2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?

Thipaan   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது.

கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெற்றிகளாக அமைந்துள்ளன.

ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும், முற்றிலும் மாறான போட்டியாளர்களையோ கொண்டுள்ளன. ஜனநாயகக் கட்சியில் போட்டியிலிருக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் பேர்ணி சான்டர்ஸுக்குமிடையில் பல்வேறான வேறுபாடுகள் காணப்பட்டாலும், அனேகமான விடயங்களில், கருத்தொற்றுமை காணப்படுகிறது. இருவருமே, பொருளாதாரம் தொடர்பில் ஓரளவு ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள், போர் தொடர்பில் ஓரளவு ஒருமித்த கருத்து, சமபாலுறவாளர்கள் குறித்த ஒருமித்த கருத்து, மதத்தையும் அரசையும் பிரிப்பது தொடர்பில் ஒருமித்த ஒருத்து என, இவர்களிருவரும் காணப்படுகிறார்கள்.

இருந்த போதிலும், இருவருக்குமிடையிலான வேறுபாடுகள், நுணுக்கமாகப் பார்க்கும் போது, மிக அதிகமானவையாகவே தோன்றுகின்றன. ஹிலாரி கிளின்டன், முன்னாள் ஜனாதிபதியொருவரின் மனைவி. இதற்கு முன்னர், நாட்டின் இராஜாங்கச் செயலாளராக இருந்தவர்கள். நிர்வாக நுணுக்கங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவர் என்று எண்ணப்படுபவர். மறுபுறத்தில் பேர்ணி சான்டர்ஸோ,

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் கூட கிடையாது. அமெரிக்க வரலாற்றில், சுயாதீனமான செனட் உறுப்பினராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற சாதனையைக் கொண்ட அவர், வழக்கமான அரசியல்ரீதியான நிர்வாக விடயங்களில், இதுவரை அனுபவத்தைக் கொண்டிராத ஒருவர். அத்தோடு, ஜனநாயகச் சமதர்மவாதி (democratic socialist) என்ற அடையாளத்துடன் களமிறங்கியுள்ள சான்டர்ஸ், தொழிற்றுறை நிறுவனங்களுக்குச் சாதகமானவர் என்ற விம்பத்தைக் கொண்டுள்ள ஹிலாரிக்கு, எதிரானவர். இருந்த போதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள், கல்லூரிகளின் கட்டணம் போன்றவற்றில், இருவரின் பொருளாதாரத் கொள்கைகளும் ஒரே போக்கையே வெளிப்படுத்துகின்றன.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களிடையே, பாரிய கருத்து மோதல் ஏற்படுவதுண்டு. மற்றையவரின் தனிப்பட்ட திறன்கள் தொடர்பான கருத்து மோதல்கள் ஏற்படுவதோடு, பாரிய பல்வகைமையுள்ள கருத்துகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால், ஒரு வகையில், போர், பொருளாதாரம், சிறுபான்மையினரின் உரிமைகள் போன்றவற்றில், அனேகமானோர், ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

குடியரசுக் கட்சியில், நியூ ஹம்ப்ஷையரில் வெற்றிபெற்றுள்ளதோடு, தேசிய ரீதியிலும் கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் காணப்படும் டொனால்ட் ட்ரம்ப், நேரடி அரசியல் அனுபவத்தைக் கொண்டவரல்லர். மாபெரும் தொழிலதிபரான அவர், அரசியல்வாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டவரென்ற போதிலும், தேர்தல் களத்தில் முதன்முறையாகக் களமிறங்கியிருக்கிறார்.

அவரை விடப் பின்தங்கியிருப்பவர்களில் ஜெப் புஷ் முக்கியமானவர். இரண்டு ஜனாதிபதிகளை நாட்டுக்கு வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அவர், இம்முறை ஆதரவைப் பெறுவதற்கு, அதிக சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். தேசிய ரீதியில் ஓரளவு சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிவரும் டெட் குரூஸ், மார்க்கோ ரூபியோ, கிறிஸ் கிறிஸ்டி போன்றோர், அரசியல் அனுபவம் மிக்கவர்கள்.

ஐயோவாவில் இடம்பெற்ற பிரதிநிதிகள் வாக்கெடுப்பில், ஹிலாரி கிளின்டன் வெற்றிபெற்ற போதிலும், சில தசம சதவீதத்தின் அடிப்படையிலேயே பேர்ணி சான்டர்ஸ் தோல்வியடைய, அத்தேர்தலில் அதிகளவு அடைவைப் பெற்றவராக, பேர்ணி சான்டர்ஸே, அரசியல் நிபுணர்களால் அறிவிப்பட்டார். தற்போது, நியூ ஹம்ப்ஷையரில் பெற்றுள்ள வெற்றி, அவரது முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

தேசிய ரீதியில், ஹிலாரி கிளின்டனே இன்னமும் முன்னணியில் இருக்கின்ற போதிலும், ஐயோவில் அவர் வழங்கிய சிறப்பான போட்டி, நியூ ஹம்ப்ஷையரில் அவரது வெற்றி ஆகியன, ஹிலாரிக்கான ஆபத்து மணிகளை ஒலித்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.

மறுபுறத்தில், ஐயோவாவில் தோல்வியடைந்த ட்ரம்ப், கடுமையான பின்னடைவைச் சந்திப்பார் என, சிலர் கருதினர். ஆனால், குடியரசுக் கட்சியின் ஐயோவா வாக்கெடுப்பு, உண்மையான தேசிய மட்ட ஆதரவை, எப்போதும் வெளிப்படுத்தியது கிடையாது. அங்குள்ள பெரும்பாலான வாக்குகள், கிறிஸ்தவ மதத்தை ஆழமாகப் பின்பற்றும் வாக்குகளாகவே காணப்படுகின்றன. 2012ஆம், 2008ஆம் ஆண்டுகளில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மிற் றொம்னி, அவ்வாக்கெடுப்புகளில் தோல்வியடைந்திருந்தார். அதேபோல் தான், கிறிஸ்தவர்களிடத்தே அதிகமான வரவேற்பைக் கொண்ட டெட் குரூஸ், இம்முறை வெற்றிபெற்றார். ஆனால், நியூ ஹம்ப்ஷையரில் ட்ரம்ப் பெற்ற வெற்றி, அவரது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்தத் தேர்தல், அரசியல் நிறுவனத்துவத்துக்கு எதிரானவர்களின் (யவெi-நளவயடிடiளாஅநவெ) தேர்தல் களமாக மாறியுள்ளது என்பது தான் உண்மை.

சான்டர்ஸுக்கும் ட்ரம்புக்குமிடையிலான வித்தியாசங்கள் அளப்பரியன. இனவாத, மதவாத, கீழ்த்தரமான, பொய்கள் நிரம்பிய அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்துவரும் டொனால்ட் ட்ரம்ப்பை, தனது எதிராளியின் மாபெரும் பலவீனத்தை (மின்னஞ்சல் விவகாரம்) அவருக்கெதிராகப் பயன்படுத்தாமல், 'அமெரிக்க மக்கள், கொள்கைகளைப் பற்றிய விவாதத்தையே விரும்புகிறார்கள்' என, கனவான்தனத்துடன் தெரிவிக்கும் சான்டர்ஸுடன் ஒப்பிட முடியாது. ஆனால், குதிரைலாடத் தத்துவம் (horseshoe theory) இங்கே பொருந்துகிறது என்பதை, மறுக்க முடியாது.

குதிரைலாடம் எவ்வாறு வளைந்து, இரு முனைகளும் அருகருகே காணப்படுகின்றதோடு, அதேபோல், அரசியல் கொள்கைகளில் இரு எதிரெதிர் கொள்கைகள், உண்மையில் அருகருகே காணப்படுமென்பது தான், குதிரைலாடத் தத்துவமாகும்.

மேலே சொல்லப்பட்டது போன்று, பேர்ணி சான்டர்ஸுக்கும் டொனால்ட் ட்ரம்புக்குமிடையிலான வித்தியாசமென்பது ஒப்பிட முடியாதளவுக்கு இருந்தாலும், இருவருக்குமிடையில் நெருக்கமான ஒற்றுமையுண்டு. இருவருமே - முன்னர் வழங்கப்பட்ட அறிமுகத்தில் சுட்டிக்காட்டியபடி - நிறுவனத்துவ அரசியலுக்கு எதிரானவர்கள். வழக்கமான அரசியலை வெறுத்து, மறுத்து, வெளிப்படையான அரசியலை முன்னெடுக்கிறார்கள். அதில் ஒருவரின் பாதை, இனவாத, மதவாத, பாதையான இருக்கிறது என்பது, வேறான விடயம்.

ஆனால், ட்ரம்பின் இந்தப் பாதையை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் கணிசமானோர் ஆதரிப்பதும், நிறுவனத்துவ அரசியலுக்கெதிரான இயல்பையே காட்டுகிறது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், அரசியல் பொருத்தப்பாடு (political correctness) தேவை என்பதற்காக, பல விடயங்களை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்ல மறுத்திருந்தன.

குறிப்பாக, இஸ்லாமியப் பயங்கரவாதம் எனத் தெரிவிக்கப்படும் விடயத்தில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகப் பார்வை வரக்கூடாது, அவர்கள் மீதான வெறுப்பு உருவாகக் கூடாது என்பதற்காக, 'அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதம்' என்ற சொற்றொடரை, பராக் ஒபாமா உள்ளிட்ட அதிகாரிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். அது, நல்ல நோக்கத்துக்காகச் செய்யப்பட்டாலும், ட்ரம்ப் உள்ளிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் சிலரின் பிரசாரத்தில், 'அச்சொற்றொடரைப் பயன்படுத்தாமை, நேர்மையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது' என்பது முக்கியமானதாகக் காணப்படுகிறது.

அதேபோல் சான்டர்ஸ், பாரிய நிதி நிறுவனங்களுக்கெதிரான வெளிப்படையான பிரசாரத்தை முன்னெடுத்துவருவதோடு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். வழக்கமான வேட்பாளர்கள், தங்களது பிரசாரத்துக்கான நன்கொடைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பாரிய நிதி நிறுவனங்களை அதிகளவில் விமர்சிப்பது கிடையாது.

ஆனால், அந்நிறுவனங்களை விமர்சித்து, அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றதன் காரணமாக, ஹிலாரி கிளின்டனை விட அதிகமான பணத்தை, அண்மைக்காலமாக சான்டர்ஸ் நன்கொடையாகப் பெற்று வருகிறார். எவ்வாறு? சிறிய சிறிய நன்கொடைகளாக அதிக நன்கொடைகள் மூலம்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகுவது ஓரளவு உறுதியாகியுள்ளது. டெட் குரூஸால் சிறிய சவாலை வழங்க முடியுமென்றாலும், அவரால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

மறுபுறத்தில் ஜனநாயகக் கட்சியில், ஹிலாரி கிளின்டனுக்கே இன்னமும் அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால், சான்டர்ஸின் உயர்ச்சி, ஹிலாரி கிளின்டனுக்குப் பாரிய தலையிடியை வழங்கியிருக்கிறது. இறுதியில் ஹிலாரி வென்றாலும் கூட, நிறுவனத்துவ அரசியலுக்கெதிரான களத்தை உருவாக்கிய தேர்தலாக, இத்தேர்தல் அமையுமென்பது தான் யதார்த்தமானது. ஏனென்றால், சான்டர்ஸ் ஏற்படுத்தியிருக்கும் அலை அவ்வாறானது.

அதை, இணையத்தளமொன்றின் கருத்துப் பகுதியில், பெண்ணொருவர் பகிர்ந்த கருத்தின் மூலம், வெளிப்படுத்தலாம். 'அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் வரலாற்றுச் சந்தர்ப்பமொன்று இங்கே காணப்படுகிறது. நானோ, வயது முதிர்ந்த, யூதக் கிழவரொருவர் தெரிவாக வேண்டுமெனப் பிரார்த்திக் கொண்டிருக்கிறேன். அவ்வாறிருக்கிறது சான்டர்ஸ் மீதான ஆதரவு'.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X