2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல'

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எங்களின் கட்சி சார்பாக போட்டியிட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் தமிழரசுக்கட்சியுடன் இணைந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் உள்ளன. அந்த கூட்டமைப்பில் ஒரு கட்சியில் உள்ள ஒருவரை இன்னொரு கட்சிக்காரர் இணைத்துக்கொள்வது அடிப்படையில் அநாகரிகமான செயற்பாடு.

அவ்வாறு யாரும் சென்றால் அந்த கட்சியின் தலைவர்களுடன் அது தொடர்பில் பேசுவதே நாகரிகமான விடயமாகும். அவ்வாறு பேசாமல் கூட்டமைப்பில் ஏனைய கட்சியில் உள்ளவர்களை விலைக்கு வாங்குவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும். அது ஒரு அநாகரிகமான முன்மாதிரி என்றே நாங்கள் கருதுகின்றோம்.

முன்னர் ஜே.வி.பியை உடைக்கின்றார் ,ஐக்கிய தேசிய கட்சியை உடைக்கின்றார் ,பல்வேறுபட்ட கட்சிகளிடம் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றார் மிக மோசமான ஜனநாயக விரோதி என்றெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதனை தமிழரசுக்கட்சியாலும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இன்று இதே தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் ஏனைய தமிழ் கட்சிகளை நிர்முலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது விரும்பத்தக்கது அல்ல. அது ஒரு வேதனைக்குரிய விடயம். அது ஒரு நாகரிகமான விடயமும் அல்ல.

கடந்த தேர்தலில் பெண் ஒருவரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனந்தி சசிதரனை எங்கள் கட்சி ஊடாக வேட்பாளராக நிறுத்துவதற்கு விரும்பியிருந்தோம்.அது தொடர்பில் அன்று மாவை சேனாதிராஜாவிடம் கூறியபோது அனந்தி சசிதரன் எங்களது கட்சியை சார்ந்தவர், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்துள்ளோம், அவ்வாறான சூழ்நிலையில் உங்களது கட்சி சார்பாக அவரை நிறுத்தமுடியாது என்று கூறியதன் காரணமாக அவரை வேட்பாளராக நிறுத்தும் முடிவை நிறுத்தினோம்.

அவ்வாறு நாங்கள் நாகரிகமாக நடக்கின்றபோது எங்களது கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரை எங்களது ஒப்புதல் இல்லாமல், எந்த பேச்சுவார்த்தையும் செய்யாமல் இணைத்துக்கொண்டது என்பது ஏனைய கட்சிகளை தமிழரசுக்கட்சி சிதைத்து ஒதுக்கும் நடவடிக்கையென்றே நான் கருதுகின்றேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .