2024 மே 04, சனிக்கிழமை

கலப்பு இரட்டையர் போட்டியில் போட்டி நிர்ணயம்?

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், கலப்பு இரட்டையர் போட்டியொன்றில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றதா என்பது குறித்துச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

முதற்சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெய்னைச் சேர்ந்த டேவிட் மரேரோ, லாரா அருவாபரென்ன ஜோடி, செக் குடியரசைச் சேர்ந்த அன்ட்ரியா லாவஸ்கோ - போலந்தைச் சேர்ந்த லூகாஸ் குபொட் ஜோடியுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய போட்டியே, சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில், டேவிட் - லாரா ஜோடி தோல்வியடையுமென, சூதாட்டக்காரர்களால் அதிகளவு பணம், போட்டிக்கு முதல்நாளில் திடீரென முதலிடப்பட்டமையே, சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. அப்போட்டியில் அந்த ஜோடி, 0-6, 3-6 என்ற செட் கணக்கில் படுதோல்வியடைந்திருந்தது.

சந்தேகத்துக்கிடமான குறித்த சூதாட்ட முதலீடுகள் காரணமாக, அப்போட்டிக்கான சூதாட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்ததாகவும், அதை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, முதற்சுற்றுப் போட்டி என்பதோடு, கலப்பு இரட்டையர் போட்டி என்பதால், அதிகளவு பணத்தை ஈர்ப்பதில்லை என்ற போதிலும், பெட்பெயார் என்ற சூதாட்ட இணையத்தளத்தில், 25,000 அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இவ்வகையான போட்டிகள், 1,000 டொலர்களுக்குக் குறைவான பணத்தை ஈர்ப்பதே வழக்கமாகும்.

எனினும், போட்டி நிர்ணயம் குறித்தான முயற்சிகள் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என, டேவிட் - லாரா ஜோடி தெரிவித்துள்ளது. அத்தோடு, டேவிட்டின் முழங்காலில் உபாதை காணப்பட்டதாகவும், அதனால், சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்த முடியாது போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான நேரடியான பதிலெதனையும், எந்தவொரு நிர்வாகச் சபையும் வெளியிடவில்லை. ஆனால், எந்தவிதமான மோசடிகளுக்கும் எதிராகத் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுமென, அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .