவர் குறிப்பிட்டளவு அமைதியாக கடக்க நினைக்கின்றார்.

அதுபோக, தன்னுடைய நிலைப்பாடுகளை, தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகள் மாற்றும் வல்லமை உருவாகாதவாறு பார்த்துக் கொள்வதில் தன் சார்ப்பு தரப்புக்களை வைத்து காய் நகர்த்துகின்றார். இப்போதும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அப்படியானதொரு நிலையை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியலின் மாற்றுத் தரப்புக்கள் என்ன மாதிரியான அணுகுமுறையினூடு இரா.சம்பந்தனை தங்களுடைய பக்கத்துக்குள் கொண்டு வரப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில், அவரை, முழுமையான சுதந்திரத்தோடு அனுமதிப்பதும் கூட அவ்வளவு ஆரோக்கியமான நிலையைத் தோற்றுவிக்காது. அது, தமிழ்த் தேசிய அரசியலில் சிலவேளை அச்சுறுத்தலான நிலையையும் உருவாக்கிவிடலாம். கடந்த காலங்களில் இவ்வாறான அனுபவங்களை தமிழ்த் தரப்பு அதிகமாக வெற்றிருக்கின்றது.

தென்னிலங்கை அரசியல் களம் தன்னுடைய அடிப்படைகளை மாற்றிக் கொண்டு தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான அர்ப்பணிப்புக்களை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியதில்லை. இனியும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல்களின் போது தென்னிலங்கையின் அரங்காற்றுகை வெற்றியை தீர்மானிக்கப் போகும் சக்திகள் சார்ந்து இருந்தது.

அதன்போக்கில், கடும்போக்கு உரையாடல் அல்லது மென்போக்கு உரையாடல் எழுச்சி பெற்றிருக்கின்றன. அது, தேர்தல் பருவநிலை சார்ந்தது மட்டுமே. மாறாக, பௌத்த சிங்கள அடிப்படைகளைத் தாண்டி, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முனைப்புக்களை எந்தவொரு புள்ளியிலும் நகர்த்துவதற்கு தயாராக இருந்தது இல்லை.

புதிய அரசியல் யாப்பினை வரைவது தொடர்பில் தென்னிலங்கை தன்னுடைய நகர்வினை ஆரம்பித்திருக்கின்றது. 'புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒற்றையாட்சி என்கிற அடிப்படைகளைத் தாண்டியதாக இருக்காது. அங்கு சமஷ்டி என்கிற பேச்சுக்கே இடமில்லை'  என்கிற முன்னறிவுப்புக்களை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் 'சமஷ்டியின் அடிப்படையில்' அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதன்மூலமே, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முடியும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும், சமஷ்டியை அனுமதிக்காத புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்?!

மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்துக்குப் பின்னரான மைத்திரி- ரணில் தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் செல்லப்பிள்ளை. அப்படிப்பட்ட நிலையில், தன்னுடைய  செல்லப்பிள்ளையை கரைச்சல் படுத்தும் முனைப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தும் போது, அதனை அந்த நாடுகள் அனுமதிக்குமா? அனுமதித்தாலும், அதன் அளவு எவ்வளவாக இருக்கும் என்பதுவும் கூட, தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத் தீர்மானங்களின் போது அதிக தாக்கம் செலுத்தும்.

புதிய அரசியல் யாப்பினை முன்வைப்பதினூடு, தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொடர்ந்தும் கூறி வந்திருக்கின்றார்கள். ஆனால், அவர்கள்தான், அடிப்படை கட்டமைப்புக்களை மாற்றாத அரசியல் யாப்பு ஒன்றினை வரைவது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள். அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பகுதியளவில் நீக்கி, நாடாளுமன்றத்தினை அதிகாரமுள்ள சபையாக மாற்றுவதுதான் புதிய அரசியல் யாப்பின் அடிப்படை நோக்கமாகும்.

இப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைவது தொடர்பிலான நம்பிக்கையை இரா.சம்பந்தன் எதன் போக்கில் வெளிப்படுத்துகின்றார். புதிய அரசியல் யாப்பில் அதற்கான அங்கிகாரத்தினை எவ்வாறு பெறப்போகின்றார் என்கிற விடயங்கள் வெளிப்படையான உரையாடல்களின் மூலம் செய்யப்பட வேண்டியவை. அதற்கான பக்கம் அவர் நகர வேண்டும்.

கடந்த காலத் தேர்தல்களில் தமிழ் மக்களிடம் கோரிப் பெற்றிருக்கின்ற பெரும் ஆணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இரா.சம்பந்தன் அர்ப்பணிப்பாக இருந்தாக வேண்டும். அத்தோடு, தென்னிலங்கை, வெளிநாடுகள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களோடும் விடாப்பிடியான களமாடுதலுக்கும் தயாராகவும் இருக்க வேண்டும். மாறாக, கமுக்கமான நகர்வினூடு வெற்றிகளைப் பெறலாம் என்பது எவ்வளவுக்கு சரியானதாக இருக்கும் என்பது ஆய்வுக்குரியது.

தமிழ்த் தேசிய அரசியலில் அனுபவமும், நிதானமும் இரா.சம்பந்தனிடம் அதிகமாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அவர் அதனை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எவ்வளவு வெற்றிக்கனிகளைப் பறித்துத் தரப்போகின்றார் என்பதில் தான், தமிழ் மக்களின் எதிர்கால அரசியலும், அவருக்கான வரலாற்றுப் பதிவும் தங்கியிருக்கப் போகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .