Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. இத்தொடரை நடாத்திவரும் பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றது.
மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. 2 ஓட்டங்களுக்கு 27 ஓட்டங்களை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களுடன் தடுமாறியது. அதன் பின்னர், 6ஆவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், 6ஆவது விக்கெட்டின் பின்னர், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மெஹேடி ஹசன் மிராஸ் 60 (74), மொஹமட் சாய்புடின் 36 (55), ஜோய்ராஸ் ஷேக் 35 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கீமோ போல் 3, ஷமர் ஸ்பிறிங்கர் 2, சேமர் கே.ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியான ஆரம்பத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 5 ஓவர்களிலேயே 44 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சமாளித்து ஆடினாலும், 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது. எனினும், மத்திய வரிசை வீரரான ஷமர் ஸ்பிறிங்கரின் சிறப்பான ஆட்டத்தால், அவ்வணி வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் ஷமர் ஸ்பிறிங்கர் ஆட்டமிழக்காமல் 62 (88), ஷிம்ரொன் ஹெட்மையர் 60 (59), கிட்ரோன் போப் 38 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சாலே அஹ்மட் ஷவோன் 3, மொஹமட் சாய்புடின் 2, மெஹேடி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஷமர் ஸ்பிறிங்கர் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .