2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'டட்லி-செல்வா' ஒப்பந்தம்

Thipaan   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 22)

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் பின்னணி

1964 டிசெம்பரில், ஸ்ரீமாவின் அரசாங்கம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்காகக் கட்சிகள் தயாராகும் போதே, 1965 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உணர்ந்திருந்தன. இருதரப்பும் தொங்கு நாடாளுமன்றம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டையும் கருத்திற்கொண்டு, தமது வியூகங்களை வகுக்கத்தொடங்கின. அதன்படி, தமது கட்சியினால் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத பட்சத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தொடங்கின.

அன்றைய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி இலங்கை தமிழரசுக் கட்சியாகும். முன்னைய நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கொண்டிருந்தது. லங்கா சமசமாஜக் கட்சி 12 ஆசனங்களையே கொண்டிருந்தது. ஆகவே, தொங்கு நாடாளுமன்றம் ஒன்று ஏற்படுமானால் ஆட்சியைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்கும் என்பதை இரு பெருங் கட்சிகளும் உணர்ந்திருந்தன. அதன்படி இருபெருங் கட்சிகளும் தமிழரசுக் கட்சியுடன் அதன் ஆதரவைப் பெறும் பொருட்டு தேர்தல் பிரசாரக்காலத்திலேயே இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

தேர்தல் பிரசாரக்காலத்தில், சா.ஜே.வே. செல்வநாயகம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, கொழும்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தும் பொறுப்பு தமிழரசுக் கட்சியின் ஆலோசகராக அன்றிருந்த, முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது. எம்.திருச்செல்வம், சா.ஜே.வே. செல்வநாயகத்துக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

ஆகவே, நம்பிக்கையுடன் இந்தப் பணி அவருக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை அன்றை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்த எஸ்மண்ட் விக்கிரமசிங்க முன்னெடுத்தார். (இவர் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார்). இவருக்குத் துணையாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.

மறுபுறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - லங்கா சமசமாஜக் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி என்று முக்கூட்டமைப்பின் சார்பில் கலாநிதி.என்.எம்.பெரேரா, கலாநிதி.கொல்வின் ஆர்.டி. சில்வா, அணில் முனசிங்ஹ ஆகியோர், எம்.திருச்செல்வத்துடன் தமிழரசுக் கட்சியின் ஆதரவைத் தம் பக்கத்துக்குப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களுக்குத் துணையாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஏ.அஸீஸ் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தார். வேறு ஒரு தளத்தில் எம்.திருச்செல்வத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மைத்திரிபால சேனநாயக்கவின் பாரியார் திருமதி. ரஞ்சி சேனநாயக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பலதரப்பிரனருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோதும், இவை கடும் இரகசியமாக நடத்தப்பட்டன. எந்தவொரு தரப்புக்கும் மறுதரப்போடு பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருப்பது தெரியாத அளவுக்கு இரகசியம் காக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், எந்தவொரு உறுதிமொழியையும் எந்தத் தரப்புக்கும் எம்.திருச்செல்வம் வழங்கவில்லை. இறுதி முடிவு சா.ஜே.வே.செல்வநாயகத்தினுடையதாகவே இருக்கும் என்பதை இக்கட்சிகளும் அறிந்திருந்தன.

தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 66 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 41 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், லங்கா சமசமாஜக் கட்சிக்கு 10 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திர சோசலிசக் கட்சிக்கு 5 ஆசனங்களும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 ஆசனங்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு 3 ஆசனங்களும், மஹஜன எக்ஸத் பெரமுண, ஜாதிக விமுக்தி பெரமுண, லங்கா பிரஜாதந்த்ரவாதி பக்ஷய ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனமும், ஏனைய 5 ஆசனங்களும் பெற்றுக்கொண்டன. நிச்சயமாக இரு பெருங்கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவு முக்கியம் என்ற நிலை இருந்தது. இவ்விடத்தில் எஸ்மண்ட் விக்கிரமசிங்க வேகத்துடன் செயற்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே, எம்.திருச்செல்வத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய எஸ்மண்ட் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு எம்.திருச்செல்வத்தை சம்மதிக்கச் செய்ததுடன், உடனடியாக சா.ஜே.வே.செல்வநாயகத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் செய்தார்.

கொழும்பில் டரட் வீதியிலிருந்த டொக்டர்.எம்.வி.பீ.பீரிஸின் இல்லத்தில் டட்லி சேனநாயக்க தலைமையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வி.ஏ.சுகததாச மற்றும் எஸ்மண்ட் விக்கிரமசிங்க ஆகியோரும் கொண்ட குழுவும், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் டொக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன், எஸ்.எம்.இராசமாணிக்கம், வீ.நவரட்ணம் மற்றும் எம்.திருச்செல்வம் ஆகியோரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமுகமாகவே ஆரம்பித்தது.

ஏலவே, எஸ்மணட் விக்கிரமசிங்க மற்றும் எம்.திருச்செல்வம் ஆகியோர் அடிப்படை விடயங்கள் பற்றி பேசியிருந்தமை இதற்கு உதவியாக இருந்தது. தமிழ் மொழிக்கு நிர்வாக அந்தஸ்து, நீதிமன்றத்தில் தமிழ்மொழியின் பாவனை, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால், காணிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதைத் தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்த்தது.

இது தமிழ் மக்கள் 'தாயக பூமியாகக்' கருதிய வடக்கு-கிழக்கின் குடியியல் பரம்பலைச் சிதைக்கின்ற செயல் என தமிழரசுக் கட்சி கூறியது. வடக்கு-கிழக்கில் குடியேற்றங்கள் அமைக்கப்படும் போது, அங்கு தமிழ் மக்களே குடியேற்றப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியினர் கேட்டனர், இதன் போது சினங் கொண்ட டட்லி சேனநாயக்க, 'அப்போது என்னுடைய மக்கள் எங்கே போவார்கள்?' என்று கேட்டதாக தனது கட்டுரையொன்றில் டி.பீ.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்கிறார். இந்த இடத்தில் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்தன.

இவ்வேளையில், ஸ்ரீமாவோ, சமஷ்டிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறார் என்ற வதந்தி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களையும் வந்தடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியவில்லையானால் இந்த வதந்தி உண்மையாகும் என்ற பதட்டம் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டது. முட்டுக்கட்டையைத் தகர்த்தெறியும் வேலையை எஸ்மண்ட் விக்கிரமசிங்க செய்தார். ஒரு பிரதேசத்தில் விவசாயக் குடியேற்றங்கள் அமைக்கப்பதற்காக காணிகள் வழங்குகையில் முன்னுரிமையின் அடிப்படையில் அம்மாவட்ட, அதன் பின் அம்மாகாண, அதன் பின் அண்மைய மாகாண மக்களுக்கு வழங்குவதுவும், வடக்கு-கிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குவது எனவும் எஸ்மண்ட் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.

இது இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றின் இருபிரதிகள் தயார் செய்யப்பட்டு, டட்லி சேனநாயக்க மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் என்ற இருதலைவர்களாலும் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இருதலைவர்களும் கைலாகு கொடுத்துக்கொண்டனர். அப்போது,  செல்வநாயகம் டட்லியிடம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்னதாகவும், அதற்கு டட்லி 'நான் முப்பது வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஒருபோதும் கொடுத்த சத்தியவாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை' என்று டட்லி சேனநாயக்க கூறியதாகவும் தனது கட்டுரையொன்றில் டி.பீ.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்கிறார். டட்லி சேனநாயக்கவின் வார்த்தைகள் பொய்யாக அதிக காலம் எடுக்கவில்லை.

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாகக் கருதப்படும் 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் 4 விடயங்கள் பற்றி பேசுகிறது. முதலாவதாக எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்கவினால் 1958ல் நிறைவேற்றப்பட்டாலும், 1965 ஆனாலும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாது உள்ள தமிழ் மொழி விசேட சட்டத்தின் கீழ் தமிழ் மொழியை வடக்கு- கிழக்கின் நிர்வாக மொழியாக்குவதற்கு இணங்கப்பட்டது.

இரண்டாவதாக தமிழ் பேசும் நபர் ஒருவர் தன்னுடைய வணிக கொடுக்கல்வாங்கல்களை தமிழ்மொழியில் நாடெங்கிலும் செய்யும் வாய்ப்பு வேண்டும் எனவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக்கப்பட வேண்டும் எனவும் இணங்கப்பட்டது. மூன்றாவதாக மாவட்டசபைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு இருதரப்பு தலைவர்களாலும் இணங்கப்படும் விடயதானங்கள் தொடர்பில் அதிகாரப்பகிர்வு வழங்க இணங்கப்பட்டது.

ஆனால், இச்சபைகளை தேசிய நலன் தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கம் நெறிப்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் இணங்கப்பட்டது. நான்காவதாக காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம் சீர்திருத்தப்பட்டு, இலங்கைப் பிரஜைகள் இக்கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி பெற உரித்துடையவர்கள் ஆக்கப்படுவார்கள் எனவும், மேலும் வடக்கு-கிழக்கில் அமைக்கப்படும் குடியேற்றங்களில், முன்னுரிமையடிப்படையில் முதலில் குறித்த மாவட்டத்திலுள்ள நிலமற்ற மக்களுக்கும், அடுத்ததாக குறித்த மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கும், அடுத்ததாக அண்மைய மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் காணி வழங்கப்படும் எனவும் இணங்கப்பட்டது.

இவையே 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். 'பண்டா-செல்வா' ஒப்பந்தமோ, 'டட்லி-செல்வா' ஒப்பந்தமோ மிக விரிவான ஒப்பந்தங்கள் அல்ல மாறாக அவை கொள்கையளவிலான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தும் சான்றுகளாக அமைந்தன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை இணக்கப்பாட்டுக்கு மட்டுமல்ல. அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வையே தமிழ்த் தலைமைகள் வேண்டின என்பதற்கும் இதுவே சான்று. மிக எளிதாக, தமிழர்கள் பிரிவினைவாதிகள் என்ற பிரசாரத்தை இன்றை இனவாத அரசியல் மற்றும் சமூக சக்திகள் முன்னெடுக்கின்றன.

இவற்றில் எந்த உண்மையும் இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அச்சட்டம் கடுமையாக அமுலப்படுத்தப்பட்டும் இனக்கலவரங்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டும், தமிழ்மக்களின் அஹிம்சை வழிப்போராட்டம் வன்முறை கொண்டு அடக்கப்பட்டும் என தமிழ் மக்களது இருப்பும், உரிமைகளும் ஒரு தசாப்த காலமளவுக்கு சவாலுக்குட்படுத்தப்பட்டும், தமிழ்த் தலைமைகள் பிரிவினையை வேண்டவில்லை.

மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், தமிழ் பேசும் மக்களும் சமத்தவத்துடன் வாழ சமஉரிமையையும், அதனைச் சாத்தியமாக்கும் அதிகாரப் பகிர்வையுமே வேண்டினர். ஆனால், இந்த முயற்சிகளெல்லாம் வெறும் தோல்வியிலேயே சென்று முடிந்தன. டட்லியோடு ஒப்பந்தம் செய்த செல்வநாயகம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்ன வார்த்தைக்குள் தமிழ் மக்களின் ஏமாற்ற வரலாறு இருக்கிறது.

தான் நம்புகிறவரைப் பார்த்து யாரும் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொல்வதில்லை. நம்பிக்கை பற்றிய ஐயம் உண்டாகிறபோதுதான் அதனை மறுமுறை உறுதிப்படுத்திக்கொள்ள 'நான் உங்களை நம்புகிறேன்' என்ற வார்த்தை தேவைப்படுகிறது.

அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் அல்லது 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இலங்கையில் இனமோதல் ஏற்பட்டிருக்காது என்று பேசினார். வரலாற்றை பின்னோக்கிப் பார்த்து இது இப்படியிருந்தால், இன்று இப்படியிருந்திருக்கும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது.

ஆனால், ஒருவேளை இந்த ஒப்பந்தங்களில் ஏதோ ஒன்று ('பண்டா-செல்வா' நிறைவேறியிருந்தால், 'டட்லி-செல்வா'வுக்கான தேவை இருந்திருக்காது.) நிறைவேறியிருந்தால், இலங்கை வரலாறு ஏதோ ஒரு வகையில் மாறியிருக்கக்கூடும். ஆனால் 'பண்டா-செல்வா'-வுக்கு ஏற்பட்ட முடிவுதான்... 'டட்லி-செல்வா'வுக்கும் ஏற்பட்டது.

(அடுத்தவாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .