Thipaan / 2016 ஜனவரி 27 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறலுக்குமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மே மாதமளவில், ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவாவில் சந்திக்கும் போது, இலங்கையின் முன்மொழிவுகள் தயாராக இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து இவ்வளவு நாட்களாகியும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொறுப்புக் கூறல் பொறிமுறையில், சர்வதேசப் பங்களிப்பு இருக்காது எனவும் அதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அக்கருத்துக்கு மாறான கருத்தையே, பிரதமர் வெளியிட்டார்.
'அதை (சர்வதேசப் பங்கெடுப்பு) நாங்கள் இல்லையென்று சொல்லவில்லை' என்றார். ஆனால், ஜனாதிபதி அதற்கு மாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறாரே எனச் சுட்டிக்காட்டிய போது, ஜனாதிபதி அதைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், 'எங்களுடைய முதலாவது முன்னுரிமை, மக்களே. நாங்கள் என்ன செய்தாலும், அது மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும். நாங்கள் ஆரம்பித்துள்ள நீண்டகால செயற்பாடு அதுவாகும்' எனத் தெரிவித்த அவர், 'ஜெனீவா தீர்மானத்தில் நாங்கள் வழங்கிய அர்ப்பணிப்பின்படி நாங்கள் செயற்படுவோம்' என்றார்.
இலங்கை தொடர்பான விடயத்தில், நம்பிக்கையீனமே அதிகமாகக் காணப்படுகிறது எனச் சுட்டிக்காட்டியபோது, இவ்விடயம் தொடர்பாகப் போராடியவர்களில், தான் முதன்மையானவன் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், மே மாதத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் போது, அனைத்துச் சந்தேகங்களும் இல்லாது செல்லும் எனக் குறிப்பிட்டார்.
ஐ.நா விசாரணைக் குழுவின் அடிப்படையிலும், சனல் 4 நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், 40,000 பேரளவில் இறந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட போது, 'போரில், மிகப்பெரிய எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டனர். ஆனால் அது 40,000 என்பதில் எமக்குக் கேள்வி இருக்கிறது. உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.
சனல் 4 நிறுவனம் முன்னர் தயாரித்த போர்க் குற்றம் தொடர்பான காணொளிகள், புகைப்படங்களை, முன்னைய அரசாங்கம் போலி என நிராகரித்த போதிலும், தற்போதைய அரசாங்கத்துக்கு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பிலேயே மாற்றுக் கருத்துக் காணப்படுவதாக, பிரதமர் தெரிவித்தார். இதன்போது பிரதமர், 'அங்கு இறப்புக் காணப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவ்வாறான போரில், இறப்புக் காணப்பட்டிருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
காணாமல் போனோர் அனைவரும் இறந்திருக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், இலங்கையில் எந்தவிதமான இரகசியத் தடுப்பு முகாம்களும் இல்லை என உறுதியாகத் தெரிவிக்கிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'இல்லை, எந்தவிதத் தடுப்பு முகாம்களும் இல்லை. வடக்கிலும் இல்லை, தெற்கிலும் இல்லை. நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன். தடுப்பிலுள்ள 292 பேர் மாத்திரமே, அரசாங்கத்துக்குத் தெரிந்தவர்கள். ஏனையோர் எவருமில்லை' எனத் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரில், சரணடைந்ததாக ஆவணப்படுத்தப்பட்டவர்கள், ஒரு வருடத்தின் பின்னர் தடுப்பில் காணப்பட்டதாகத் தகவல்கள் இருந்த போதிலும், அவர்களைத் தற்போது காணவில்லையே எனக் கேட்கப்பட்டபோது, 'அவர்கள் அனைவரும், அனேகமாக இறந்துவிட்டார்கள்' எனத் தெரிவித்தார். தடுப்பில் ஏன் இறந்தார்கள் எனக் கேட்கப்பட்டபோது, அதற்குத் தான், காணாமல் போனோர் அலுவலகமும் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவும் இருக்கின்றன எனவும், என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .