Gavitha / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், தனது சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவ்வாறு செல்வதற்கு, இலங்கையின் அழுத்தமும் காரணமாக அமைந்ததாக, அவரது மனைவி லைலா நஷீட் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், முள்ளந்தண்டுப் பிரச்சினைகள் காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுவந்தார்.
அவருக்கான மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், அதற்காக அனுமதிக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஆரம்பத்தில், அதற்குச் சாதகமான சமிக்ஞைகள் வழங்கப்படாத போதிலும், தற்போது, அவர் விரைவில் ஐக்கிய இராச்சியம் செல்லவுள்ளார் என, மாலைதீவுகளின் வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.
தனது கணவருக்கான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது மனைவி, 'சிகிச்சைகளுக்காக ஐக்கிய இராச்சியத்துக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளமை, பெரிய விடயமாகும். சிறையில் அவர் தடுமாறி வந்த நிலையில், இதற்காக, மாதக்கணக்கில் நாம் முயன்று வந்தோம். எனினும், அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமென நாம் எண்ணவில்லை' எனத் தெரிவித்தார்.
அவருக்கான அனுமதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது எனக் கேட்கப்பட்டபோது, இலங்கை, ஐக்கிய இராச்சியம், இந்தியா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாகத் தெரிவித்தார். ';இலங்கை, பிரித்தானிய அரசாங்கங்கள், மிகவும் ஆதரவுடன் செயற்பட்டன' எனக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விஜயத்தையும், ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான இராஜாங்க அமைச்சரான ஹியூகோ ஸ்வையர், கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட விஜயம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், கடந்தாண்டு பதவியேற்றதைத் தொடர்ந்து, மாலைதீவுகளின் அரசாங்கத்துக்கு, மனித உரிமைகள் தொடர்பாகக் கடுமையான நிலைப்பாட்டை, இலங்கை பின்பற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .