2026 ஜனவரி 17, சனிக்கிழமை

அதிகாரப் பகிர்வு: எங்கிருந்து எதுவரை?

Thipaan   / 2016 ஜனவரி 31 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே. சஞ்சயன்

அரசியலமைப்பு மாற்றம், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுக்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், இதனைக் குழப்புகின்ற முயற்சிகள், பரவலாக நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இத்தகைய முயற்சிகளைக் குழப்ப விரும்பும் அரசியல் சக்திகள், நாடெங்கும் பரவலாகவே இருக்கின்றன. அதாவது, தற்போதைய அரசாங்கமும் கூட, இவற்றில் எந்தளவுக்குப் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இருக்கிறது.

ஏனென்றால், போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று கூறும் அரசாங்கத்துக்கு, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற குழப்பம், இன்னும் தீரவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக, நிலையான அமைதியை உருவாக்கப் போவதாகக் கூறும் அரசாங்கத்திடம், அதனை எவ்வாறு சாத்தியமாக்கப் போகிறது என்ற வினாவுக்கான விடை கிடையாது. இதனால் தான், இந்த விடயங்களில் அரசாங்கத்தின் பற்றுறுதி மீது கேள்வி எழுகிறது.

அதேவேளை, அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமா என்ற நம்பிக்கையீனம், வடக்கிலும் உள்ளது. இருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கான யோசனைகள் தயாரிப்பு, தீர்வுத் திட்டங்கள் தயாரிப்பு என்று, கொழும்புக்குச் சளைக்காத வகையில், வடக்கிலும் மும்முரமான பணிகள் நிகழ்ந்து வருகின்றன.

விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டம் வரைக்கும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, தனிநாடு ஒன்றே தீர்வு என்ற நிலைப்பாடு தான் இறுதியானதாக இருந்து வந்தது. ஆனால், 2009 மே மாதத்துக்குப் பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன?, தமிழர்களுக்கு எத்தகைய அதிகாரப்பகிர்வு தேவை? என்று, இன்னமும் வரையறை செய்யப்படாத நிலையொன்றே காணப்படுகிறது. அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள், தமிழர்களுக்காக அதிகாரப்பகிர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற வரையறை ஒன்றைத் தீர்மானிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பது முக்கியமான விடயம்.

தமிழர்களின் பிரச்சினைக்கு, அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வலியுறுத்துவது என்ற கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பின் எல்லோரிடத்திலும் காணப்படுகின்ற ஒரு பொதுமையான விடயமாக இருக்கிறது. ஆனால், இத்தகைய அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் விடயத்தில், கவனத்தில் கொள்ளப்படும் விடயங்கள் எவை என்பதும் முக்கியமானது.

அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு ஒன்றை வலியுறுத்தும் போது, அது, நடைமுறைச் சாத்தியமானதாக, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருக்க வேண்டும் என்பது, ஒரு வகையானது. தமிழர் தரப்பின்

அபிலாஷைகளை மட்டும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது, இன்னொரு வகை. இரண்டுமே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை வலியுறுத்துவதாக இருந்தாலும், அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழர் தரப்பு விரும்புகின்ற, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற அதிகாரப்பகிர்வுக்கு, அனைத்துத் தரப்பினதும் ஆதரவு கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை.

ஏனென்றால், இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், கடந்த காலங்களில் தமிழர் தரப்பினால், குறைந்தபட்சமாக முன்வைக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு கோரிக்கைகளுக்கும் சரி, அதிகபட்சமாக முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கைக்கும் சரி, சிங்களப் பெரும்பான்மையினர், ஆதரவு அளிக்கவில்லை. தமிழர் தரப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரிப்பது, அவர்களின் ஒரு குறைபாடாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படியானதொரு நிலையில், தமிழர் தரப்பு எத்தகைய அதிகாரப்பகிர்வை முன்வைக்க முயன்றாலும், அதற்குத் தெற்கிலுள்ள சிங்களப் பெரும்பான்மையினரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிங்களப் பெரும்பான்மையினர் எதிர்க்கின்றனர் என்பதற்காக, தமிழர் தரப்பு, தனது

அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு தீர்வை முன்வைக்காதிருக்க முடியாது. தமிழர்கள், தமது பக்கத்தில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் ஒரு தீர்வை முன்வைத்தால் தான், குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் அரச தரப்பு விட்டுக்கொடுக்க முன்வரும் என்ற கருத்தும் உள்ளது.

எவ்வாறாயினும், தமிழர்கள் முன்வைக்கக்கூடிய அதிகபட்ச அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையோ அல்லது அரசாங்கம் போடுகின்ற நிபந்தனைகளோ மட்டும் தான் இறுதியானதாக இருக்க முடியாது. பேச்சுகளில் பல விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் நடக்கலாம். இது தான் பொதுநடைமுறை.

அத்தகையதொரு நிலை வரும்போது, தமிழர் தரப்பு எந்தளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும், அரச தரப்பு எந்தளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும்? என்பன தான், அதிகாரப்பகிர்வின் வெற்றியைத் தீர்மானிக்கின்ற விடயங்களாக இருக்கும்.

விட்டுக்கொடுப்புக்கு எந்தவொரு தரப்பும் தயாராக இல்லாது போனால், அதிகாரப்பகிர்வு முயற்சிகள், அது சம்பந்தமான பேச்சுகள், நடவடிக்கைகள் எல்லாமே, முன்னைய சந்தர்ப்பங்களைப் போலவே முடங்கிப் போகும். தமிழர் தரப்பில் உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தேவை என்று வலியுறுத்தப்பட்டாலும், அதில் எந்தளவுக்கு நெகிழ்வு நிலைக்குத் தயாராக இருக்கப் போகிறது என்பதும் முக்கியம். நெகிழ்வு நிலை தான், அடுத்தடுத்த கட்டங்களுக்கான திறவுகோலாக இருக்க முடியும்.

அவ்வாறானதொரு சாத்தியப்பாட்டுக்கு உகந்த சூழல், தற்போது காணப்படுகிறதா என்ற கேள்வி உள்ளது. அதிகாரப்பகிர்வுக்கான திட்டங்களை முன்வைக்கும் போது, மறுதரப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்- இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற நிலையை கருத்தில் கொள்வது ஒரு விதமாக இருக்கும். மறுதரப்பை நிராகரிக்க வைக்க வேண்டும் என்ற நிலையில் யோசனைகளை முன்வைப்பது, இன்னொரு வகையானதாக இருக்கும். இரண்டு தரப்பிலுமே, இத்தகைய நோக்கில் யோசனைகளை முன்வைப்பவர்கள் இருக்கலாம்.

பொதுவாகவே, தெற்கிலிலிருந்து அதிகாரப்பகிர்வுக்கு முன்மொழியப்படும் திட்டங்கள், வடக்கில் நிராகரிக்கப்படுகின்றதும் வடக்கிலிருந்து முன்வைக்கப்படுகின்ற யோசனைகள், தெற்கில் நிராகரிக்கப்படுவதும் இயல்பே. இப்போதும், ஒற்றையாட்சி, சமஷ்டி விடயங்களில், இதுதான் நிலையான விடயமாக இருக்கிறது.

அதேவேளை, இந்த விடயங்களில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருதரப்பிடமும் காணப்படுகிறது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைச் சாத்தியமாக்கும் வழிமுறையை தெற்கும், சமஷ்டி என்பது பிரிவினைக்கு வழிகோலாது என்பதை வடக்கும், எவ்வாறு மறுதரப்புக்கு நம்பவைக்கப் போகின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது. மறுதரப்பை மாட்டி வைக்கவோ, அவர்களை நிராகரிக்க வைத்து அரசியல் இலாபம் தேடவோ முனையாமல், திட்டங்களை முன்வைக்கவும் இணைக்கவும் முயற்சிக்கும் போது தான், இந்த விடயத்தில் தீர்வு நோக்கி நகர முடியும்.

ஆனால், அப்படியானதொரு அரசியல் சூழல் இன்னமும் ஏற்பட்டு விட்டதாகக் கூற முடியாது. இப்படியான நிலையில், தீர்வு முயற்சிகளைக் குழப்பும் சக்திகளின் கரங்கள் வலுவடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். சமஷ்டி பற்றிய அச்சங்கள் தெற்கில் இருக்கின்ற போது, அங்குள்ள மக்கள், பேரினவாதிகளால் இலகுவாகவே வசப்படுத்தப்படுவார்கள்.

இத்தகைய சூழலைத் தடுக்கின்ற உருப்படியான முயற்சிகள் ஏதும், எந்தத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பது, வெறுமனே எழுத்து ரீதியான மாற்றமாக மட்டும் இருக்கும் என்றால், அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இந்த அரசியலமைப்பு மாற்றத்தை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக முன்வைக்கும் போது, அது, எல்லாத் தரப்புகளினதும், நம்பிக்கையையும், இணக்கத்தையும் பெற்றதாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையும் இணக்கமும் இல்லாது போனால், இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு ஏற்படாது. எனவே தான், நடைமுறைச்சாத்தியமான அதிகாரப்பகிர்வு என்ற விடயம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

ஆனால், அந்த நடைமுறைச்சாத்தியமான என்ற விடயம் பெரும்பான்மையினரின் கருத்துக்களையே அதிகம் பிரதிபலிப்பதாக கொள்ளப்படும். அதனால் தான், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க என்று அடுத்த விடயம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஓர் அதிகாரப்பகிர்வு யோசனை நடைமுறைச் சாத்தியமானதாக இருப்பதற்கு, பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றதாக இருக்க வேண்டும்.

அவர்களின் ஆதரவைப் பெற்ற அதிகாரப்பகிர்வு எல்லோராலும் குறிப்பாக சிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தால், அது பயனற்றது. இந்த இரண்டு பக்கங்களினாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறைச்சாத்தியமான தீர்வு ஒன்றை எட்டுவது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது. அவ்வாறானதொரு நிலையில் தான் விட்டுக்கொடுப்பும் நெகிழ்வுத் தன்மையும் தேவைப்படும். விட்டுக்கொடுப்பு என்று வரும்போது, சமஷ்டியை விட்டுக்கொடுத்து வேறொன்றைப் பெறுவதை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாது. அதுபோல, ஒற்றையாட்சியை விட்டுக்கொடுத்து, வேறொன்றை ஏற்றுக்கொள்ள தெற்கிலுள்ள தரப்புகளும் தயாராக இருக்காது.

இந்தச் சிக்கலான சூழலுக்கு உறுதியான அரசியல் தலைமைத்துவங்களினால் தான் தீர்வை எட்ட முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனவுறுதியும், விருப்பு வெறுப்பற்ற அரசியல் தற்துணிவும் கொண்ட எந்தவொரு அரசியல் தலைமையினாலும் தான் இதனைச் சாதிக்கலாம். இப்படிப்பட்ட வாய்ப்புகள் அரிதாகவே உள்ள நிலையிலும், தமிழ், சிங்கள மக்களிடையே அடிப்படையில் காணப்படும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படாத இந்தச் சூழலிலும் அதிகாரப்பகிர்வுக்கான முயற்சிகள் எந்தளவுக்குச் சாத்தியமாகப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X