அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள்
20-01-2016 04:59 AM
Comments - 0       Views - 77

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

'இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்", 'ஆஜராகுமாறு அணித்தலைவர் மத்தியூஸூக்கு அழைப்பு", 'இலங்கை வீரர்கள், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்" - இது, கடந்த சில நாட்களாக, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புகள். இதில், செய்திகளை வெளியிட்ட பலருக்கும் அவற்றைப் பகிர்ந்தோருக்கும், இவற்றின் பின்னணி குறித்தான தெளிவு காணப்பட்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு வீரர்களும் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்களும், கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்படும் அதே விசாரணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது, அச்சமேற்படுவது சாதாரணமானதே. இந்நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிடுதல் பொருத்தமானது.

இலங்கை அணியின் வலைப்பந்து வீச்சாளராகச் செயற்பட்ட கயான் விஷ்வஜித் என்பவர், இலங்கை அணியின் வீரர்கள் சிலருடன், போட்டிகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவர், குசால் பெரேராவை அணுகியமை உறுதிப்படுத்தப்பட, ரங்கன ஹேரத்தின் பெயரும் ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. வேறு யாரும் அணுகப்பட்டார்களா என்பது தெரியவரவில்லை. இவ்வாறு அணுகப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச வீரர்கள் செய்ய வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளதைப் போன்று, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவில், இலங்கை வீரர்கள் முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே, இவ்விடயம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கயான் விஷ்வஜித்தின் முயற்சிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் பணிக்கமர்த்தப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநரான அனுஷ சமரநாயக்கவும் உதவினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் தெரிவித்ததைப் போன்று, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுபயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க அன்று, மாறாக அவர், தேசிய கிரிக்கெட் அக்கடமியோடு இணைந்தவர். ஆனால், லசித் மலிங்க போன்ற முன்னணி வீரர்களுக்குப் பயிற்றுவித்த பெருமை, அனுஷவுக்கு உண்டு.

அது ஒருபுறமிருக்க, தங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, வீரர்கள் பக்கம், அவ்விடயத்தில் எந்தவிதமான தவறும் காணப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதனையடுத்து, அவ்விடயம் தொடர்பான விசாரணைகளை, இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து, சர்வதேச கிரிக்கெட் சபை மேற்கொள்ளும். அதுவரை, அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவோரை, தற்காலிகப் பணிநீக்கம் செய்வதும் வழக்கமானது. இவையனைத்தும், ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படாது, இரகசியமான முறையிலேயே பெரும்பாலும் இடம்பெறும்.

ஆனால், இவ்விடயத்தில் மாற்றமொன்றாக, இவ்விடயம் தொடர்பில் கேள்வியுற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சந்தேகநபர்களுக்கெதிராக பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டார். இதனால் இவ்விடயம், புதிய திருப்பமொன்றைச் சந்தித்தது.
இலங்கையில், போட்டி நிர்ணயத்தை விசாரிப்பதற்கான போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லையென்பதே, சட்ட வல்லுநர்களின் கருத்தாகும். அதிலும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு, அதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே.

'பாரிய அளவிலான நிதி மோசடிகள், ஊழல்கள், பாரிய அளவிலான அங்கிகரிக்கப்படாத கருத்திட்டங்கள், பாரிய அளவிலான பொதுமக்கள் பணம் மற்றும் சொத்துகளுக்கெதிரான குற்றங்கள், தேசிய பாதுகாப்பு, அரச நிதி, சுகாதாரத்துக்கும் சுற்றாடலுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான நிதி மோசடிகள், சட்டவிரோதமான வகையில் செல்வந்தராகுதல் மற்றும் உத்தியோகபூர்வ அதிகாரத்தை வரையறையின்றிப் பயன்படுத்துதல், பணச்சுத்திகரிப்பு, பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்குதல் மற்றும் சட்டவிரோமான கொடுக்கல் வாங்கல்களைப் புலனாய்வு செய்தல்" ஆகியனவே, அப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும். அதன்படி, 'சட்டவிரோமான கொடுக்கல் வாங்கல்களைப் புலனாய்வு செய்தல்" தவிர, வேறு எந்த ஆணையிலும், இவ்விடயத்தைச் சிறிதும் சம்பந்தப்படுத்த முடியாது. இங்கு, கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதா என்பதில் கேள்வியிருக்கிறது. அத்தோடு, இந்தப் பிரிவு, பாரிய மோசடிகளையே விசாரணை செய்துவருவது வழக்கம். இந்நிலையில், இவ்விடயத்தில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு எந்தவிதச்சம்பந்தங்களும் இல்லையென்றே முடிவுக்கு வரலாம்.

ஆகவே, வெறுமனே அரசியல் இலாபம் அல்லது பெயரைப் பெறுவதற்காகவோ, இல்லாவிடில், அதிக ஆர்வத்தின் காரணமாகவோ தான், இவ்விடயம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது. ஏனெனில், இலங்கையின் சட்டங்களில், போட்டி நிர்ணயத்தைத் தண்டிக்க ஏற்பாடுகள் இல்லாத நிலையில், அதனை விசாரிக்க ஆணையில்லாத பொலிஸ் பிரிவொன்றைப் பயன்படுத்தி விசாரிப்பதென்பது, காலத்தைக் கடத்துவதற்கும், 'நாட்டில் ஊழலுக்கெதிராக ஏதோ நடக்கிறது" என்பதைக் காட்டுவதற்குமே பயன்பட முடியும்.
மாறாக, வழக்கமான நடவடிக்கைகள் போன்று, சர்வதேச கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபை ஆகியன இணைந்து மேற்கொண்டுவருகின்ற விசாரணைகளுக்குப் போதிய ஒத்துழைப்பை வழங்கிவிட்டு, அவ்விசாரணைகளின் போது பொலிஸாரின் அல்லது சட்ட அமுல்படுத்தும் ஏனைய பிரிவினரின் உதவி தேவைப்பட்டிருப்பின், அதனை வழங்குதலே சிறப்பாக அமைந்திருக்கும்.

தற்போது, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இவ்விடயம் காணப்படுவதன் காரணமாக, வீரர்களுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும் மன உளைச்சலே ஏற்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 'நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் அஞ்சலோ மத்தியூஸ்" என்ற செய்திக்கான தேவை ஏற்பட்டிருக்காது, அதனைத் தொடர்ந்து, 'அஞ்சலோ மத்தியூஸ் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டாரா?" என, சாதாரண இரசிகனொருவன் தவறாக எண்ண வேண்டியேற்பட்டிருக்காது. ஆனால் என்ன, ஊடகங்கள் சிலவற்றுக்குச் செய்தி கிடைத்திருக்காது, அதிஆர்வமுள்ள அமைச்சருக்கு, தன்னை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்திருக்காது. உண்மைகள் வெளிவருவதை அனுமதிப்பதை விட, 'நான் தான், உண்மைகளுக்கான நடவடிக்கைகளை எடுத்தேன்" என்பது, அரசியல்ரீதியாகப் பலன் தரக்கூடும். நடுவில் சிக்குண்ட வீரர்களைப் பற்றி யார் கவலையடைவார், அதில், யாருக்கு, என்ன நன்மை?

 

"அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty