கலாபூஷணம் பூ.ம.செல்லத்துரை காலமானார்
12-02-2016 10:31 AM
Comments - 0       Views - 135

-எஸ்.பாக்கியநாதன்

ஆய்வாளரும் எழுத்தாளரும் விஸ்வகர்மா சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் ஸ்தாபகத் தலைவருமான கலாபூசணம் பூ.ம.செல்லத்துரை தனது 81 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர், தந்தை செல்வா, அமரர் இராசமாணிக்கம் ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக 1955 காலப்பகுதியில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான 'சுதந்திரன்' மற்றும் கட்சியின் பிரசாரத்துக்காக வெளியிடப்பட்ட 'தாயகம்' இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்து தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தினார்.

தமிழ் நாட்டில் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி 1963 காலப் பகுதியில் பெரியபோரதீவில் பகுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்து பின்பு, அந்த இயக்கத்தை பட்டிருப்புத் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் கிளையாக மாற்றினார்.

தனது சமூகத்துக்கும்  மற்றும் தமிழ் பேசும் மக்களின் முன்னேற்றத்துக்கும் உழைத்தார். மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளுக்கு பத்தி எழுத்தாளராகவும் இவர்  பணிபுரிந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் பெரியபோரதீவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) மாலை 4.00 மணிக்கு நடைபெற்று பொறுகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

"கலாபூஷணம் பூ.ம.செல்லத்துரை காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty